செய்திகள் :

கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! - விடிவு எப்போது?

post image
`இந்தியா ஒரு சுதந்தி நாடு'... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மிஞ்சும்.

கொத்தடிமை முறை எனும் கொடுங்கோன்மை!

ஆங்கிலேயர்கள் அடக்குமுறை தொடங்கி பண்ணையார் முறை வரை சந்தித்து... சகித்து... மூச்சுத்திணறிக் கொண்டிருந்திருக்கிறது இந்தச் சமூகம். இந்த அடிமை அடாவடித்தனங்களின் மிச்ச சொச்சமாய், இன்னமும் பொருளாதார ஏழ்மை நிலையை வைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது `கொத்தடிமை முறை' எனும் அரக்கன். நொடிக்கு நொடி கோடிகளில் புழங்கும் பணக்காரர்கள் பெருகி வரும் இதே டிஜிட்டல் இந்தியாதான், என்றோ கடனுக்கு வாங்கிய சிறு தொகைக்கு அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும் அடிமைத்தனத்தின் அடையாளமாய் இன்னல்படும் ஏழை வர்க்கத்துக்கும் தாய்மடி!

மூன்று வேளை முறையான உணவு, உடுத்த மாற்றுத்துணி, மருத்துவம், கல்வி என அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டு, இயலாமையில் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை இன்றும் நீடிப்பது, பெரும் சோகம். இந்தக் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டுகள் இதெல்லாம் கிடையாது. அவர்களின் அடையாளம் `அடிமைகள்' - அவ்வளவுதான்.

24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை; விடுமுறை என்பதற்கு அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மீறிப் பேசினால் அடி, உதை... அதிக பணி. சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், இன்றும் அரசு இயந்திரத்தின் கண்களுக்குப் புலப்படாமல்(?) எங்கோ தீப்பெட்டி தொழிற்சாலையிலோ, சூளையிலோ, ஆலையிலோ மக்கள் கூட்டம் சிக்குண்டு, அலறிக்கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்குக் கணக்கு என்பதே இல்லாமல், பண முதலைகளுக்கு உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலக்குரல்... யாருக்கும் கேட்பதே இல்லை!

கொத்தடிமை முறை இங்கே எந்த அளவுக்கு சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு சில தரவுகள் நியாயம் சேர்க்கின்றன. 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனது ஆய்வறிக்கையில் `தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருந்திருப்பார்கள்.... இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள்.

தனிச்சட்டம்

பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன.

இதற்காக கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 9 பிப்ரவரி 1976-ல் ஒரு தனி சட்டமே இயற்றப்பட்டு `மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம்' என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் கொத்தடிமை முறை தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. இதற்கு அரசுகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.

இந்தியாவில் 1978-லிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

கொத்தடிமை முறை

கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக ஒழிக்க முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் தேவை!

இந்தக் கொத்தடிமைத் தனத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து, கொத்தடிமைத்தனம் குறித்த வழக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் நம்மிடம் பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் பேராசையும், காலத்திற்கேற்ப கொத்தடிமைத்தனம் புதிய புதிய வடிவங்களில் மாறி வருவதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சங்கிலியால் கட்டி வேலை வாங்கிய நிலை இருந்தால், இப்போது அது “உழைப்புச் சுரண்டல்” மற்றும் “மனித வணிகம்” போன்ற நவீன வடிவங்களில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்துள்ளனர். அரசாங்கம் மறுவாழ்வு வசதிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட செயல்படுத்தும் தரப்பினருக்கு இந்த பிரச்னை குறித்து கூடுதல் புரிதலும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

பெரிய சவால்!

பழங்குடியின மக்கள் மற்றும் நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைத்தனத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமைதான். ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலையை சிலர் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சுரண்டுகின்றனர். கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு உடனடி மறுவாழ்வு அளிப்பது அரசாங்கத்திற்கு பெரிய சவாலாகவே உள்ளது. மீட்கப்படும் தொழிலாளர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், முழுமையாக மீள ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் என நீண்ட காலம் தேவைப்படுகிறது. தற்போது அரசாங்கம் நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்கினாலும், ஒருவரை நீண்ட காலம் தொடர்ந்து கவனித்து மீளமைக்கும் அமைப்பு இன்னும் போதுமான அளவில் உருவாகவில்லை.

இந்த நோக்கில் மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளன. இது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

கொத்தடிமை முறை

குறைந்தபட்ச தண்டனை - சட்டத்தில் இருக்கும் குறை!

சட்டம் இருந்தும் கொத்தடிமை நடைமுறை தொடருவதற்கு, குறைந்த தண்டனை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுவதால், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படுவதில்லை. இதனை மனித வணிகக் குற்றமாகக் கருதி, சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய சூழலில் பழங்குடியினர்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறைந்த ஊதியம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் மீறல் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை கொத்தடிமை, மனித வணிகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை என்ற ஒருங்கிணைந்த பார்வையில் அணுகினால் மட்டுமே இதைத் திறம்படத் தடுக்க முடியும். கொத்தடிமை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிக இடையூறு இருந்தாலும், அவை விரைவில் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இலக்கு 2030-க்குள் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்றுவதாகும்" என்றார், விரிவாக.

திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நளினி தேவி பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கொத்தடிமை முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் குறிப்பாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். கொத்தடிமை முறை சட்டப்படி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற உண்மை, செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பலருக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை.

மேலும், கொத்தடிமை பிரச்னை ஒரு தொழிலாளர் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவது தவறான பார்வையாகும். இது ஒரு தீவிரமான மனித உரிமை மீறல் என்ற புரிதல் சமூகத்திலும், அதிகாரிகளிடமும் வலுப்பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஊதிய சட்டம் குறித்து தொழிலாளர்களுக்கே தெளிவான அறிவு இல்லாத நிலை, அவர்களை மேலும் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. முன்பணம் அல்லது கடன் வழங்கி, அந்தக் கடன் தீரும் வரை குறைந்த ஊதியத்தில் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதே இன்றைய கொத்தடிமைத்தனத்தின் அடிப்படை வடிவமாக உள்ளது.

அதிகம் பாதிக்கப்படும் பழங்குடிகள்!

இந்த முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களே. கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவு காரணமாக அவர்கள் வெளிச்சமான வேலை வாய்ப்புகளைத் தேடி செல்ல முடியாத சூழலில் சிக்குகின்றனர். வறுமைதான் அவர்களை இந்த கொத்தடிமைச் சூழலுக்கு தள்ளும் முக்கிய காரணமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில்—குறிப்பாக விழுப்புரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில்—இந்தப் பாதிப்புகள் அதிகமாக பதிவாகின்றன. இம்மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்ய இடம்பெயர்வதும், அந்தப் பகுதிகளில் இத்தகைய தொழில்கள் அதிகமாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில், வட மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். புரோக்கர்கள் மூலம் குறைந்த தொகைக்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, மொழிப் பிரச்னையால் தங்களின் நிலையை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.

கொத்தடிமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாக கிடைக்காததே இந்தக் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. முறையான விசாரணை நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் சூழல் உருவானால், இது போன்ற செயல்கள் தவிர்க்கப்படும்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ்

மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. மீட்பு நடவடிக்கையின் போதே ஒருவருக்கு ரூ.35,000 வழங்கப்படுவதுடன், ‘ரிலீஸ் சான்றிதழ்’ வழங்கப்படுகிறது. வழக்கு முடிந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த பின்னர், இறுதி இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகள் தொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க உதவும் வகையில் அமைந்துள்ளன.

கொத்தடிமை தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் இருப்பின், பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க, சட்ட அமலாக்கத்துடன் சேர்ந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரசு துறைகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே கொத்தடிமை முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்" என்றார்.

கொத்தடிமை முறை எவ்வளவு கொடூரமானது என நினைக்கும்போதே மனம் பதறுகிறதல்லவா! அப்படி கொத்தடிமைத்தனத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு, வாழ்வில் 20 ஆண்டுகளைத் தொலைத்த பெண் ஒருவர் தன் கண்ணீர்க் கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

பிரசவ வலி... ஆஸ்பத்திரிக்குக்கூட போக விடல!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கன்னிகாபுரம் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார் வரலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், வரலட்சுமி திருவள்ளூரில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் தன் கணவர் கோபால் மற்றும் மகள் ரேகாவோடு கொத்தடிமையாக இருந்து வந்தார்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி தன்னுடைய கடந்தகால அனுபவங்கள் குறித்தும், லட்சிய போராட்டம் குறித்தும் நம்மிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

``என் கணவர் திருவள்ளூரில் இருக்குற அரிசி ஆலையில குறைந்த கூலிக்கு வேலை பார்த்துட்டிருந்தார். எங்க கல்யாணத்துக்காக என் கணவர் மில் முதலாளி கிட்ட 5,000 ரூபாய் கடனாக வாங்குனாராம். வாங்குன கடன் அடைக்காததால கல்யாணமான சில மாசத்துலயே அவங்க என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி என்னையும் ஆலை'ல வேலைக்கு வர சொல்லி மிரட்டினாங்க. வேற வழி தெரியாம நாங்க இரண்டு பேரும் அங்க தங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சோம்.

நானும் என் வீட்டுக்காரர்கூட சேர்ந்து இராப்பகலா உழைச்சேன். கல்யாணம் நடந்து முடிஞ்சு அரிசி ஆலைக்கு வேலைக்குப் போனதோட சரி. அதுக்கு அப்புறமா எங்க அப்பா, அம்மானு யாரையுமே என்னால பார்க்க முடியல. நான், எங்க வீட்டுக்காரர் சேர்ந்து ஒரு நாளைக்கு 60, 70 மூட்டை நெல் பதப்படுத்தி அடுக்கி வெப்போம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான ரேஷன் அரிசிய முதலாளி வாங்கிக் கொடுத்துருவாரு. அதுக்கு 500 ரூவாய் கணக்கு செஞ்சு தினமும் எங்க சம்பளத்துல இருந்து 25 ரூபா பிடிச்சிப்பாங்க.

வரலட்சுமி - அவர் கணவர்

ஒரு நாளைக்கு நாங்க 70 மூட்டை நெல் அடுக்குனா எங்களுக்கு மொத்தத்துல 300 ரூபா கிடைக்கும். அவங்க கொடுக்குற அந்த 300 ரூபாயும் காய்கறி வாங்குறது... மத்த செலவுனு போய்டும். சொந்த பந்தம்னு ஊர்ல இருக்குறவங்க யாரையும் பார்க்க முடியாது, வேலை செய்யும்போது உடம்பு சரியில்லைன்னாகூட ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. அப்படியே வேல செஞ்சுட்டேதான் இருப்போம். இப்போ எனக்கு ஒரு பொம்பள பிள்ளை இருக்காங்க. அவளும் அந்த மில்லுலதான் பொறந்தா. என் பொண்ணு வயித்துல இருக்கும்போது எந்த செக்கிங்கிக்கும் நா ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை. ஒரு நாள் எனக்கு பிரசவ வலி வந்தப்ப மில் முதலாளி என்னை ஆஸ்பத்திரிக்கு போகக்கூட விடல, குழந்தை இங்கயே பொறக்கட்டும்னு சொல்லிட்டு போயிட்டாரு. நா இயற்கை உபாதைக்காக காட்டு பக்கமா யாருக்கும் தெரியாம நடந்தே வந்து ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன். அங்கதான் எங்க பொண்ணு பொறந்தா, என் வீட்டுக்காரர் என்னை வந்து பாத்துட்டு போனதோட சரி... அந்த வாரமே நா திரும்ப மில்லுக்கே போய்டேன். அந்த நிலைமையிலும் நான் வேலை செஞ்சேன், குழந்தைக்குப் பால்கூட கொடுக்க முடியாது. ரொம்ப கொடுமை படுத்துவாங்க. 70 மூட்டை நெல்லுக்குக் கொறஞ்சா பொம்பளைன்னுகூட பாக்காம என்ன பயங்கரமா திட்டுவாங்க, அடிப்பங்க.

இதுக்கு மேல எதுக்கு உயிர் வாழணும், செத்துடலாம்னுகூட நானும் என் கணவரும் நெனச்சிருக்கோம். ஆனா, எங்க பிள்ளைக்காகத்தான் இப்ப வரைக்கும் உயிரோட வாழ்ந்துட்டு இருக்குறோம்.

என்னுடைய பொண்ணு ஆறு வயசு வரைக்கும் அங்கேதான் வளந்தா. நாம படிக்காத காரணத்தால்தான் இங்க அடிமைப்பட்டு கிடக்கிறோம், நம்ம பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாம என் மகள கூட்டிட்டு வந்து காஞ்சிபுரத்துல இருக்கிற ஒரு ஆசிரமத்தில சேர்த்து விட்டுட்டேன். நான் அங்க சேர்த்துட்டு வந்ததுதான் தெரியும். அதுக்கப்புறம் என் மகள நான் பார்க்கக்கூட இல்லை. சேர்த்துட்டு வந்த ஒரு வாரம் என்னையும் என் கணவரையும் திட்டிட்டே இருந்தாங்க.

`நீயும் வந்து வேலை பாரு...'

என் மகள் எட்டாவது முடிச்சதுக்கப்புறமாதான் என்ன அடிக்கடி பாக்க வந்தா, அவ பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிக்க...அதுக்கு மேல என்னால படிக்க வைக்க முடியல. அதுனால அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சோம். ஆனா இதுல கொடுமை என்னன்னா... அவளோட கல்யாணத்துக்குக் கூட எங்களால போக முடியலை. கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மகளும், அவளோட கணவரும் என்னைய பாக்க வந்திருந்தாங்க. அப்பா மில் முதலாளி, `நீயும் வந்து கொஞ்ச நாள் வேலை பாக்கணும். அப்பதான் உங்க அப்பா, அம்மாவை மீட்க முடியும்'னு சொன்னாரு. அதை நம்பி என்னோட மகளும் எங்ககூட வேலைக்கு வந்தா, அவளும் எங்களோட சேர்ந்து ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா. அப்புறம் ஒரு நாள் தொண்டு நிறுவனம் மூலமா அரசு அதிகாரிகளுக்கு எங்கள பத்தி தெரிஞ்சிச்சு. அவங்க வந்துதான் எங்கள அந்த மில்லுல இருந்து மீட்டாங்க.

ஆனா, அங்கிருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வெளி உலகம் ரொம்பவும் வித்தியாசமா இருந்துச்சு. எங்களுக்குத் தங்க வீடு, செய்ய வேலைனு எதுவுமே இல்லாம எங்க குடும்பம் நடுத்தெருவுல நிர்கதியா நின்னுச்சு. வோட்டர் ஐ.டி, ரேஷன் கார்டுனு எதுவுமே இல்லாம தவிச்சிட்டு இருந்தோம். அப்போ எங்கள மீட்க உதவி செஞ்ச அந்தத் தொண்டு நிறுவனம் மூலமாதான் எங்களுக்கு எல்லா அடிப்படை உதவிகளுக்கும் கெடச்சது. பொருளாதார ரீதியா அதுல இருந்து எழுந்து வர சில வருஷம் ஆச்சு.

அதுக்கு அப்புறமாதான் நான், எங்களை மாதிரி கொத்தடிமைகளா சிக்கி தவிச்சிட்டு இருக்குற தொழிலாளர்கள எல்லாம் மீட்கணும்னு முடிவு பண்ணி, அதுக்கான முயற்சிகள்ல இறங்குனேன். அதுக்கு என் கணவர் ஆதரவா இருந்தாரு.

அரசு அதிகாரிகளை எப்படி அணுகுறது, எந்தப் பிரச்னைக்கு யாருகிட்ட போகணும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். கொத்தடிமையா இருந்த எனக்கு, திருவள்ளூர் மாவட்டத்துல எங்கெல்லாம் இது மாதிரி ஜனங்க இருக்காங்கன்னு தெரியும். அரசு அதிகாரிகளை சந்திச்சு புகார் அளிச்சு அவங்க மூலமா நிறைய பேர வெவ்வேறு இடங்கள்ல இருந்து மீட்டதுல என் முயற்சிகளும் நிறைய அடங்கியிருக்கு.

தமிழ்நாடு முழுக்க எங்களை மாதிரி கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவங்க எல்லாரும் ஒன்றாக இணைந்து `விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம்' ஆரம்பிச்சோம். இப்போ இந்த சங்கத்துக்கும் நான் தலைவரா இருக்கேன். எங்க சங்கத்தின் மூலமா மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் மீட்கப்பட்டிருக்காங்க.

அவங்களுக்கு சங்கத்தோட சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமா தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சின்னு தொழில்களைக் கற்றுக் கொடுத்துட்டு வர்றோம்.

வரலட்சுமி - அவர் மகள்

நெறைய பேரு வெளியில வந்து சொந்தமா தொழில் செஞ்சுட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறாங்க. அத பாக்கும்போது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கும். ஏதோ நிறைய பேரை அந்த இருள் சூழ்ந்த உலகத்துல இருந்து வெளியில கொண்டு வந்துருக்கேன். கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொருத்தரும் என்ன மாதிரியே முயற்சி செஞ்சா, தமிழ்நாட்டுல கொத்தடிமை முறைய முழுமையா ஒழிச்சிடலாம். அந்த நம்பிக்கையிலதான் நானும் போராடிட்டு இருக்கேன்.

அங்கிருந்து வெளிய வந்து என்னோட மூன்று பேர பசங்க எல்லாரையும் நல்லா படிக்க வெக்குறேன். இப்போ சுயமா தையல் தொழில் செஞ்சு சம்பாதிக்குறோம். என் பெரிய பேத்தி டிகிரி முடிக்கப் போறாங்க, ரெண்டு பேர பசங்க ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க. போதிய விழிப்புணர்வு இல்லாததாலதான் இன்னும்கூட நெறைய பேரு செங்கல் சூளையிலும், அரிசி ஆலையிலயும் கொத்தடிமைகளா இருக்காங்க. என்றாலும், அரசாங்கம் இந்த விசயத்துல இப்ப சிறப்பா செயல்பட்டு வருது.

என்ன மாதிரி கொத்தடிமையா இருந்து மீண்டவங்களுக்கு நான் சொல்லுறது என்னன்னா... உங்களுக்காக நம்ம அரசாங்கமும் ஏராளமான நல்ல மனசு படைச்சவங்களும் இருக்காங்க. நம்ம இந்த துயரத்துல இருந்து மீண்டு வந்துடலாம்னு மன உறுதி இருந்தாலே போதும். நம்ம எப்படியாவது மீண்டு வந்துடலாம். அதுக்கு நான் ஒரு சின்ன உதாரணம்!" என்றார் நம்பிக்கையோடு.

வரலட்சுமி வாழ்கையப்போல லட்சக்கணக்கானவர்கள் ஏதோ ஒரு முதலாளியின் லாபத்துக்காக தங்களது வாழ்க்கையை கொத்தடிமைகளாக இருந்து கழித்து வருகின்றனர். அவர்களுக்கான விடுதலை என்பது எப்போது?!

'திமுக கூட்டணியில் ராமதாஸ்?' - செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!

தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது. தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டண... மேலும் பார்க்க

TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு 'பின்னர்' ஒத்திவைப்பு - காரணம் என்ன?

இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது.ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.அதாவது, அந்தத் ... மேலும் பார்க்க

சென்னையில் பறவைக்காய்ச்சல்: `பீதியடைய வேண்டாம்; விழிப்புணவு அவசியம்..!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின... மேலும் பார்க்க

இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?

இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்ற... மேலும் பார்க்க

இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!

சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்... இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போ... மேலும் பார்க்க

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தே... மேலும் பார்க்க