செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸா...
மயிலாடுதுறை தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள்: பிறைசூடிய பிரானாக பெருமாள் காட்சி கொடுக்கும் திருத்தலம்
ஈசனை வர்ணிக்கும்போது அவரைப் பிறைசூடி என்பார்கள் அடியார்கள். அதற்கேற்ப அவரின் சடையில் பிறைச்சந்திரன் இருப்பதாக வேதங்களும் உபநிடதங்களும் போற்றுகின்றன. எனவே அவருக்கு சந்திரமௌலி என்கிற திருநாமமும் உண்டு.
ஆனால் பெருமாள் சந்திரனைத் தன் தலையில் சூடியவராகக் காட்சி கொடுக்கும் தலம் ஒன்று உண்டு. அத்தலத்தில் வழிபட்டால் மனதில் குறைகள் அனைத்தும் விலகி சந்தோஷமும் நிம்மதியும் குடிகொள்ளுமாம். வாருங்கள், அந்த அற்புதத் தலத்தின் மகிமையை அறிந்துகொள்வோம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைச்சங்காடு என்னும் திவ்ய தேசம். மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இங்கு பெருமாள் நாண்மதியப் பெருமாள் என்கிற திருநாமத்தோடு பிறைசூடிய பிரானாகக் காட்சி தருகிறார்.

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகிலுள்ள இவ்வூர், சங்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. அதனால் இந்த ஊருக்கு, 'தலைசெங்கோடு' என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே, 'தலைச்சங்காடு' ஆனது என்கிறது தல வரலாறு. இந்தச் செய்தியை சிலப்பதிகாரமும் சுட்டுகிறது.
கிழக்கு நோக்கிய சந்நிதியில் ஶ்ரீதேவி, பூமாதேவி சமேதராக - மார்பில் மகாலட்சுமித் தாயாரைத் தாங்கியபடி அருள்கிறார் பெருமாள். பெருமாளின் திருவழகைக் கண்டவுடன் மனம் ஆனந்தமடையும். கவலைகள் மறக்கும். ஆனந்த அதிர்வுகள் உள்ளூர எழுவதை அனைவருமே உணரமுடியும்.
பெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. மேற்கில் தலைச்சங்கநாச்சியார் என்ற திருநாமத்துடன் தாயார் தனிச்சந்நிதி கொண்டுள்ளார்.
இந்தக் கோயிலின் உற்சவருக்கு 'வெண்சுடர்ப் பெருமாள்' என்பது திருநாமம். சந்திரனைத் தன் தலையில் சூடிய பெருமாள் அருளும் இந்தத் தலத்தின் புஷ்கரணிக்குச் `சந்திர புஷ்கரணி' என்றே பெயர். இங்குள்ள விமானமும் சந்திர விமானமாகும். சந்திரனின் சாபத்தைப் போக்கி அருள் புரிந்ததால் இந்தப் பெருமாளுக்கு `சந்திர சாபகர்' என்ற திருப்பெயரும் உண்டு.

சந்திரன் அழகில் சிறந்து விளங்கியதால், தட்சன் தன் 27 மகள்களையும் அவனுக்கு மணம் செய்துகொடுத்தார். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டுமே அதிகம் அன்பு செலுத்தினான். இதனால் வருந்திய மற்ற பெண்கள், தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் சந்திரனுக்குப் பலவாறு புத்திமதி கூறியும் அவன் கேட்கவில்லை.
அதனால் கோபம் கொண்ட தட்சன், `உன் கலைகள் அனைத்தும் குறையட்டும்' என்று சாபமிட்டார். சாபம் பலித்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகக் குறைந்து, பொலிவை இழந்து தவித்தான் சந்திரன். ஒரு கலை மட்டுமே எஞ்சியிருக்க, சந்திரனின் ஆணவம் அழிந்தது. அவன் பெருமாளைச் சரணடைந்து விமோசனம் வேண்டினான்.
அவனுக்குத் திருவருள் புரிய சித்தம் கொண்டார் பெருமாள். திருவரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபட்டால் அவன் சாபம் தீரும் என்பதை உணர்த்தினார்.
அதன்படி பூலோகம் வந்த சந்திரன் திருவரங்கம் சென்று அங்கு அமைந்திருக்கும் நெய்தல் பூக்கள் நிறைந்த புஷ்கரணியில் நீராடி, 15 ஆண்டு காலம் ரங்கநாதனைத் தரிசித்து தவம் செய்தான். பின்னர் மயிலாடுதுறை அருகிலுள்ள திருஇந்தளூரில், பரிமள ரங்கநாதரை வழிபட்டான். தொடர்ந்து இந்தத் தலத்துக்கு வந்துசேர்ந்தான்.
இங்கே, புஷ்கரணியில் நீராடி இங்குள்ள பெருமாளை ஆராதித்து வந்தான். விரைவில் சந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாள், தன் தலையில் பிறையைச் சூடி, சந்திரனின் சாபத்தைத் தீர்த்தருளினார்.

சந்திரனின் சாபம் தீர்த்த பெருமாள் இவர் என்பதால் ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ள அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு நன்மைகள் அடையலாம்.
இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இத்தலத்துப் பெருமாளை அர்ச்சித்து வணங்கினால், பாவங்கள் தொலையும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தியானக் கோலத்தில் அமர்ந்த நிலையில் இங்கு அருளும் நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்து, மாலை சூடி வணங்க ஆரோக்கியம் மேம்படும்.
எதிரிகள் தொல்லை விலகும். மனக்குறை தீரும். தீவினைகள் அகலும். ஆஞ்சநேயரை வணங்க சனிதோஷம் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனோகாரகனான சந்திரனின் சாபம் தீர்த்த இத்தலத்துக்கு வந்து வழிபட்டாலே மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
எப்படிச் செல்வது?: சீர்காழி - தரங்கம்பாடி சாலையில், தலைச்சங்காடு பேருந்து நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து மேற்கு திசையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் நாண்மதியப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.





















