பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் ச...
பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இரவு போலீஸார் கைதுசெய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மறுநாளான 10.05.2023 அன்று மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த பயிற்சி மருத்துவர் டாக்டர் வந்தனா தாஸ் (22) என்பவரை சந்தீப் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார். மருத்துவமனையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து டாக்டர் வந்தனா தாஸின் கழுத்து மற்றும் முகம் உள்ளிட்ட சுமார் 11 இடங்களில் குத்தியதுடன், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி மற்றும் போலீஸார் உள்ளிட்டவர்களையும் குத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் சந்தீபை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். டாக்டர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணம் அடைந்தார்.

கோட்டயம் குறுப்பந்தரை பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸின் ஒரே மகளான டாக்டர் வந்தனா தாஸ் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் அந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை பாதுகாப்பு அவசரச் சட்டம் 2012-ல் திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். போலீஸ் கையில் துப்பாக்கி எதற்கு என ஐகோர்ட் அந்த சமயத்தில் விமர்சித்திருந்தது. கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய டாக்டர் வந்தனா கொலை வழக்கு கொல்லம் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் 70 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். 207 ஆவணங்களும், 23 தடயங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் முதன் முதலாக மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கொலைச் செய்யப்பட்ட இந்த வழக்கை கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.என்.வினோத் விசாரித்து, சந்தீப்பிற்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் காலக் கடுங்காவல் தண்டனையும், 2.35 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையில் ஒரு லட்சம் ரூபாயை டாக்டர் வந்தனா தாஸின் குடும்பத்திற்கும், மீதமுள்ள 1.35 லட்சம் ரூபாயைத் தாக்குதலுக்குள்ளான ஹோம் கார்டு அலெக்ஸ் குட்டிக்கும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும், மேல் முறையீட்டுக்குச் செல்வதாகவும் டாக்டர் வந்தனாதாஸின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற சமயத்தில் சந்தீப் மனநோயாளி என அவரது வழக்கறிஞர் நிரூபிக்க முயன்றார். ஆசிரியராக பணிபுரிந்த சந்தீப் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், குற்றச்செயலில் ஈடுபட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருந்ததால் அவர் மீதான கொலை குற்றச்சாட்டு நிலைநிற்காது எனவும் சந்தீப் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார். மேலும் சந்தீப்புக்கு மனச்சிதைவு நோய் இருப்பதாகக் கூறி மருத்துவ அறிக்கையையும் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். அதே சமயம் சந்தீப் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட இரண்டு மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு எந்த மனநலப் பிரச்னைகளும் இல்லை என்பது தெரியவந்தது. சிறையில் சாதாரணமாகவே அவர் நடந்துகொண்டார் என்று அவரது சக கைதிகள் அளித்த வாக்குமூலங்களை மேற்கோள் காட்டினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி பிரதாப். மேலும், சிறை நூலகத்தில் இருந்து மனநோய் சம்பந்தமான புத்தகத்தை படித்து தெரிந்துகொண்டு மன நலம் பாதித்தது போன்று நடித்துள்ளார். அவர் புத்தகங்களை எடுத்ததற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சந்தீப்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.



















