நெல்லை: அடர்காட்டுக்குள் பழங்குடியின காணி மக்கள்; நடந்து சென்று சந்தித்த அமைச்சர...
'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?
கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா?' என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதே 'கில்லி' சரத் மீது முதல்வர் கடும் அப்செட் என்கின்றனர் தவெகவின் சீனியர்கள்.

அப்படியிருக்க சமீபத்தில் வெளியாகியிருக்கும் தாம்பரம் மாநகராட்சி ஊழல் அவரை இன்னும் 'Danger Zone' க்கு தள்ளியிருக்கிறது. தவெக அரசின் அமைச்சரவையின் முதல் விக்கெட்டே 'கில்லி' சரத் ஆக கூட இருக்கலாம் என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.
இதுசம்பந்தமாக தவெகவின் சீனியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், 'இந்த அமைச்சரவையில் முதல்வருக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் முதல் சர்ச்சையை கிளப்பியது கில்லி சரத் தான். அவர் கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியதை போன்ற வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது.
திமுகவினர் அமைச்சர் சரத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினர். அப்போதே முதல்வர் டென்ஷனாகிவிட்டார். முதல்வர் தரப்பில் சரத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரும் 'விளையாட்டாக செய்ததை வினை ஆக்குகின்றனர்' என விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் முதல்வரின் கோபம் குறையவில்லை. அவருக்கு நெருக்கமானவர்கள்தன் இப்போதே நடவடிக்கை எடுத்தால் குற்றச்சாட்டை நாமே ஒப்புக்கொண்டதை போல் ஆகிவிடும்.

அமைச்சரவை மாற்றத்தின் போது கூட்டத்தோடு கூட்டமாக நடவடிக்கை எடுக்கலாம் என கூல் ஆக்கினர். இடையில் சரத் பொதுச்செயலாளரை சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிக்க முயன்றார். எனினும் பொதுச்செயலாளரும் சரத்துக்கு பிடிகொடுக்கவில்லை.
'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு அவர்தான் முடிவெடுக்கணும்' என கையை விரித்துவிட்டார். இதன்பிறகுதான் முதல்வரை குளிர்விக்கும் பொருட்டு சட்டமன்றத்தில் அவரைப் பற்றி கவிதையாக பாடி ஸ்கோர் செய்ய முயன்றார். மற்ற உறுப்பினர்கள் தன்னை புகழ்கையில் புன்முறுவலோடு கடந்து போன முதல்வர், சரத் துதிபாடிய அடுத்த நாளே 'யாரையும் என்னைப் பற்றி புகழ்ந்து பேச அனுமதிக்காதீர்கள்' என சபாநாயகருக்கு நோட் போட்டார்.
முதல்வரின் கோபம் இன்னும் குறையவில்லை என்பதற்கு அதுவும் ஒரு சமிக்ஞைதான். இதைத்தொடந்துதான் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தும் மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பு எதிலும் கில்லி சரத்தை தலைமை சேர்க்கவில்லை. ஆனாலும் நாட்போக்கில் அந்த போதைப் பொருள் விவகாரம் அப்படியே கடந்து போய் விடும். மேலும், முதல்வர் முதல் நடவடிக்கையாக ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவரின் மீது கைவைக்கமாட்டார் என சரத் தெம்பாக இருந்தார்.
இந்நிலையில்தான் அறப்போர் இயக்கம் குண்டை தூக்கிப் போட்டது. தாம்பரம் மாநகராட்சியில் நடந்த டெண்டர் ஊழலை அம்பலப்படுத்தியது. விவகாரம் உண்மையென தெரிந்தவுடன் முதல்வர் அலுவலகம் உடனடியாக மாநகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டது.

முதல்வர் அலுவலகத்தின் வேகமான நடவடிக்கையை கண்டு உளவுத்துறையும் உஷாராகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு சம்பந்தப்பட்டவர்களின் கைங்கரியம் இருக்கிறதா என விசாரிக்க தொடங்கியிருக்கிறது. முதல்வர் லண்டனிலிருந்து வந்தவுடன் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் சம்பந்தமான முதல்வரின் டேபிளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
'தப்பு பண்றவங்க யார் இருந்தாலும் தூக்கி எறிஞ்சிடுவேன். ஜாக்கிரதையா இருங்க!' என அமைச்சரவை கூட்டத்திலேயே முதல்வர் எச்சரித்திருக்கிறார். அதன்பிறகும், முதல்வரின் துறையிலேயே கை வைத்திருக்கின்றனர். இதை அத்தனை எளிதாக முதல்வர் கடந்துவிடமாட்டார். உளவுத்துறை முதல்வருக்கு கொடுக்கப்போகும் நோட்டில்தான் கில்லி சரத்தின் எதிர்காலம் இருக்கிறது' என்கின்றனர்.
'முதல்வர் கில்லி சரத் விவகாரத்தை சீரியஸாக அணுகினாலும் இடைத்தேர்தல் முடிவதற்கு முன்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார் என்கின்றனர்' தவெகவின் வியூகப் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்கள். மேலும் பேசியவர்கள், 'இடைத்தேர்தலுக்கு முன்பாக பதவியை பறித்தால் எதிர்க்கட்சிகள் அதையே பிரசாரமாக மாற்றிவிடுவார்கள். மேலும், மதுராந்தகம் தொகுதிக்குள் சில சமூகக் கணக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இடைத்தேர்தல் ரிசல்ட் வரைக்கும் கில்லி சரத்தின் பதவிக்கு பிரச்னை இருக்காது' என்கின்றனர்.
அமைச்சரவையில் இடம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. சூதானமாக நடந்து கொள்ளாமல் முதல்வருக்கு தொடர்ந்து சங்கடத்தை கொடுப்பதால் அமைச்சரவையின் முதல் விக்கெட்டே கில்லி சரத்தாக இருக்க அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக அறுதியிட்டு கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.!


















