’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாள...
ராணிப்பேட்டை: நகைக்காக தாயைக் கொன்ற மகள் கைது - ஆண் நண்பரிடமும் போலீஸ் தீவிர விசாரணை!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்திருக்கும் தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் கீதா. இவரது கணவர் ரவி, லாரி ஓட்டுநராக சென்னையில் வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு சரண்யா, சுகன்யா என்று இரு மகள்கள். இதில் மூத்த மகள் சரண்யா கணவரைப் பிரிந்து, தனது இருப் பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். தற்போது, சரண்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்து சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பேரப்பிள்ளைகள் இருவரும் வீட்டுக்குள் பாட்டி கீதா ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்துபோயினர். இது குறித்து தகவலறிந்ததும் வாலாஜாபேட்டை போலீஸார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டில் இருந்த கீதாவுக்குச் சொந்தமான 10 பவுன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணமும் மாயமானதாகவும் தெரியவந்தது.
இதனால், `கொள்ளையர்கள் நகை, பணத்துக்காக கீதாவை கொலை செய்திருக்கலாம்’ என்று முதற்கட்டமாக போலீஸார் சந்தேகித்தனர். கைரேகை நிபுணர்களையும் வரைவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கீதாவின் கொலையில் அவரது மூத்த மகள் சரண்யாவுக்குத் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தாயை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். கீதாவிடம் சொந்தமாக 30 பவுன் நகைகள் இருக்கின்றன. அந்த நகைகளை தனது சொந்த தேவைக்காக அடகு வைப்பதற்காக தருமாறு தாய் கீதாவிடம் சரண்யா கேட்டுவந்திருக்கிறார். நகைகளை தாய் கீதா தர மறுத்ததால், சரண்யா ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று தாய் கீதாவிடம் கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்துக்குமேல் தாய் என்றும் பார்ககாமல், கீதாவை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் மகள் சரண்யா. இதைத்தொடர்ந்து, வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார் சரண்யா. தாய் கீதா கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைத்தவுடன் எதுவும் தெரியாததுபோல வீட்டுக்கு வந்து தாயின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதை போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.
சரண்யாவை கைது செய்திருக்கும் போலீஸார், அவருடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஆண் நண்பரையும் பிடித்து அவருக்கும் கொலையில் தொடர்பிருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



















