போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள...
மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ரைஹான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் ரைஹான் தனது வருங்கால மனைவி அவிவா பைக்குடன் இருக்கிறார். அந்த படம் திருமணம் நிச்சயதார்த்ததில் எடுத்தது ஆகும். மற்றொரு படம் இருவரும் குழந்தை பருவத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்டது ஆகும்.

இதன் மூலம் இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரும் பள்ளியிலே சேர்ந்து படித்து இருக்கின்றனர். அவிவாவின் தாயாரும், பிரியங்கா காந்தியும் நீண்ட கால தோழிகள் ஆவர். ரைஹான் இன்ஸ்டாகிராமில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டவுடன் அவரது நண்பர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்போரேயில் தனிப்பட்ட விழாவாக நடந்தது. இதில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயதார்த்தத்தில் ரைஹான் மற்றும் அவிவா இந்திய பாரம்பரிய உடையணிந்து காணப்பட்டனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரைஹான் குடும்பமும், அவிவா குடும்பமும் டெல்லியில் கூடியது. இதில் ரைஹான் முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் அவிவாவிடம் தனது காதலை தெரிவித்தார்.
அதனை அவிவா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 29ம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியிருக்கிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. 25 வயதாகும் ரைஹான் தனது 10 வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக புகைப்பட கண்காட்சிகளைக்கூட நடத்தி இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் அவிவா இன்டீரியர் டிசைனர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார். அவிவாவின் தாயாரும் இன்டீரியர் டிசைனர் ஆவார்!




















