நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றி...
மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
2002 டிசம்பரில், எம்சிஏ ப்ராஜெக்ட் ட்ரைனிங்கிற்காக அடையார் மத்திய கைலாஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது தொடங்கியது என்னுடைய சென்னை நாட்கள். அந்த நவம்பர் மாதம் தான் கோயம்பேடு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருந்தது.
வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளேயும் மிக பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளுடனும் மின்னியது. “பஸ் ஸ்டேண்டே படத்துல பார்க்கிற ஏர்போர்ட் மாதிரி பளபள னு இருக்கே” னு தோணுச்சு.
அப்பாவுடன் வந்து விவரங்கள் கேட்டு, சேருவதற்கான நடைமுறைகளை முடித்தப்பின், திங்கட்கிழமையிலிருந்து வரசொல்லியதும், காஞ்சிபுரத்தில் சித்தப்பாவிடம் விட்டுட்டு அப்பா ஊருக்கு போய்ட்டாங்க. முதல் நாள் அடையார் டெப்போ பக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு, பேருந்தில் ஏறி “மத்திய கைலாஷ்” நிறுத்தத்தில் இறங்கி கம்பெனியில் விட்டுட்டு “சாயந்திரம் வந்து அழைத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிட்டு போனாங்க.

சாயந்திரம் அவங்க வர லேட் ஆனதுனால “சரி நாமளே ஹாஸ்டல் போவோம்” அப்படின்னு பேக் ஒன்னு மாட்டிகிட்டு கம்பெனி ல இருந்து அடையார் டெப்போ பக்கத்துல உள்ள விடுதிக்கு பஸ் ரூட்லயே வழி முழுவதும் ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தே சென்றதில் தொடங்கியது சென்னையில் என் நடை பயணம். விடுதிக்கு போனா எங்க சித்தப்பா பதட்டத்துடன் வாசலில் காத்திருந்தார்கள்.
கம்பெனில போய் பாத்துட்டு நேரா விடுதிக்கு(பஸ்ல) வந்து பார்த்தா நான் இல்ல. அப்போ கையில் செல்போனும் கிடையாது. வேலைக்கு சென்று சில மாதங்கள் கழித்து தான் போன் வாங்கினேன். அவ்ளோ ஈஸியா எதுக்கும் பதட்டமடையாத எங்க சித்தப்பாவை பயங்கரமான பதட்டத்தில் ஆழ்த்திய பெருமை என்னையே சேரும். “சித்தப்பா” அப்படின்னு கூப்பிட்டு சிரிச்ச உடன் அவங்க முகத்துல வந்த நிம்மதி கலந்த ஆசுவாச சிரிப்பு இன்னும் என் மனதில் படமாக இருக்கிறது.
கம்பெனியில் இருந்து குறுக்கு வழியில் நடந்தால் விடுதியை இன்னும் சீக்கிரம் அடைந்து விடலாம். ஆனால் அது எனக்கு சரியாக தெரியாததால் பேருந்து தடத்திலேயே காலையில் வரும் போது பார்த்ததை நினைவுப்படுத்தி நடந்து வந்ததால் நேரமாயிடுச்சு சித்தப்பா அப்படின்னு சொன்னவுடன் என் முதுகில் தட்டி சிரிச்சாங்க.
“நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” னு அவங்க சொன்னத கேட்ட பொழுது வருத்தமா இருந்துச்சு. ஆனால் இப்போதும், அடையார் சி. எல். ஆர். ஐ ல இருந்து அடையார் டெப்போ வரைக்கும் அந்த மெயின் ரோடு ஃபுல்லா பஸ் ரூட் ல ஆர்வத்துடன் பரபரப்பான சென்னையின் மாலை வேளையை வேடிக்கை பார்த்துகிட்டே நடந்து போனது இன்னும் மிகப்பசுமையான நீங்காத நினைவுகளில் ஒன்று.
அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் அடையார் நம்ம சொந்த ஊர் போல மனதுக்கு மிகவும் நெருக்கம்.

காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், ஆவின் பூங்காவிற்கு எதிரிலுள்ள பெசன்ட் நகர் ரோடு இங்கெல்லாம் நடந்து போறதே ரொம்ப நல்லாருக்கும். மெயின் ரோட்ல இருந்து அடையாரின் உள்ரோடுகளில், நகரத்தின் பரபரப்பின்றி, நடந்து போவது ஒரு சுக அனுபவம் தான்.
வேலை தேடி சென்னையில் பல இடங்களுக்கு அலைந்திருந்தாலும், விடுதி தேடி, வீடு தேடி அதிகம் அலைந்தது அடையாரில் தான். அதனால் அடையார் எப்பவும் “எங்க ஏரியா”. தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கால சென்னைக்கு தனி அழகுண்டு. ஊரே அமைதியா, ரோடெல்லாம் வெறிச்சோடி எந்த பரபரப்பும் இல்லாம இருக்கும். அப்போ எல்லாம், டிராபிக் இல்லாத, அமைதியான அதிகாலையில அடையார் பாலத்துக்கு கீழ, மரங்களடர்ந்த பெசன்ட் நகர் ரோட்ல நடக்கிறதெல்லாம், ஆனந்தமா இருக்கும்.
எங்க வீட்ல இருந்து படிக்கவும், வேலைக்கும் முதலில் மெட்ராஸ் வந்தது எங்க சித்தப்பா தான். இன்றுவரை சென்னையில் ஏதேனும் விசாரிக்க, வீடு பார்க்க, முகவரி கேட்க என்று எதுவென்றாலும் எங்கள் உறவுகளில் முதல் அழைப்பு சித்தப்பாக்கு தான். பஸ் ரூட், பஸ் நம்பர் எளிமையான வழிகள் அனைத்தும் அத்துப்படி. அதனால் சித்தப்பாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் எப்போதும் இருக்கும். ஆனாலும் செல்ஃபோன் இல்லாததால் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது.
முதல் வார இறுதிக்கு, காஞ்சிபுரம் சென்று விட்டு ஞாயிறு மாலை கிளம்பி (கூட வருவதாக சொன்ன சித்தப்பாவிடம், “நானே போய்டுவேன் சித்தப்பா. கத்திப்பாரா ல இறங்கி, எம்49 பஸ் பிடிச்சு ஹாஸ்டல் போய்டுவேன்” னு வசனம் பேசிட்டு) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்த போது ஒரு சம்பவமாகிவிட்டது. கத்திப்பாராவில் இறங்கி “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வளைவினை பார்த்தவுடன் அந்த திசையில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஞாயிறு இரவு, போக்குவரத்து, ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கொண்டே இருக்கிறேன். ‘எம்49’ ம் காணோம், பஸ் ஸ்டாப்பும் காணோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் “ஆகா…. இது கிண்டி பஸ் ஸ்டாப் போற வழி இல்ல போலவே…. இவ்வளவு நேரம் நடக்க வேண்டி இருக்காதே….” அப்படின்னு தோணுச்சு. ஜன சந்தடியற்ற அமைதியான இரவு நேரம். கடைகளும் எதுவும் இல்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி “கிண்டி பஸ் ஸ்டாப் போகணும்” அப்படின்னு சொல்லி ஏறி உட்கார்ந்து, வழியைப் பார்த்துக் கொண்டே வந்தால்…. நான் வந்த வழியும் இல்லை. மெயின் ரோடும் இல்லாமல் எங்கேயோ போற மாதிரி இருக்கு. “அச்சச்சோ என்னடா இது” அப்படின்னு “அண்ணா ஏன் மெயின் ரோட்ல போகாம ஏதோ ஒரு வழியில் போறீங்க” ன்னு கேட்டேன். அவர் “இல்லம்மா இப்படியே போனா சீக்கிரம் போயிடலாம்.. இதோ இப்ப வந்துரும் பாருங்க” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு சிரிச்சார். அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் திருப்பி பார்த்தால், கொஞ்சம் தூரத்தில் தெரிஞ்சுச்சு… அந்த “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” போர்டின் பின்புறம்.
“அடக்கடவுளே இந்த போர்டு எல்லாப்பக்கமும் இருக்கும் போல” னு தலையில் தட்டி, சிரித்துக் கொண்டே ‘எம் 49’ பஸ்ஸைப் பிடித்து விடுதியை வந்தடைந்தேன். அறியாத ஊர். இரவு நேரம். வழி மாறி தவித்து நின்றபோது கூட, என்னை அதிகம் கலங்க விடாமல், நம்பிக்கையை கொடுத்து, நல்லெண்ணத்தை என்னுள் விதைத்த அந்த ஆட்டோ அண்ணாவிலிருந்து தொடங்கியது சென்னையில் என் நல் அனுபவங்கள். இதனால் தானோ என்னவோ, துணையில்லாமல், எந்த நேரமென்றாலும் சென்னையில் எங்கும் போக, வர(அது… நடந்து, பஸ், ஆட்டோ எதுவென்றாலும்) அஞ்சியதில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம் னு ஒரு எண்ணம்.
அப்படிதான் ஒருமுறை எங்க பெரிய அப்பா அலுவலக விஷயமாக ஒருவாரம் சென்னை வந்து, மந்தைவெளியில் அரசாங்கம் கொடுத்த இடத்தில் தங்கியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்து வீட்டிலிருந்து ஃபோன் செய்யும் பொழுது அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் சிறு பதட்டம். அதனால் மாலை ஆனதும் ஊரிலிருந்து எங்க அப்பா எனக்கு போன் பண்ணி “அப்பா தங்கி இருக்கிற இடத்துக்கு போய், என்னன்னு பாத்துட்டு போன் பண்ணு” அப்படின்னு சொன்னாங்க.
நான் அலுவலகத்தில் இருந்து மந்தைவெளிக்கு வந்து சேர ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த இடம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. அப்பா சொன்னதை வைத்து ஒரு ஆட்டோ பிடித்து இடத்தைச் சொல்லி போனால், மெயின் ரோடு விட்டு எங்கேயோ உள்ளார போகுது. வழியில் நிறைய தூர இடைவெளியில் பெரிய பெரிய அதிகாரிகளின் வீட்டு நேம் போர்டு இருக்கு. அதெல்லாம் பாத்துக்கிட்டு, இந்த இடத்தை விசாரித்துக் கொண்டே போனேன்.
இன்னும் உள்ள போகணும்னு சொல்லி சொல்லி, ரொம்ப தூரம் போய் அந்த இடத்தின் கடைசியில் இவர்களுக்கான அந்த பயிற்சி நிலையமும், தங்குமிடமும் இருந்தது. இந்த வழியில் ஆள் அரவமற்ற மரங்கள் அடர்ந்த இடங்கள் மிக அதிகம். அங்க போய் இறங்கி ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு உள்ளார போய் அப்பாவைப் பார்த்தபோது 9 மணியை நெருங்கியிருந்தது.
அந்த நேரத்துல அங்க என்னைய பார்த்ததும் அப்பா, “எப்படிப்பா இங்க வந்த இந்த நேரத்துல” அப்படின்னு ஷாக் ஆயிட்டாங்க. “ஆட்டோல தான்பா… கேட்டுட்டே வந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே வந்த வழியை நினைத்து அவங்களுக்கு ஒரு பயம். அப்போதும் அவங்களுக்கு நான் சொன்ன பதில் “ஆட்டோ ல தான்பா வழி கேட்டு கேட்டு வந்தேன் ஒன்னும் பயம் எல்லாம் இல்ல.” வெளில வந்து அந்த அண்ணாவிற்கு மிகுந்த நன்றி சொல்லி என்னை ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க.
ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம்.
என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி, கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க.
வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன்.
ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன்.
இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு.
இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான்.

















