Gold: 'தங்கம் வாங்க சூப்பரான நேரம் இதுதான்' - ஆனால், இந்தியர்களால்தான் முடியாதே;...
`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!
2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணியும், அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தியின் வியூகமும் பா.ஜ.க-விற்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை 99 ஆக உயர்த்தி ஒரு மறுமலர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்தது.
ஆனால், சமீபத்திய டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மற்றும் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் முதல் சலசலப்பை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளிப்படுத்தினார். "காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தொடர்ந்து டெல்லியில் சண்டை போட்டுக் கொண்டே இருங்கள், பா.ஜ.க எளிதாக வெற்றி பெறட்டும்" என உமர் அப்துல்லா டெல்லி தேர்தலில் 'காங்கிரஸ் - ஆம் ஆத்மி' கட்சிகள் வாக்குகளைப் பிரித்துக் கொண்டதை கடுமையாக விமர்சித்தார்.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் கட்டமைப்புச் சிக்கல் வெளிப்படையாகத் தெரிந்தது. காங்கிரஸ், என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யு.பி.டி) என மூவரும் 'மகாவிகாஸ் அகாடி' பேரணியாகப் போட்டியிட்டாலும், தொகுதிப் பங்கீட்டில் நிலவிய உள்முரண்பாடுகள் கடைசி வரை தீரவில்லை. ஒரே கூட்டணிக்குள் இருந்த கட்சிகள் சில தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொண்ட நிலையில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மகாராஷ்டிரா முடிவு 'இந்தியா' கூட்டணிக்கு தேர்தலிலும், கூட்டணி ஒற்றுமையிலும் என இரட்டைத் தோல்வியாக அமைந்தது.

டெல்லி தோல்விகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியை மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கினார். அதற்கு காரணம் 2027-ம் ஆண்டு வரும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல். இந்த தேர்தலில் உ.பி.யில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட சமாஜ்வாடி தயாராக உள்ளது. வாக்குகளைப் பிரிக்காமல் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே முதன்மை இலக்கு என்பதால், காங்கிரஸுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற சிறிய கட்சிகளுக்கு இடங்களை மிச்சப்படுத்தவும் அகிலேஷ் திட்டமிட்டிருக்கிறார். மேலும், 'பா.ஜ.க-வை வீழ்த்த யார் தகுதியான நிலையில் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தொகுதிப்பங்கீடு செய்யப்பட வேண்டும்' என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.
அதே நேரம், காங்கிரஸ் 'தான் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் முதலில் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறது. அதன் காரணமாகவே, இந்தியா கூட்டணி தேசிய அளவில் ஒன்றிணைந்தாலும், மாநில அளவில் நிலவும் முரண்பாடுகளால் மிகவும் பலவீனமாகவே காட்சித் தந்தது.
அதற்கு உதாரணமாக மேற்கு வங்கத்தைக் குறிப்பிடலாம். மம்தா பானர்ஜி காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கிறார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026-ல் 'திரிணாமுல் காங்கிரஸ் தனியாகப் போட்டியிடும்' என அறிவித்த அவர், காங்கிரஸுக்கு எதிராகவும் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதேப்போல காங்கிரஸும் மம்தா பானர்ஜிக்கு எதிராக 'பயங்கரவாத அரசு' என பிரசாரம் மேற்கொண்டது. ராகுல் காந்தி, 'வங்காள யாத்திரை'யின் மூலம் நேரடியாக பிரசார களத்தில் இறங்கினார்.

இப்படி இந்தியா கூட்டணிக்குள் இருந்த முரண்பாட்டின் விளைவாக, மேற்கு வங்கம் யாருமே கணித்திராத ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அம்மாநிலத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க 206 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் 81 இடங்களாகக் குறைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆம் ஜனதா உன்னயன் கட்சி ஆகியவை தலா இரண்டு இடங்களையும், சிபிஐ(எம்) மற்றும் அகில இந்திய செக்யூலர் ஃபிரண்ட் ஆகியவை தலா ஓர் இடத்தையும் கைப்பற்றின. எனவே, தனிப்பட்ட கட்சிகளின் வெற்றி தோல்வி என்பதை கடந்து கவனித்தால், ஒட்டுமொத்தமாக 'இந்தியா கூட்டணி' மேற்கு வங்கத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
அதேப்போல கேரள மாநிலத்திலும் இந்தியா கூட்டணிக்குள் சிக்கல்கள் தொடர்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான நேரடிப் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ், சிபிஎம் கட்சியின் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை வரவேற்றிருந்தது. இதில் இன்னொரு நகைமுரண், இதே காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்தது. காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு 'சட்டையை மாற்றிக்கொள்ளும்' இரட்டை நிலைப்பாடு, இந்தியா கூட்டணிக்குள் மட்டுமல்லாமல் வாக்காளர்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் களத்தில் மோதிக் கொண்டாலும், கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும் பரம எதிரிகளாகவே இருந்தாலும், அதன் தேசியத் தலைவர்கள் 'இந்தியா கூட்டணி'யின் ஒரே மேடையில் அமர்ந்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் ஒருபுறம் கூட்டணிப் பேசிவிட்டு, மறுபுறம் பிராந்தியத்தில் நேரடியாக மோதிக்கொண்டன.
இப்படியான முரண்பாடுகளுக்கு நடுவேதான் 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க-வை 240 இடங்களுடன் சுருக்கியது இந்தியா கூட்டணி. ஆனால், முறையான கட்டமைப்பு இல்லாததன் விளைவாக தலைமை வெற்றிடம் உருவானது.
ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாற முயன்றபோது, மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்தினார். கூட்டணிக்குள் யார் தலைமை ஏற்பது என்ற தெளிவற்ற நிலையில் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியில் தொடர வேண்டிய அவசியமில்லாமல் போனது. அதற்குப் பிறகு சில வாரங்களிலேயே அவர் என்.டி.ஏ கூட்டணிக்கு மாறினார். நவம்பர் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ வெற்றி பெற்றதால், நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்தியா கூட்டணியில் சுமூகமான உறவு இருந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதற்கு காரணம் ஸ்டாலின் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட பொறுப்பு. அதாவது, இந்தியா கூட்டணியில் இருந்த முக்கியத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் தலைவராக தி.மு.க-வின் ஸ்டாலின் முன்னின்றார். மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் ஆகியோருக்கு மத்தியில் இருந்த முரண்பாட்டை நீக்கவும், இந்தியா கூட்டணியின் அஸ்திவாரத்துக்கும் உழைத்தார். தேசிய அளவில் கூட்டணியை ஒட்டுமொத்தமாகக் கட்டிக்காத்த ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸுக்கு தமிழ்நாட்டிலும் கூடுமானவரை நேர்மையான கூட்டணியாளராகவே நின்றார்.
ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், தி.மு.க-வை ஒதுக்கி த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளித்தது. இந்த நடவடிக்கை தி.மு.க-வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டிலும் இந்தியா கூட்டணிக்குள் சிக்கல் தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவித்தது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா (யு.பி.டி), இடதுசாரிகள் உள்ளிட்ட மொத்தம் 15 கட்சிகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி திடீரென த.வெ.க பக்கமாகச் சென்றதால், 'காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' எனவும், 'நாடாளுமன்றத்தில் காங்கிரஸிடமிருந்து பிரித்து தனி அமர்வுக்கான இடம் ஒதுக்க வேண்டும்' எனவும் தி.மு.க தெரிவித்திருக்கிறது. தி.மு.க-வின் இந்த நடவடிக்கை, காங்கிரஸின் செயல்பாடுகளால் தி.மு.க கடும் அதிருப்தியில் இருப்பதைக் காண்பிக்கிறது.
மம்தாவின் அதிருப்தி, அரவிந்த் கெஜ்ரிவாலின் விமர்சனம் என எல்லாவற்றையும் கடந்து இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் பொதுவான தலைவராக இருந்த ஸ்டாலின், இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு, இந்தியா கூட்டணியை எத்தகைய மாற்றத்துக்கு கொண்டு செல்லும் என்பது காலத்தின் பிடியில் இருக்கும் முடிச்சு.
தற்போதைய சூழலில் ராகுல் - அகிலேஷ் இடையேயான உறவுதான் 'இந்தியா' கூட்டணிக்குள் ஓரளவுக்குச் செயல்படும் இருதரப்பு கூட்டணியாக எஞ்சியுள்ளது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸும், காங்கிரஸுக்கு அகிலேஷ் யாதவும் முக்கியம் என்பதால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இந்தியா கூட்டணி சுமூகமாக தொடர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டணியின் இந்தப் பலவீனத்துக்கு முக்கியக் காரணம், தங்களுக்கென்று பொதுவான குறைந்தபட்ச திட்டத்தைக்கூட இந்தக் கூட்டணி உருவாக்காததே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட UPA அரசுகளுக்கு பொதுவான திட்டங்கள் இருந்தன. அவை கூட்டணிக் கட்சிகளை ஒரு புள்ளியில் இணைய வைத்தன. ஆனால், 'இந்தியா' கூட்டணி அப்படி ஒரு திட்டத்தை உருவாக்காமல், 'மோடியை எதிர்ப்பது' என்ற ஒரே ஒரு புள்ளியில் மட்டுமே ஒன்று சேர்ந்தனர். இது ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி என்பதை விட, வெறும் மனநிலை சார்ந்த கூட்டணியாகவே அமைந்துவிட்டது. அதனால்தான் இப்போதுவரை 'கூட்டணியை யார் வழிநடத்துவது, யார் பின் தொடர்வது, இந்தத் தளம் எதற்காக உருவாக்கப்பட்டது' என்ற தெளிவான புரிதல் இல்லாமல் கூட்டணி அல்லாடுகிறது.
எனவே இனி இந்தியா கூட்டணியின் பயணம் மூன்று திசைகளில் செல்லலாம்.
முதலாவது, காங்கிரஸ் தலைமையில் UPA போன்று ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்கி, கூட்டணி மீண்டும் இணைக்கப்படலாம். இதற்கு காங்கிரஸ் தனது மாநில அளவிலான இரட்டை நிலைப்பாட்டை கைவிட தயாராக வேண்டும். அது இப்போதைக்கு சாத்தியமாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
இரண்டாவது, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸை விலக்கி, இரண்டு தேசியக் கட்சிகளிலிருந்தும் சுதந்திரமாக ஒரு மூன்றாவது தேசியத் தளத்தை உருவாக்கலாம். மம்தா பானர்ஜி ஏற்கெனவே இந்தப் பாதையில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.
மூன்றாவது, இந்தியா கூட்டணி என்ற பெயரில் கட்டமைப்பு தொடர்ந்தாலும், மாநில அளவில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக செயல்படும் ஒரு தளமற்ற நிலை நீடிக்கலாம். இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கும் யதார்த்தம்.
28 கட்சிகளை ஒரே மேடையில் திரட்டிய 'இந்தியா' கூட்டணிக்கு கொள்கை இல்லை என்பது பலவீனம் மட்டுமல்ல, அதுவே அதன் மிகப்பெரிய அடையாள நெருக்கடியும் கூட.!














