கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம...
நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில், ``கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் டிசம்பர் 12 வரை மும்பை காவல்துறை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு, என் ஆதார் எண் பல்வேறு குற்ற நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரித்தனர். மேலும், அப்போதே என்னை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், வீட்டை சோதனையிட வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் நான் பயந்துவிட்டேன்.

இந்த வழக்கிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தொகை கொடுக்க வேண்டும் என மிரட்டினார்கள். அதனால், சிறுக சிறுக என்னிடமிருந்து பணம் பறித்தார்கள். மொத்தம் ரூ.40 லட்சம் பறித்துக்கொண்டார்கள். இதை வெளியே கூறினால், என் கணவர், பிள்ளைகளையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்துவேன் என மிரட்டினார்கள்" எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறை, பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்தபோது அவை மேற்கு டெல்லியில் உள்ள 'பிருந்தாகார்ட் ஸ்கைலைன் ஷாப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கணக்கிற்குச் சென்றதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்த அனிஷ் சிங் மற்றும் மணி சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மிரட்டிப் பறிக்கப்படும் பணத்தைத் திசைதிருப்புவதற்காகப் பல்வேறு வங்கிகளில், போலி நிறுவனத்தின் பெயரில் எட்டு போலி கணக்குகளைத் திறந்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சைபர் கிரைம் காவல்துறை, ``கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 190 இணையவழி மோசடிப் புகார்களுடன் தொடர்புடையவர்கள். இவர்களது வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டப் பெண்ணை சுமார் மூன்று மாதங்கள் ‘டிஜிட்டல் கண்காணிப்பில்’ (வீடியோ அழைப்பிலேயே) வைத்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பயமுறுத்துவதற்காக, வீடியோ அழைப்பின் மூலம் போலியான எஃப்.ஐ.ஆர் (FIR) மற்றும் கைது வாரண்டுகளை காட்டியுள்ளனர். ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்குப் பிறகும், அதன் ஆதாரங்களை அழித்துவிடுமாறும் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர்.
எனவே, காவல்துறை அதிகாரிகள் என்று கூறி யாராவது வீடியோ அழைப்பில் மிரட்டினாலோ அல்லது ஆன்லைனில் 'டிஜிட்டல் கைது' செய்வதாகச் சொன்னாலோ பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காவல்துறை ஒருபோதும் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் விசாரணை செய்யாது. இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டனர்.

















