`சின்னம்மா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்' - எஸ்.பி.வேலுமணி உறுதி!
முதலமைச்சர் விஜய்யின் காஷ்மீர் `லியோ' கஃபே - அலைமோதும் தமிழக சுற்றுலாப் பயணிகள்!
காஷ்மீரின் தெற்குப் பகுதியில், பஹல்காம் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் `சிஃபார் கஃபே' (Sifar Cafe) என்ற உணவகம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் 2023-ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான `லியோ' திரைப்படத்தில், அவர் `கஃபே வைல்ட் பீன்ஸ்' என்ற காபி ஷாப் நடத்துவார். அந்த காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிஜமான இடம்தான் இந்த சிஃபார் கஃபே.

தற்போது அங்கு செல்லும் தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள், திரைப்படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட அதே சாக்லேட் காபியை எஸ்பிரெசோ, சாக்லேட் சிரப் மற்றும் பால் கலந்து விரும்பி ஆர்டர் செய்கின்றனர். மேலும், கஃபேயில் `நா ரெடி' பாடலுக்கு நடனமாடியும், அங்கு வைக்கப்பட்டுள்ள விஜய்யின் போஸ்டர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இங்கு பணியாற்றுபவர் கூறும்போது, "லியோ படப்பிடிப்பு 25 நாள்கள் இங்கு நடந்தது. விஜய் சார் பெரும்பாலும் தனது கேரவனில் அமைதியாகவே இருப்பார். அவருக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற `ட்ரௌட்' மீனை பலமுறை பரிமாறியிருக்கிறோம்" என்று நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த கஃபே லியோ படம் வந்ததிலிருந்தே பிரபலமாக இருந்தாலும், கடந்த ஒரு வாரமாக அங்கு தமிழ்நாட்டு மக்களின் கூட்டம் திடீரென அலைமோதுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் `தமிழக வெற்றிக் கழகம்' (TVK) 108 இடங்களில் அபார வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

திரைப்படத்தில் ஒரு அமைதியான கஃபே ஓனராக, இரட்டை வாழ்க்கை வாழ்பவராக நடித்த விஜய், தற்போது நிஜ வாழ்க்கையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடிவருகின்றனர். அந்த மாபெரும் அரசியல் வெற்றியின் எதிரொலிதான், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி காஷ்மீரில் உள்ள இந்த `லியோ' கஃபேயிலும் ஒரு திருவிழாவாக எதிரொலிக்கிறது!





















