செய்திகள் :

மதுரை, திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்: உப்பும் மிளகும் வாங்கிப்போட்டால் நோய்கள் விலக்கும்!

post image

அன்னை ஆதி சக்தி மக்களைக் காக்கும்பொருட்டு கோயில்கொண்ட தலங்கள் ஏராளம். அப்படி அன்னை ஒருமுறை சிறுமியாக ஓரிடத்தில் காட்சி கொடுத்தாள். அதுவும் எட்டுகரங்களுடன், வலது காலினை மடித்து அமர்ந்திருந்த திருக்கோலத்தில் ஆங்காரியாக ஓர் அசுரனைத் தன் இடதுகாலில் மிதித்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது இந்தக் காட்சியைக் கண்டவர்கள், அஞ்சி நடுங்கினர். ஊருக்குள் ஓடிச் சென்று இந்தத் தகவலை ஊர்மக்களிடையே சொன்னார்கள். மக்கள் வந்து பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த அந்த அன்னையைக் காணவில்லை.

தாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து அமர்ந்த அந்தச் சிறுமி, அன்னை பராசக்தியின் வடிவே என்பதை அறிந்துகொண்டனர் மக்கள். அந்தச் சிறுமி அமர்ந்திருந்த இடத்தில் சிறு கல்லை நட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர். வெயிலுக்காக வந்து அமர்ந்ததால், அவளை 'வெயிலுகந்த அம்மன்' என்று அழைத்தனர்.

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்

இப்படித் தானே விருப்பம்கொண்டு அம்மை அமர்ந்த இத்தலத்தின் மகிமை உலகெங்கும் பரவியது.

அன்னையின் திருவருளால் அங்கு வந்து வேண்டிக்கொண்டவர்களின் நோய்கள் நீங்கின. திருமலை நாயக்க மன்னனின் காதுகளுக்கு அம்மனின் பெருமைகள் சென்று சேர்ந்தன.

ஓடிவந்து அம்மனைத் தொழுதுகொண்டான். அந்த இடத்தில் அம்மனுக்கு ஓர் ஆலயத்தை அமைக்கவும் ஏற்பாடு செய்தான். அந்த ஆலயம்தான் தற்போது திருப்பரங்குன்றம் மலை அருகே அமைந்திருக்கும் வெயிலுகந்த அம்மன் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியிருக்கும் வீதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு முன்பாக இரண்டு பிரமாண்ட துவார பாலகர்கள் நிற்க மூல தெய்வமாக வெயிலுகந்த அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறாள்.

இந்த ஆலயத்தில் விநாயகர், கருப்பண்ணன், கால பைரவர், நவகிரகங்கள், நாக புற்று, அர்த்தநாதீஸ்வரர், மாணிக்கவாசகர், கத்தரிக்காய் சித்தர், வேதாலம்மன் ஆகிய தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

திருக்கோயிலின் பிராகாரங்களில் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டு காண்போரைக் கவர்கின்றன.

தினமும், மூல அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுவதுபோலவே, இந்தச் சிலைக்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

கருவறையில் இருக்கும் அம்மனின் சிரசில் தினமும் மதியம் 12 மணி முதல் 12.15 வரை வெயில் விழுகிறது. கடுமையான வெயிலைத் தாங்கிக்கொண்டு அம்மன், மக்களுக்குக் குளுமையை வழங்குவதாக ஐதிகம். அதனால், வெயிலினால் உண்டாகும் நோய்கள் தீர இங்கே மக்கள் நேர்ந்துகொள்கிறார்கள். அன்னையும் அவற்றைக் கனிவோடு நீக்கி, அருள்கிறாள்.

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்

குறிப்பாக, வெயிலினால் உண்டாகும் தோல் நோய்கள் நீங்க இங்கே வந்து நேர்ந்துகொள்கிறார்கள். நோய் குணமானதும் இங்கே வந்து உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொள்வது, பாத பொம்மை காணிக்கையிடுவது, சேவல் தானம் செய்வது, பொங்கல் வைப்பது என்று பல்வேறு முறைகளில் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்கள்.

உப்பும், மிளகும் வாங்கிக் கோயிலில் போட்டால், நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது இங்குள்ள பக்தர்கள் நம்பிக்கை. மேலும், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், வேண்டிக்கொண்டு, பொம்மை கொண்டு வரும் சடங்கைச் செய்கிறார்கள். எத்தனை கோரிக்கைகளை வைத்தாலும் அம்பிகை அதைக் கனிவோடு அருள்வாள் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் இங்கு திருவிழா களைகட்டும். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசிமாதத்தில் காப்புக் கட்டித் திருவிழா கொண்டாடுகிறார்கள். இந்தக் கோயிலின் உற்சவர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்.

உற்சவக் காலங்களில் அந்த மூர்த்தம் கொண்டு வரப்பட்டு தினவும் காலையும் மாலையும் உலா நடைபெறும். உற்சவ காலத்தில், கோயிலில், பொங்கல் வைத்தல், மாவுசாத்துதல், பூப்பல்லக்கு முதலியன இங்கு சிறப்பாக நடைபெறும். அந்த வேளையில் அம்மனுக்கு பக்தர்கள் குளிர்ச்சியான பொருள்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன்

இந்தக் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலின் முன்பாக நடைபெறும் நாடகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல தலைமுறைகளாக இந்த நாடகத்தை நடத்தும் கலைஞர்களுக்கு ஒரு காலத்தில் 60 கட்டி உப்பில்லா சோறும், 6 மரக்கா மிளகும் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டதாம்.

ஒரு முறை, இந்த நாடகத்தைக் காண வந்த திருமலைநாயக்கர் , அந்த நாடகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய அளவு நிலத்தைத் தானமாக வழங்கினார் என்று சொல்கிறார்கள். அந்தக் குழுவினரை திருமலை நாயக்கரால் மெச்சியதால் 'திருமலை மெச்சான்' என்ற பெயரும் அவர்களுக்கு நிலைத்தது.

இப்போதும், அந்தக் கலைஞர்கள், தங்கள் மரபுப்படி, உப்பில்லா சோறும், மிளகு ரசமும் மட்டுமே பெற்றுக்கொண்டு நாடகம் நடத்திக்கொடுக்கிறார்கள்.

மதுரை செல்பவர்கள் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்குவதோடு வெயிலுகந்த அம்மனையும் வணங்கி வாருங்கள். நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை வசமாகும்.

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் திருக்கோயில்: பெண்களுக்கு செல்வவளமும் நலமும் அருளும் அம்பாள் சந்நிதி!

மயிலாப்பூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில். பலரும் அறியாதது கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் சிவத்தலங்கள் குறித்து. மயிலையில் அமைந்திருக்கும் 7 சிவத்தலங்களையும் 'சப... மேலும் பார்க்க

நாகை மாவட்டம், தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோயில்; இழந்த செல்வங்களை மீண்டும் அருளும் ஈசன்!

தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு செய்வதே தனித்த ஆனந்தத்தைத் தரும் செயல். அந்த வகையில் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்றான 85 வது பாடல் பெற்ற தலமான தேவூரைத் தரிசனம் செய்வது சிறப்பு. நாகை மாவட்டம் க... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கோலக்கா திருத்தாளமுடையார்: பிள்ளைகளுக்கு சீக்கிரம் பேச்சுவர அருளும் தலம்

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274. அவற்றில் ஞான சம்பந்தர் பாடிய தலங்கள் அனைத்தும் மிகவும் சிறப்புப் பெற்றவை. மூன்று வயதுக் குழந்தையாக சிதம்பரம் தீர்த்தக் குளத்தில் அழுதுகொண்டிருந்த ஞானசம்பந்தருக்கு அம்பி... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி: நவகிரகங்களின் பணி செய்யும் யமன் சந்நிதி!

காசிக்கு நிகரான தலங்கள் நம் நாட்டில் அநேகம் உள்ளன. அதிலும் ஆயுள் விருத்தி தலம் என்றால் திருக்கடவூர், திருவாரூர் போன்ற தலங்களைச் சொல்லலாம். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு ஸ்ர... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்: பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் தலம்!

நரசிம்மர் தலங்கள் அனைத்துமே விசேஷமானவை. நரசிம்ம அவதாரத்துக்குப் பின் முனிவர்கள் அந்த அவதாரக் கோலத்தைத் தாங்கள் தரிசிக்கவில்லையே என்று வருந்தினர். அவர்களுக்காக பகவான் பல்வேறு தலங்களில் நரசிம்ம அவதாரமாக... மேலும் பார்க்க