ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வ...
முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?
ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் இதே திட்டத்தில் இணைய இந்தியா தயக்கம் காட்டிய நிலையில், இப்போது ரஷ்யா மீண்டும் கதவைத் தட்டியிருப்பது சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சொந்த ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA திட்டம் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், ரஷ்யாவின் இந்த ஆஃபர் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
சரி, இந்த டீலில் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன?

புதின் சொன்னது என்ன?
சர்வதேச செய்தி நிறுவனங்களுடனான ஒரு கலந்துரையாடலில் பேசிய புதின், பழைய நினைவுகளை அசைபோட்டார். "ஒரு காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்திய நண்பர்களை அழைத்தோம். ஆனால் அவர்களோ, 'நீங்க முதல்ல தனியாக உருவாக்குங்கள், பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறிவிட்டார்கள்.
அந்த விமானம் நமது கூட்டுத் திட்டமாக இருந்திருக்கலாம். இப்போது நாங்கள் அதைத் தனியாகவே உருவாக்கிவிட்டோம். ஆனாலும், இந்தியாவுடன் இந்தத் துறையில் இணைந்து செயல்பட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்," என்று புதின் கூறியுள்ளார். இது வெறும் ஒரு சலுகை மட்டுமல்ல, பழைய நட்பை நினைவூட்டும் ஒரு ராஜதந்திர நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏன் முன்பு பின்வாங்கியது?
அப்படியென்றால், இவ்வளவு பெரிய ஆஃபரை இந்தியா ஏன் 2018-ல் நிராகரித்தது?
கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் நடந்த இந்த FGFA (Fifth Generation Fighter Aircraft) திட்டத்தில், இந்தியா சுமார் $300 மில்லியன் டாலரை ஆரம்பகட்ட வடிவமைப்புக்காக முதலீடு செய்திருந்தது. ஆனால், செலவுப் பகிர்வு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் விமானத்தின் தொழில்நுட்பத் தரம் குறித்த கருத்து வேறுபாடுகள்தான் முக்கியக் காரணங்கள். குறிப்பாக, Su-57-ன் ஸ்டெல்த் (Stealth) திறன்கள், அதாவது எதிரி ரேடார்களின் கண்களில் படாமல் பறக்கும் திறன், அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கு இணையாக இல்லை என்பது இந்திய விமானப்படையின் பெரிய கவலையாக இருந்தது. அதோடு, அடுத்த தலைமுறை இன்ஜின்கள் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதமும் இந்தியாவின் தயக்கத்துக்கு முக்கியக் காரணம்.

Su-57... அப்படி என்ன ஸ்பெஷல்?
ரஷ்யாவின் சுகோய் டிசைன் பீரோவால் உருவாக்கப்பட்ட இந்த Su-57, அமெரிக்காவின் F-22 ராப்டார் மற்றும் F-35 லைட்னிங் II போன்ற விமானங்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டது. தரை, கடல், வான் என அனைத்து வகையான இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. சூப்பர்சோனிக் வேகத்தில் பறப்பது, அதிநவீன சென்சார்கள், எலக்ட்ரானிக் வார்ஃபேர் சிஸ்டம்ஸ் என ஒரு முழுமையான பேக்கேஜ்.
மோசமான வானிலையிலும், எதிரிகளின் ஜாமிங் மத்தியிலும் செயல்படும் திறன் இதற்கு உண்டு. சமீபத்தில், அதிக உந்துதலைத் தரும் 'Izdeliye 177' என்ற புதிய தலைமுறை இன்ஜினையும் இதில் பொருத்தியிருக்கிறார்கள். சிரியா மற்றும் உக்ரைனில் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரே ஐந்தாம் தலைமுறை விமானம் இதுதான் என ரஷ்யா பெருமை பேசுகிறது. அதோடு, இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு புதிய வேரியன்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது இருக்கை, டிரோன்களைக் கட்டுப்படுத்தும் ஒரு டாக்டிக்கல் கமாண்ட் ஸ்டேஷனாக செயல்படும் என்பது வேற லெவல் அப்டேட்!
இப்போதும் இந்தியா தயங்குவது ஏன்?
இத்தனை அம்சங்கள் இருந்தும் இந்தியா ஏன் இன்னும் தயங்குகிறது?
காரணம், தொழில்நுட்பம் மட்டுமல்ல, ராஜதந்திரமும் இதில் அடங்கியுள்ளது. ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport) நிறுவனம், இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஏற்றவாறு தனது நிபந்தனைகளை மாற்றியிருந்தாலும், இந்தியாவின் பார்வை இப்போது பரந்து விரிந்துள்ளது.
ரஷ்யா இந்தியாவின் நீண்டகால நட்பு நாடு என்றாலும், இப்போது அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுடனும் இந்தியா பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தி வருகிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், சப்ளை-செயின் சிக்கல்கள் எனப் பல விஷயங்களை இந்தியா யோசிக்க வேண்டியுள்ளது. F-35 போல ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படாமல், Su-57 இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்படுவதும் ஒரு மைனஸ் பாயின்ட்.
இந்தியாவின் சொந்த ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA, 2030-களின் மத்தியில்தான் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காத்திருப்பதா, அல்லது பிராந்திய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ரஷ்யாவின் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்வதா என்பதுதான் இப்போது இந்திய பாதுகாப்புத் துறை முன் இருக்கும் பெரிய சவால். தொழில்நுட்பம், விலை, ராஜதந்திரம் என அனைத்தையும் எடைபோட்டுத்தான் இந்தியா ஒரு முடிவை எடுக்கும்.













