செய்திகள் :

மகளிர் இட ஒதுக்கீடு: `சமமான பிரதிநிதித்துவமா அல்லது தேர்தல் வியூகமா?' - விவாதப் பொருளாகும் திட்டம்!

post image

மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், சபையைக் காலவரையின்றி ஒத்திவைக்காமல், ஒரு குறிப்பிட்ட தேதியில் மீண்டும் கூடும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, தொகுதி மறுவரையறைப் பணியையும் அமைதியாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாமில் மோடி
அஸ்ஸாமில் மோடி

குறிப்பாக பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் தற்போது இருக்கும் 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்ற இட அதிகரிப்பு அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களிலும் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆண் அரசியல்வாதிகளின் வாய்ப்புகள் குறையாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவையின் உயர்த்தப்பட்ட 816 இடங்களில் 273 இடங்கள் (33%)பெண்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், தொகுதி மறுவரையறைப் பணிகளை 2027-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை தள்ளிப்போடாமல், விரைவாக முடிப்பதற்காக 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் 2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டைச் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும் என அரசு கருதுகிறது. இதற்காகத் தொகுதி மறுவரையறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

அமித் ஷா

இந்தத் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா சில கட்சிகளுடன் ஆலோசித்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை. மக்களவை இடங்களை 50% உயர்த்துவது தென்னிந்தியா, வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறும் காங்கிரஸ், இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கோரியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஆரம்பத்திலேயே, ``அனைத்து மாநிலங்களிலும் இடங்களை 50% அதிகரிப்பது சமமானதாகத் தோன்றினாலும், அது ஏற்கனவே இருக்கும் இடைவெளியை மேலும் அதிகமாக்கும்' என இந்த திட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை விவாத களத்துக்கு கொண்டுவந்திருக்கின்றனர்.

இது தவிர உள் ஒதுக்கீடு, ஓ.பி.சி பெண்களுக்கான இட ஒதுக்கீடு என பல்வேறு கேள்விகள் இது தொடர்பாக இருக்கிறது. அது குறித்து விரிவாகப் பேச மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனை தொடர்புகொண்டோம்...

ஊடகவியலாளர் ப்ரியன்

இன்றையச் சூழலில் பெண்களின் மக்கள் தொகை என்பது ஆண்களின் எண்ணிக்கைக்கு இணையாக உள்ளது. அப்படியிருக்கும்போது, அவர்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதே சமூக நீதிக்கு உட்பட்ட செயலாகும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பதே உண்மையில் மிகக் குறைவான ஒன்றுதான்.

தற்போதைய நிலையைத் தரவுகளுடன் பார்த்தால், நாடாளுமன்றத்தின் 543 உறுப்பினர்களில் வெறும் 74 பேர் மட்டுமே பெண்கள். அதாவது 13% மட்டுமே. மாநிலச் சட்டமன்றங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது, பின்னர் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அது 50% ஆக உயர்த்தப்பட்டது.

இப்போது மத்திய அரசு கொண்டுவரும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது அவசியம். பொதுவாக 2021-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் அது இன்னும் முடியவில்லை. இப்போது அரசு அவசர அவசரமாக 2011-ம் ஆண்டின் பழைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யத் திட்டமிடுகிறது. அப்போதுதான் 2029 பொதுத் தேர்தலிலேயே இந்த சட்டத்தை அமல்படுத்த முடியும். இதுதான் பா.ஜ.க அரசின் நோக்கம். இதற்காகவே ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டத் திட்டமிட்டுள்ளனர்.

பெண்கள்

அதன் அடிப்படையில் தற்போதுள்ள 543 நாடாளுமன்ற இடங்களை 816 ஆக உயர்த்தினால், சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், ஆண் உறுப்பினர்களின் வாய்ப்பு பறிபோகாது என்பது அரசின் கணக்கு. ஆனால், இதில் ஒரு பெரிய அரசியல் சிக்கல் உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை உயர்த்தும் போது வட மாநிலங்களில், உதாரணமாக உத்தரப்பிரதேசத்தின் 80 நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை 120 என அதிகரிக்கும். மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அது இன்னும் கணிசமாக உயரும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களிலோ நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உயரும். உதாரணமாக தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயரும்.

இதனால், நாடாளுமன்றத்தில் வட மாநிலங்களின் ஆதிக்கம் ஓங்கும். தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படும். அதேநேரம் பா.ஜ.க வட மாநிலங்களில் பலமாக இருப்பதால், இது அவர்களுக்குச் சாதகமாக முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

பிரியாங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ்
பிரியாங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடங்களை 2029 தேர்தலுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவசரத்தின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் கணக்கும் உள்ளது. பா.ஜ.க பார்வையில், வட மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அதிக இடங்களை வென்றாலே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. அதனால்தான், தற்போதைய 543 இடங்களுக்குள்ளேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து மொத்த இடங்களை உயர்த்த பா.ஜ.க திட்டமிடுகிறது.

இதன் விளைவாக, தென்னிந்திய மாநிலங்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலேயே, வட மாநில வெற்றிகளை மட்டும் வைத்துக்கொண்டு மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகலாம்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 750-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டிருப்பதே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.

இதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை நேரடியாக எதிர்க்கவில்லை என்றாலும், அதன் அமலாக்க முறையை விமர்சிக்கிறது. 2011-ம் ஆண்டின் பழைய கணக்கெடுப்பைவிட, தற்போதைய கணக்கெடுப்பை நடத்திக் காலம் தாழ்த்தாமல் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கோரிக்கை. மேலும், ஓ.பி.சி பெண்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில், 33% ஒதுக்கீட்டையும் உயர்வகுப்புப் பெண்களே கைப்பற்றிவிடுவார்கள் என்பது அவர்களின் அச்சம்.

நாடாளுமன்றம் - பிரதமர் மோடி

2024 தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், 2029 தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறவும், பெண் வாக்காளர்களைக் கவரவும் இந்த அதிரடி மாற்றங்களை அரசு கொண்டு வர முயல்கிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தல்களுக்கு முன்பாகவே இந்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் பெண் வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையிலேயே பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்றால், சட்டத்திற்காகக் காத்திருக்காமல் ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர் பட்டியலில் 33% பெண்களை நிறுத்தலாம். 2029 தேர்தலுக்கு முன்பாக 2011 கணக்கெடுப்பை வைத்து அவசரப்படுவதை விட, முறையான புதிய கணக்கெடுப்பை நடத்தி 2034-இல் கூட இதனை அமல்படுத்தலாம். ஆனால், பா.ஜ.க தனது அரசியல் பிம்பத்திற்காகவும், வட மாநிலச் செல்வாக்கிற்காகவும் 2011 கணக்கெடுப்பையே பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றம்

இது கூட்டாட்சித் தத்துவத்தில் மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையைப் பாதிக்கும் என்பதே இந்த விவாதத்தின் மையப்பொருள். 2023-ல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதே 2024 தேர்தலில் பா.ஜ.க-வால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. எனவே, சட்டங்கள் மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது. மக்களின் மனநிலையே இறுதியானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பா.ஜ.க-வின் முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு, குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு சவாலாக அமையும்" என விரிவாகப் பேசினார்.

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கோவை சிங்காநல்லூர... மேலும் பார்க்க

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், திர... மேலும் பார்க்க

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் - விமானியைத் தேடும் பணி தீவிரம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந... மேலும் பார்க்க

'கொறடா' என்பவர் யார்? அவரது பணிகள் என்ன? அவரின் அதிகாரம் என்ன?|Vote Vibes

தமிழக சட்டமன்றக் கூட்டங்களோ அல்லது நாடாளுமன்றக் கூட்டங்களோ நடைபெறும் சமயங்களில், நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை 'கொறடா'. 'ஆளுங்கட்சி கொறடா உத்தரவு', 'கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ-க்கள்' என்று பே... மேலும் பார்க்க