செய்திகள் :

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் இவர்?

post image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பொறியியல் பட்டதாரியான நாதன் தாமஸ், உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த வரலாற்றுச் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

நாதன் தாமஸ் தனது 18 வயது 346 நாட்களில், 'மியாமி டேட்' கல்லூரியில் (Miami Dade College) பேராசிரியராகப் பணியில் சேர்ந்ததன் மூலம் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதற்கு முன்பு 1717-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கொலின் மெக்லாரின் தனது 19 வயதில் பேராசிரியரானதே உலக சாதனையாக இருந்தது.

Nathan Thomas
Nathan Thomas

மேலும், 2008-ம் ஆண்டு 18 வயது 362 நாட்களில் உலகின் மிக இளம் பெண் பேராசிரியராக சாதனை படைத்த ஆலியா சபூர் என்பவரின் சாதனையை விட நாதன் தாமஸ் 16 நாட்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாதன் தாமஸின் இந்த அசாத்திய கல்விப் பயணம் அவரது சிறுவயதிலேயே தொடங்கியது. தனது 10-வது வயதில் பள்ளியில் படித்துக்கொண்டே மியாமி டேட் கல்லூரியில் பகுதிநேர வகுப்புகளில் சேரத் தொடங்கினார். பின்னர் 14 வயதில் 'புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில்' இணைந்து பொறியியல் படிப்பைத் தொடர்ந்தார்.

தனது 18 வயதிற்குள் மின் பொறியியல் (Electrical Engineering) துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரட்டைப் பட்டங்களையும் சிறப்புத் தகுதியுடன் (Honours) முடித்து அசத்தினார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023-ல் தன் கற்றல் தொடங்கிய அதே மியாமி டேட் கல்லூரிக்கு, 'பொறியாளர்களுக்கான சி-மொழி' (C for Engineers) பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராகவே அவர் மீண்டும் கம்பீரமாக அடியெடுத்து வைத்தார்.

"நான் எப்போதாவது ஒருநாள் இங்கு வந்து பாடம் நடத்துவேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் 'ஒருநாள்' என்பது இவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகும் என்று நினைக்கவில்லை. வகுப்பறையில் என்னுடன் படிக்கும் மாணவர்களில் பலர் எனது சொந்த வயதையோ அல்லது அதைவிட மூத்த வயதையோ உடையவர்கள் என்றாலும், அது ஒருபோதும் எனக்குச் சவாலாக இருந்ததில்லை.

Nathan Thomas
Nathan Thomas

வகுப்பறைக்குள் வந்துவிட்டால் அனைவரும் கற்பதற்காகவே ஒன்றிணைகிறோம், அங்கு வயது ஒரு பொருட்டல்ல. மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பிப்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கிறது" என்று நாதன் தெரிவித்துள்ளார். நாதனின் இந்த முயற்சிக்குக் கல்லூரி நிர்வாகமும், சக பேராசிரியர்களும் பெரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வரும் நாதன் தாமஸ், 2028-ல் தனது பட்டத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பொறியியல் அறிவையும் சட்டப் படிப்பையும் இணைத்து காப்புரிமைச் சட்டத் துறையில் (Patent Law) முத்திரை பதிப்பதோடு, கற்பிக்கும் பணியையும் தொடர விரும்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

``ராகுலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வையுங்க" - இர்பானிடம் கலகலப்பாகப் பேசிய பிரியாங்கா காந்தி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்... மேலும் பார்க்க

`அடிமையாக்கும்’ வகையில் வடிவமைப்பு'- இன்ஸ்டா, பேஸ்புக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் பயனர்களை தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) குற்றம் சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்திற்க... மேலும் பார்க்க