அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டாளர்கள் இப்போது செய்யக் கூடாத `5' தவறுகள்!
அமெரிக்கா/இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த நான்கு வாரங்களாக நடந்து வருகிறது. ஈரான் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்மூஸ் நீரிணைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகின் பல நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகமாவது தடை உருவாகி இருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாத காலமாக உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் இறக்கத்தின் போக்கில் இருந்து வருகின்றன.
இந்தியப் பங்குச் சந்தையான நிஃப்டி கடந்த ஒரு மாத காலத்தில் (கடந்த செவ்வாய் நிலவரப்படி) 9.85% இறக்கம் கண்டுள்ளது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் இதுவரை கண்டுவந்த லாபம் மட்டுமல்ல, முதலீடு செய்த பணத்தைக்கூட 10% - 20% வரை இழந்து நஷ்டமடைந்து உள்ளனர். இந்த முதலீடே தவறோ... இதில் பணத்தைப் போடாமல் இருந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.
இப்போது ஏற்பட்டுள்ள சந்தை இறக்கத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் பார்த்து, முதலீட்டாளர்கள் இப்படி யோசிப்பது சரியல்ல. இன்றைய தேதியில் ஒருவருக்குப் பணவீக்கத்தைவிட அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும் எனில், அவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சரியாக செய்யத் தொடங்கி இருந்தால், போர்ச் சூழல் காரணமாக நமக்கு ஏற்படும் கஷ்டத்தை ஓரளவு குறைக்கவே முடியும். அதற்கான வழிகள் என்ன?

ரிஸ்க் அறியாமல் முதலீடு...!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவரும் முதலீட்டாளர்களில் பலரும் குறைந்த ரிஸ்க்கும், அதிக வருமானமும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உள்ளபடி பார்த்தால், இது எதிர்மறையான இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகும்.
பொதுவாக, ரிஸ்க் குறைவாக இருந்தால், குறைந்த வருமானமே கிடைக்கும். உதாரணம், கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள். இதில் ரிஸ்க்கும் குறைவு; வருமானமும் குறைவு. அதிக வருமானம் பெற வேண்டும் எனில், அதிக ரிஸ்க்கை நாம் எடுத்தே ஆகவேண்டும். உதாரணம், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு திட்டங்கள்.
ஆக, உங்களுக்குக் குறைந்த வருமானமே போதும் என்று நினைத்தால், குறைந்த ரிஸ்க் கொண்ட கடன் ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்யுங்கள். அதிகமான வருமானம் வேண்டும் எனில், அதிக ரிஸ்க் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அதிக வருமானம் வேண்டும் என்று நினைத்த மொத்தப் பணத்தையும் வைத்திருந்தால், குறுகிய காலத்தில் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, இந்தத் தவறைச் செய்யாதீர்கள்.

சந்தையின் போக்கைக் கணிக்க வேண்டாம்!
பங்குச் சந்தை இப்போது இறக்கத்தின் போக்கில் உள்ளது. இப்போதைக்கு முதலீட்டைத் திரும்ப எடுத்துவிட்டு, பிற்பாடு சந்தை உயரத் தொடங்கியதும் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடலாம் என்று நினைத்து பல முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்ப எடுத்து வருகின்றனர். சந்தையின் போக்கை 'டைமிங்' (timing) செய்வது என்று இதை சொல்வார்கள்.
இப்படி 'டைமிங்' செய்யும்போது பலராலும் அதை சரியாக செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி. காரணம், பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது; இனி இறங்கத் தொடங்கிவிடும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதே போல, பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கிறது. இனி உயரத் தொடங்கிவிடும் என்று சரியாக சொல்ல முடியாது. இந்த நிலையில், ஒரு முதலீட்டாளர் செய்ய வேண்டிய ஒரே விஷயம், தொடர்ந்து முதலீடு செய்துகொண்டு இருப்பதுதான். சந்தை இறக்கத்தில் இருந்தாலும் முதலீடு, இறக்கத்தில் இருந்தாலும் முதலீடு என்று ஓர் ஒழுக்கத்துடன் செயல்படும் முதலீட்டாளர் நீண்ட காலத்தில் இரட்டை இலக்கத்தின் வருமானத்தைக் கண்டிருக்க முடியும்.
ஆனால், சந்தையின் போக்கைக் காரணம் காட்டி அடிக்கடி முதலீட்டை நிறுத்துபவரால், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை அடைய முடியாது என்பது நிச்சயம்! எனவே, சந்தையின் போக்கை 'டைமிங்' செய்யும் தவறைச் செய்ய வேண்டாம்.

எஸ்.ஐ.பி.யை நிறுத்துவது கூடாது...!
மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை சிலர் புரிந்துகொள்வதில்லை. ஒருவர் எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யும்போது பல்வேறு விலைகளில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்கி இருப்பார். இதனால், சராசரி விலையில் அவரால் யூனிட்டுகளை வாங்கி இருக்க முடியும். சிலபல மாதங்களுக்குப் பிறகு பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கி வரும்போது, விரைவில் லாபத்துக்கு வந்துவிட முடியும். சந்தை இறங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.பி.யைத் தொடர்ந்தால் மேலும் நஷ்டம் அதிகமாகுமே என்று நினைத்து, முதலீட்டை நிறுத்துவது சுலபம். ஆனால், சந்தை மீண்டும் உயரப் போகிறது என்பதை சரியாகக் கணித்து மீண்டும் எஸ்.ஐ.பி முதலீட்டைப் பலராலும் தொடங்க முடியாது என்பதே உண்மை. எனவே, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தும் தவறை மட்டும் செய்யவே வேண்டாம்!

பணத்தைத் திரும்ப எடுக்கக் கூடாது...!
பங்குச் சந்தை இறங்கி வருகிறது. இந்த இறக்கம் முடிகிற வரை நம்முடைய முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடலாம். சந்தை இறக்கம் நின்றபின் மீண்டும் முதலீட்டைத் தொடங்கலாம் என்றே பலரும் நினைக்கின்றனர். இப்படி நினைப்பவர்களில் சிலர் முதலீட்டை முழுவதுவமாகத் திரும்ப எடுக்கவும் செய்கின்றனர். ஆனால், சந்தை இறங்குகிறதே என்று நினைத்து முதலீட்டை முழுவதுமாகத் திரும்ப எடுப்பது தவறு. இப்படி செய்வதற்குப் பதிலாக, ரிஸ்க் மிகுந்த பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் இருக்கும் பணத்தை ரிஸ்க் குறைவான கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் எஸ்.டி.பி முறையில் மாற்றிச் செய்வதன் மூலம் பணத்தின் மதிப்பு குறைவதை எளிதாகத் தடுக்க முடியும். எஸ்.டி.பி முறையில் 'சுவிட்ச்' செய்யும்போதும் 'ரிடம்ஷன்' செய்கிற மாதிரிதான். அதுவரை கிடைத்த லாபத்துக்கு வரி கட்டத்தான் வேண்டும். எனவே, மொத்த முதலீட்டின் ஒரு பகுதியை அல்லது முழுவதுமாகவோ எஸ்.டி.பி மூலம் மாற்றுவது உத்தமம்.

அசெட் அலோகேஷன் அவசியம் பாஸ்...!
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு முதலீடு செய்யவந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே முதலீடு செய்து வருகின்றனர். இப்படி செய்வது சரியான முதலீட்டு முறை அல்ல. ஒருவர் மாதந்தோறும் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப் போகிறார் எனில், எந்தெந்த சொத்தில் எந்தெந்த அளவுக்கு முதலீடு செய்யப் போகிறார் என்பதை அவசியம் பார்க்க வேண்டும். உதாரணமாக, 10,000 ரூபாயில் 60 - 70 சதவிகிதத்தைப் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 10 - 20 சதவிகிதப் பணத்தைத் தங்கத்திலும், மீதமுள்ள பணத்தைக் கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளிலும் முதலீடு செய்வது அவசியம். நம்முடைய முதலீடு அனைத்தும் ஒரே சொத்தில் இருக்கும்போது, அந்த முதலீடு எந்த அளவுக்கு லாபம் தருகிறதோ, அந்த அளவுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், நமது முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்து வைப்பதால், ஒவ்வொரு முதலீடும் அது தரும் லாபத்துக்கேற்ப சராசரியான அளவில் நமக்கு லாபம் கிடைக்கும்.
பங்குச் சந்தை நன்கு இறங்கி இருக்கும் இந்த சமயத்தில் இந்த 5 தவறுகளையும் முதலீட்டாளர்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது!


















