Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி...
மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?
திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேயர் தினேஷ்குமார் கூறும்போது,
“வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர்.
நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார்.


















