செய்திகள் :

`மாஜிஸ்திரேட் விசாரணைக்கே இடையூறு; ஏட்டு ரேவதியின் துணிச்சல்'- சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை

post image

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை- மகன் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், ”9 போலீஸாருமே குற்றவாளிகள்தான்” என தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விபரம் குறித்து வரும் 30-ம் தேதி அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இனி இந்த வழக்கு கடந்த வந்த பாதையைப் பற்றி பார்ப்போம்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

19.06.2020: இரவு நேரத்தில் ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை  திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று கொடுமையாகத் தாக்கினர்.

20.06.2020: போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர்.

22.06.2020: போலீஸார் கடுமையாகத் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பென்னிக்ஸ் உயிருக்குப் போராடிய நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

சாத்தான்குளம்

23.06.2020: ஜெயராஜூம் உயிருக்குப் போராடியதால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். போலீஸ் காவலில் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸாரைக் கண்டித்து சாத்தான்குளத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

24.06.2020: இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு எடுத்தது. ”இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை தீவிரமாக கண்காணிப்போம்” என, மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.

அதே நாளில் முதல்கட்ட நடவடிக்கையாக உதவி ஆய்வாளர்களாக இருந்த பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் தந்தை, மகனின் உடல்கள், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இது, வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

25.06.2020: ஜெயராஜ், பென்னிக்ஸின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சாத்தான்குளத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

26.06.2020: கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளத்திலேயே தங்கி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, மதுரைக்கிளை உத்தரவிட்டது.

27.06.2020: கோவில்பட்டி சிறையில் காவலர்கள், கைதிகளிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீஸார்

28.06.2020: இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. அதே நாளில் ஆய்வாளரான ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீஸாரும் கூண்டோடு வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

29.06.2020: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு போலீஸார் ஒத்துழைக்காததால், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சாட்சிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்திய மாவட்ட கூடுதல் சூப்பிரண்ட் குமார், சாத்தான்குளம் துணை  சூப்பிரண்ட் பிரதாபன், போஸ் மகாராஜன் ஆகியோர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யவும், அவர்களை இடமாற்றவும், நேரில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

30.06.2020: மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரிக்கும் வரை சி.பி.சி.ஐ.டி நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்ட் அனில்குமார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

01.07.2020: உதவி ஆய்வாளரான ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் அரசு மருத்துமனை மருத்துவர் வினிலா, பெண் போலீஸ் பியூலா செல்வகுமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தந்தை, மகனை போலீஸார் விடிய விடிய தாக்கினர் என, பெண் போலீஸ் ஏட்டு ரேவதி துணிச்சலாக சாட்சியம் அளித்தார். இந்த 3 பேரின் சாட்சியம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

02.07.2020: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், ஏட்டு முருகன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். போலீஸாரல் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஏட்டு ரேவதி கூறிய நிலையில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

03.07.2020: தலைமறைவாக இருந்த போலீஸ் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம், மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

04.07.2020: கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

05.07.2020: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை விதிக்கப்பட்டது.

ஜெயராஜ் குடும்பத்தினர்

07.07.2020: சாத்தான்குளம் வழக்கினை சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

08.07.2020: தந்தை- மகன் தாக்கப்பட்டபோது பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, ஏட்டுக்கள் சாமித்துரை, செல்லதுரை, முதல்நிலை போலீஸ் தாமஸ் பிரான்சிஸ், போலீஸ் வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.

09.07.2020: கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

10.07.2020: இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ துணை துணை சூப்பிரண்டு அசோக்குமார் சுக்லாவிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஒப்படைத்தனர்.

12.07.2020: சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

13.07.2020: இந்த வழக்கினை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிப்பதை விட, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிப்பதே எளிதாக இருக்கும் எனக் கருதிய அதிகாரிகள், அதற்கு அனுமதி பெற்றனர்.

18.07.2020: மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸார் 10 பேரிடமும் மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

21.07.2020: ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ வாக்குமூலம் பெற்றது.

28.07.2020: கொரோனா தொற்று ஏற்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட 9 போலீஸார்

10.08.2020: கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார்.

25.08.2020: ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக மதுரை நீதிபதிகள் தெரிவித்தனர்.

26.09.2020: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸாரின் சித்திரவதையால்தான் தந்தை-மகன் உயிரிழந்தனர் என, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 2,207 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. அதே சமயம், இந்த வழக்கில் கூட்டுச்சதிக்கான ’120-பி’ என்ற சட்டப்பிரிவையும் சேர்க்க வேண்டும் என, சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டதால், இக்கொலை வழக்கில் 120-பி பிரிவு சேர்க்கப்பட்டது.

12.08.2022: அன்று 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

19.09.2022: பெண் போலீஸ் பியூலா மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

06.01.2023: முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி சாட்சியம் அளித்தார். அதன்பின் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. நீண்ட நாளக நடந்த இந்த வழக்கில், இடையிடையே நீதிபதிகளும் மாறினர்.

28.07.2025: இந்த வழக்கின் முக்கியக்குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆய்வாளரான ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறுவதாக மனு அளித்தார். ஆனால், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேபோல, 9 போலீஸாரும் பல முறை ஜாமீன் கேட்டும் ஒருவருக்கும் இதுவரை ஜாமீன் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தான்குளம் காவல் நிலையம்

02.03.2026: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

23.03.2026: தீர்ப்பு நாள்

இந்த வழக்கில் கடந்த 23-ம் தேதி காலை தீர்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 4 மணியளவில் தீர்ப்பினை நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 9 பேரும் குற்றவாளிகள் என திட்டவட்டமாகக் கூறப்பட்ட நிலையில், தண்டனை விபரம் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டது.!

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தி.மு.க வழக்கறிஞர் கைது!

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரின் அம்மா, தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்கிறார். 7-ம் வகுப்... மேலும் பார்க்க

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க