TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?
மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு
மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பன்வெல் என்ற இடத்திற்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த ஹர்ஷ் பட்டேல்(25) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ரயிலில் மயங்கி விழுந்தார். ரயிலில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
ரயில் வாஷி ரயில் நிலையம் வந்தபோது பயணி அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்ற ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு பார்த்தால் டிரைவரை காணவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் மதிய உணவு சாப்பிட சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸ் ஜீப் ஒன்றில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை டாக்டர்கள் சோதித்ததில் அவர் இறந்திருந்தார். கடுமையான மாரடைப்பு காரணமாக இறந்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நோயாளியை காப்பாற்றி இருக்க முடியும். இது குறித்து ரயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண் கூறுகையில்,''ஆம்புலன்ஸ் டிரைவர் 24 மணி நேரமும் பணியில் இருக்கவேண்டும். ஆம்புலன்ஸை தனியாக விட்டு விட்டு டிரைவர் செல்வது கவனக்குறைவு ஆகும். இறந்தவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்னை இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்''என்றார்.
இது குறித்து ஹர்ஷ் பட்டேல் சகோதரி அம்பிகா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''வாஷி நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி இல்லாததால் எனது சகோதரர் உயிரிழந்ததார். ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி அல்லது முதலுதவி வசதி இல்லை. ஸ்ட்ரெச்சர் இல்லாததால் துணியில் எனது சகோதரனை ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்ல சக பயணிகள் உதவினர். ஸ்டேஷனுக்கு வெளியே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஓட்டுநரை காணவில்லை. மதியம் 2.10 மணியளவில் எனது சகோதரனை ஆம்புலன்சுக்குள் வைத்துவிட்டு டிரைவர் வருவதற்காக காத்திருந்தோம்.
மருத்துவ அவசரத்தில் அந்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால், முக்கியமான நேரத்தில் எனது சகோதரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டது''என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸில் ஹர்ஷ் பட்டேல் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். வாஷி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சில நேரம் சொல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்வதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.


















