``மாநில உரிமைகளை இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக" - எம்.பி கனிமொழி
``மாநில உரிமைகளை இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக" - எம்.பி கனிமொழி
கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அறங்காவல் குழுவினரின் ஒத்துழைப்பு இல்லை என்றக் காரணத்தால், வழக்கமாக தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இன்று தீபமேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``சனாதனம் வென்றுள்ளது!
திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூண் கற்தூணில் மங்களகரமான கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தை ஒளிரச் செய்யும் இந்தப் புனித தீபம், சனாதனத்தின் நித்திய ஆன்மாவை எந்த எதிர்ப்பாலும் ஒருபோதும் அணைக்க முடியாது, அதன் மரபுகளை மௌனமாக்க முடியாது, அதன் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான வலிமையான நினைவூட்டலாக நிற்கிறது.
ஜெய் சனாதன்! முருகனுக்கு அரோகரா! " எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு குறித்து வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, ``திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவைக்கூட முறையாகச் செயல்படுத்தத் தவறிய தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. இதன் விளைவாக மாநிலத்தின் அதிகாரம் பாதிக்கப்பட்டு, மத்தியப் பாதுகாப்புப் படைகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலுக்கு தமிழக தவெக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அதேநேரத்தில், இந்த விவகாரம் இரு சமூக மக்களிடையே பதற்றத்தையும் மோதலையும் உருவாக்குவதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது.

தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்ததும் அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும். இஸ்லாமியப் பெருமக்களும் இந்து பக்தர்களும் அவரவர் வழிபாட்டு உரிமைகளை அமைதியாகத் தொடரட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் பேச்சுகளையும் செயல்களையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb









