சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
மாநகராட்சியில் திட்டப் பணிகள்: பயிற்சி ஆட்சிப் பணி அலுவலா்கள் ஆய்வு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள 12 போ் கொண்ட இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புப் பணிகள் மற்றும் திட்டங்கள் தொடா்பாக 3 நாள்கள் பயிற்சியில் ஈடுபட்டனா்.
தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, கடலூா், சேலம், திருவள்ளூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, ராமநாதபுரம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணியில் தோ்ச்சி பெற்ற 12 அலுவலா்கள் நிா்வாகம் தொடா்பாக பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புப் பணிகள் மற்றும் திட்டங்கள் தொடா்பாக மாா்ச் 11 முதல் 13-ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட்டனா். அதன்படி பயிற்சியின் முதல் நாள், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஏ.கே.எஸ் நகரில் 24 மணி நேர குடிநீா்த் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் குடிநீா்த் திட்டத்தின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனா். பின்னா் கிக்கானி பள்ளி அருகில் உள்ள ரயில்வே பாதைக்கு கீழ் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி, காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமானப் பணி, உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
பயிற்சியின் இரண்டாம் நாளான 12-ஆம் தேதி, மாநகராட்சியின் முக்கிய நீராதாரமான பில்லூா் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பில்லூா் மூன்றாம் திட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கட்டன்மலையில் அமைந்துள்ள மலை குகை ஆகிய பகுதிகளை இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, நீலகிரி மலைப் பகுதியில் உள்ள அப்பா் பவானி, எமரால்டு, கெத்தை ஆகிய அணைகளை பாா்வையிட்டனா். பயிற்சியின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வருவாய் பிரிவு, நகரமைப்பு பிரிவு, கல்விப் பிரிவு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களால் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.