”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட...
மனைவிக்கு பக்கவாதம்; சைக்கிள் ரிக்ஷாவில் 300 கி.மீ பயணம் - 70 வயது முதியவரின் காதல்!
ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு சிகிச்சை கொடுக்க 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பணமில்லாமல் சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து சென்றது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் என்ற இடத்தில் வசிப்பவர் பாபு லோகர்(70). சைக்கிள் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது வயதான மனைவி ஜோதிக்கு கடந்த நவம்பர் மாதம் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மருத்துவர்கள் ஜோதியை கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாக்கிற்கு தனது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் தனது சொந்த சைக்கிள் ரிக்ஷாவில் மனைவியை கட்டாக் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பாபு முடிவு செய்தார்.
இது குறித்து பாபு லோகர் கூறுகையில், ''ஆம்புலன்ஸை வாடகைக்கு அமர்த்தி செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே எனது மனைவியை எனது சொந்த வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

இதற்காக எனது வண்டியில் சில பழையை மெத்தையை போட்டு அதில் எனது மனைவியை படுக்க வைத்தேன். கடவுள் பெயரை உச்சரித்தபடி சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டினேன். தினமும் 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வோம். அதன் பிறகு அங்குள்ள எதாவது ஒரு கடையோரம் இரவில் தங்கிக்கொள்வோம். 9 நாள் பயணம் செய்து கட்டாக் மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். அங்கு இரண்டு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் சென்றபோலவே திரும்ப வந்தோம். திரும்ப வந்தபோது சைக்கிள் ரிக்ஷா மீது ஒரு வாகனம் மோதியது.
இதில் எனது மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டோம். அங்கு அவர்கள் எங்களுக்கு சாப்பாடு கொடுத்து இரவில் தங்கிக்கொள்ள இட வசதி செய்து கொடுத்தனர். காலையில் மீண்டும் சைக்கிள் ரிக்ஷாவில் எனது மனைவியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். வழியில் எங்களை போலீஸார் பார்த்தனர். அவர்கள் எங்களை அவர்களது வாகனத்தில் அழைத்து செல்வதாக தெரிவித்தனர். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.
அவர்கள் கட்டாயப்படுத்தி பணம் கொடுத்ததால் வழிச்செலவுக்காக வாங்கிக்கொண்டோம். எனது வாழ்க்கையில் நான் இரண்டு பேரை காதலிக்கிறேன். அதில் எனது மனைவி முதலாமானவர். இரண்டாவது எனது சைக்கிள் ரிக்ஷா. இரண்டு பேரையும் நான் பிரியவே மாட்டேன்'என்று தெரிவித்தார்.
தள்ளாத வயதிலும் தனது மனைவியை 300 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அழைத்து வந்த பாபுவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.





















