தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையி...
முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற புலி; அதிர்ச்சி சம்பவம்
நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார். மாவனல்லா அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாளை இன்று மதியம் புலி ஒன்று தாக்கியிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்திருக்கிறார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சில மீட்டர் தொலைவில் நாகியம்மாளின் உடல் தனியாக தலை தனியாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவரின் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையைக் கண்டித்து உள்ளுர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " பெரும்பாலும் புலிகள் மனிதர்களை தவிர்த்துச் செல்பவை. வயது முதிர்வு அல்லது உடலில் காயங்கள் போன்ற காரணங்களால் வேட்டைத்திறனை இழக்கும் பட்சத்தில் மனிதர்களைத் தாக்குகின்றன. சம்மந்தப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகிறோம். இந்த பகுதியில் அடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் " என்றனர்.



















