பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்த...
சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?
ஈரான் போரினால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை இந்தியாவில் படாதப்பாடு படுத்தி வருகிறது.
இந்தத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான ஒன்று 'ஹோட்டல் துறை'.
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பலர் சொந்த ஊரில் இருந்து வேலைக்காக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் உணவிற்காக பெரும்பாலும் நம்பியிருப்பது ஹோட்டல்களைத் தான்.

ஆனால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டினால் பல சின்ன சின்ன உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பல உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
சின்ன சின்ன உணவகங்களில் தானே பிரச்னை என்று, இவர்களால் பெரிய உணவகங்களை நோக்கியும் நகர முடியவில்லை. இதற்கான காரணமும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. பெரிய உணவகங்களும் இந்தப் பிரச்னையால் உணவு வகைகளின் விலையைச் சற்று கூட்டியிருக்கின்றன.
இதற்கு முன்பு ரூ.10-க்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த டீ, இப்போது ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இந்த சின்ன உதாரணமே நல்ல உதாரணம்.
இதில் வாடிக்கையாளர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா என்று பார்த்தால், ஹோட்டல் உரிமையாளர்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
மிக அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்கப்படுகின்றன... போதுமான அளவு கேஸ் சிலிணடர்களும் கிடைப்பதில்லை. மிக குறைந்த உணவு வகைகளே போடுவதால் அதிக லாபம் இல்லை போன்ற பல பிரச்னைகளை அவர்களும் சந்திக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஹோட்டல் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கூறுகிறார், சென்னை ஹோட்டல் சங்க தலைவர் M.ரவி.

"தற்போது நிலவி வரும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடுப் பிரச்னையால் கிட்டத்தட்ட 30 சதவிகித சிறிய உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பே, உணவகங்கள் விறகு அடுப்புகளில் இருந்து கேஸ் சிலிண்டருக்கு மாறிவிட்டன. இப்போது பலர் புதிதாக இந்தத் துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு விறகு அடுப்பில் எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நிலைமை இப்படி இருக்க... கேஸ் சிலிண்டர் பிரச்னையைத் தற்காலிகமானதாக பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. இந்தியாவில் பெரும்பாலும் எல்.பி.ஜியை இறக்குமதி தான் செய்கிறோம்.
ஈரான் போர் பிரச்னை மட்டுமல்ல... எதிர்காலத்தில் வேறு ஏதேனும் பிரச்னை வந்தால் கூட, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
அதனால், இப்போதும் சரி... எதிர்காலத்திலும் சரி... பிரச்னையில் சிக்காமல் ஹோட்டல் துறை தப்பிக்க அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.
இப்போதைய பிரச்னையால் ஹோட்டல் துறையினருக்கு 20 சதவிகித கேஸ் சிலிண்டர் கூட வருவதில்லை. மத்திய அரசு 20 சதவிகித கேஸ் சிலிண்டர்கள் ஹோட்டல்களுக்கு தர வேண்டும் என்று கூறியிருக்கிறது தான். ஆனால், அவை இன்னும் வந்து சேரவில்லை.
இந்தப் போர் முடிந்தால் கூட, இந்தியா முழுவதும் பிரச்னை சரியாக குறைந்தது 1 - 1.5 மாதங்கள் ஆகும்.
சென்னையில் சில பெரிய ஹோட்டல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இண்டக்ஷனுக்கு மாறிவிட்டன. ஆனால், இந்த அடுப்புகளின் விலை மிக அதிகம்.
உதாரணத்திற்கு, சாதாரண அடுப்பு ரூ.1.5 லட்சம் என்று வைத்துக்கொண்டால், இந்த அடுப்புகளின் விலை ரூ.5 லட்சம்.
அடுப்புக்கான முதலீடு அதிகம் என்பதால், பலரால் இதை தேர்வு செய்யவில்லை அல்லது இதை வாங்க முடியவில்லை.
இன்னொரு பக்கம், புதிய அடுப்புகள் என்பதால் எப்படி வேலை செய்யும் என்கிற பயம் வேறு இருந்தது.
ஆனால், இப்போதைய சூழலை கருத்தில் கொண்டால், இந்த அடுப்பிற்கு மாற பல உணவகங்கள் நினைக்கின்றன.
ஏற்கெனவே சொன்ன மாதிரி, இந்த அடுப்புகளின் விலை மிக அதிகம். இதனால், அரசாங்கம் அல்லது TIIC (Tamilnadu Industrial Investment Corporation) உணவகங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கலாம்.
இதனால், பலர் எல்.பி.ஜி பயன்பாட்டைக் கூட விட்டுவிடுவார்கள்... இதற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியையும் குறைக்கலாம்.

இண்டக்ஷன் அடுப்புகளுக்கு அதிக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கு விதிக்கப்படுவதைப் போல, ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
மேலும், இண்டக்ஷன் உற்பத்தியாளர்கள் ஒன்றிரண்டு தான் இந்தியாவில் உள்ளன. அதனால், அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இன்னும் பல உற்பத்தியாளர்களைக் கொண்டு வருவதன் மூலம் விலைகளைக் குறைக்கலாம்.
இப்போது இண்டக்ஷன் வாங்கியதும் பிரச்னை முடிந்துவிடுமா என்று கேட்டால், 'முடியாது' தான். அடுத்து மின்சாரப் பிரச்னை இருக்கிறதே.
இண்டக்ஷன் ஸ்டவ்களுக்கு 300 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 'இவ்வளவு மின்சாரம் இல்லை' என்று அரசாங்கம் கூறுகிறது.
இதை தாண்டியும், மின்சாரம் வேண்டுமென்றால் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கு டிமான்ட் வரி உள்ளிட்ட பல வரிகள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும்.
இதையெல்லாம் விட, சூப்பர் ஐடியா - சோலார் பேனல். சோலார் பேனலைப் பயன்படுத்தினால், 'உயர் அழுத்தத்தை' பயன்படுத்துபவர்களுக்குத் தான் சலுகை உள்ளது. இதை ஸ்டார் உணவகங்கள் தான் செய்துள்ளனர்.
அதனால், 'குறைந்த அழுத்தம்' வைத்திருப்பவர்கள் இண்டக்ஷன்களை மின்சாரம் மூலம் பயன்படுத்த சட்டம் அனுமதிப்பதில்லை.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்டார் உணவகங்களுக்குக் கிடைக்கும் அதே சலுகை சிறிய உணவகங்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இதை செய்தாலே எங்களுக்குப் பாதி பிரச்னை சரியாகிவிடும். இவை அனைத்தையுமே அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன... வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் பெரியளவில் தெரிகிறது.
ஆனால், உணவு வகைகள் குறைக்கப்படுவதால், உணவகங்களில் வேலை செய்யும் பலருக்குக் கட்டாய விடுமுறை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்குச் சம்பளம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மின்சாரத்தில் அனைத்து பிசினஸ் துறைகளுக்கும் 'Peak Hour கட்டணம்' என்று ஒன்று உண்டு. அதாவது காலை, மாலை 6 - 10 மணிகளில் மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
இவை எல்லாமே இப்போதைய சூழலில் கடும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
ஒரே மின்சாரத்திற்கு வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிப்பதில் நியாயமில்லை. இந்தக் கட்டணத்தை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவை எல்லாம் அரசாங்கம் உடனடியாக செய்தாலே, இப்போது மட்டுமல்ல... எதிர்காலத்திலும் கேஸ் சிலிண்டர் பிரச்னைகள் இல்லாமல் உணவகங்கள் இயங்கும்.
இதன் மூலம் உணவகங்களால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது.
இவை அனைத்தையுமே அரசாங்கம் கருத்தில் கொண்டு, நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்."












