கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணா...
"மோனலிசாவுடன் ஒப்பிடாதீர்கள்; நான் சிங்கப்பெண்" - கன்வார் யாத்திரையில் வைரலாகி வரும் மானசி
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி, உத்திராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்த மோனலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
அவரது வீடியோக்கள் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு மோனலிசா கேரளாவில் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் கன்வார் ஆன்மிக யாத்திரை நடந்து வருகிறது.
இந்த யாத்திரை நடக்கும் வழித்தடங்களில் இருக்கும் அனைத்து உணவகங்களும் கட்டாயம் உணவகத்தின் உரிமையாளர் பெயர்களை பெயர்ப்பலகையில் குறிப்பிட வேண்டும் என்றும், அந்த வழித்தடத்தில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கன்வார் யாத்திரையில் மானசி ராஜ்புத் என்று அழைக்கப்படும் மானசி தாக்கூர் 61 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய 'கன்வார்' ஒன்றைச் சுமந்துகொண்டு 180 கிலோமீட்டர் தூர 'கன்வார் யாத்திரை'யை மேற்கொண்டுள்ளார்.
அவர் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார். மேலும் அவரது தனித்துவமான பழுப்பு நிறக் கண்கள் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகா கும்பமேளாவின்போதும் மானசி இணையத்தில் வைரலாகியிருந்தார்.
அந்தச் சமயத்தில், அதே நிகழ்வின்போது இணையத்தில் பிரபலமடைந்த மோனலிசாவுடன் பல சமூக ஊடகப் பயனர்கள் மானசியின் தோற்றத்தை ஒப்பிட்டுப் பேசினர்.
தன்னைப் பற்றிய ஒப்பீடுகள் மற்றும் அதிகரித்து வரும் தனது புகழ் குறித்து பற்றி மானசி அளித்த பேட்டியில், ''மோனலிசாவுடன் என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவதை நான் விரும்புவதில்லை. மோனலிசாவுடன் என்னை தொடர்புபடுத்தக் கூடாது.
நான் சனாதனத்தைப் பின்பற்றுபவள். மகாசிவனின் பக்தை. இணையத்தில் பிரபலமாக அறியப்படும் மற்றொருவருடன் ஒப்பிடப்படுவதை விட, சிவபெருமான் மீதான தனது பக்திக்கு அங்கீகாரம் கிடைக்கவே விரும்புகிறேன்.
மோனலிசா முஸ்லிம் பிரமுகரைத் திருமணம் செய்து கொண்டார். அதை நான் விரும்பவில்லை. நான் எனது இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். எனது சொந்த அடையாளத்தின் மூலம் மக்கள் என்னை அடையாளம் காணவேண்டும்.
நான் மான்சி தாக்கூர். கன்வார் யாத்திரையின் வைரலான 'ஷெர்னி' (பெண் சிங்கம்) மற்றும் மான்சி ராஜ்புத் என்று நான் அழைக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.
ஆரம்பத்தில் தனது தோற்றத்திற்காகவும், நடிகை மோனலிசாவுடனான ஒப்பீட்டிற்காகவும் அறியப்பட்ட மான்சி, இப்போது சிவபெருமான் மீதான பக்தி மற்றும் கன்வார் யாத்திரையை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முயன்று வருகிறார்.














