புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- க...
மகனின் கனவுக்கு `உயிர்' தந்த தந்தை; துப்பாக்கி சுடுதலில் வீரர்களை உருவாக்கும் திருச்சி ரைபிள் கிளப்!
ஒரு வினாடி இலக்கு மாறினாலும் வெற்றிக்கானப் பாதை மாறிவிடும். இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக விளங்குவது, காஸ்ட்லியான விளையாட்டாக அறியப்படும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிதான். இந்தப் போட்டியில் பல மாணவர்களை தேசிய அளவிலான வீரர்களாக மாற்றி வருகிறார், திருச்சியைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரரான நல்லதம்பி.
திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள வயர்லெஸ் சாலை, சந்தோஷ் நகரில் அமைந்துள்ளது Born Shooting Academy. 2017-ல் தன்னுடைய மகன் சசிகுமார் பயிற்சி பெறுவதற்காக இதை அமைத்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிறகு இவர், ஒரு விபத்தில் இறந்து போகவே தன்னுடைய மகனின் நினைவாகவும் இந்த விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவும் இந்த இடத்தைப் பயிற்சிக் களமாகத் தயார் செய்கிறார். இவர் ரைபிள் கிளப் தொடங்கிய காலகட்டத்தில் திருச்சியில் ஒரு கிளப் மட்டுமே இருந்தது. தற்போது 5 கிளப்புகள் இயங்கி வருகின்றன. இவரிடம் 40-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மாநில அளவில் பதக்கம் பெற்றவர்கள் (State Medalist). ஆறு மாநிலங்கள் கலந்துகொள்ளும் South Zone-ல் 4 பேரும், தேசிய அளவில் 14 பேரும் பதக்கம் பெற்றுள்ளனர். தற்போது Youth Category-ல் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் குருசபரி என்பவர், இவரிடம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கானப் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கமும், நான்கு பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும் தேர்வாகியுள்ளனர்.
இது குறித்து பயிற்சியாளர் நல்லதம்பி கூறுகையில்,
"என்னுடைய தந்தை துப்பாக்கிப் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். நானும் அடிப்படையில் துப்பாக்கிச் சுடும் வீரர். கடந்த மாதம்கூட சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 50 மீட்டர் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்கள் பெற்றேன். நான் பயிற்சி மேற்கொள்ளும்போது, என் மகன் சசிகுமார் உடன் வருவார்.
இப்படித்தான் அவருக்கு ஆர்வம் வந்தது. என் மகன் பயிற்சி பெறுவதற்காக ஏற்பாடு செய்தேன். அவருக்குப் பிறகு, இதை கிளப்பாகத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்தப் போட்டியானது 10 முதல் 16 வயது வரை Sub Junior Category, 16 முதல் 19 வயது வரை Youth, 19 முதல் 21 வயது வரை Junior, 21 முதல் 45 வயது வரை Senior, 45 முதல் 60 வயது வரை Master, 60 முதல் 70 வயது வரை Senior Master, 70 வயதுக்கு மேல் Super Master எனும் பிரிவுகளாக நடைபெறுகிறது.
இங்கு பயிற்சி பெறுபவர்கள், ஒரு வருடத்தில் State Medal வாங்கும் அளவிற்குத் தயாராகி விடுகின்றனர். அடிப்படையில் இந்த விளையாட்டு செலவு மிகுந்த ஒன்று. துப்பாக்கி வாங்குவது, ஆடை உட்பட உபகரணங்கள் வாங்குவது வரை பல ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை செலவாகிறது.







தேசிய அளவிலான போட்டிக்கு எங்கள் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் பதக்கம் பெறும் சூழல் வரவில்லை. என்னுடைய ஒரே லட்சியம் தேசிய அளவில் பதக்கம் பெற வைப்பதுதான். அதற்குப் பிறகு, இந்திய அணியில் அவர்களுக்கு இடம் கிடைத்துவிடும். அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் விருப்பத்தின் பேரில் பயிற்சியில் இணைகின்றனர். பயிற்சி மேற்கொள்ளும்போது, அடுத்தடுத்த கட்டங்களை எட்டும்போது, எங்கள் கிளப்பில் இருந்து மற்ற கிளப்புகளுக்கும் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறோம். விரைவில் எங்கள் மாணவர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள்" என்கிறார்.




















