"சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!" - பாதுகாப்பாளர...
``ரூ75,000 கடனில் 35,000 மட்டுமே தள்ளுபடி; இது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்"- குமுறம் விவசாயிகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில், தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், கள அளவிலான நடைமுறை முரண்பாடுகளாலும் குழப்பங்களும், குளறுபடிகளும் நீடிப்பதாக விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடியில் தங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி, எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் ரூ.35 ஆயிரம் தள்ளுபடி போக, மீதமுள்ள கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் வரும் நவம்பர்-30க்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து தென் மாவட்ட விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் எம். அர்ச்சுனன்
“ தமிழ்நாடு முதல்வர் அறிவித்த திட்டத்தின் அடிப்படையில், ரூ.75,000 வரை அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் என அரசாணையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ரூ.75,000 போக மீதமுள்ள தொகையை மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது என்றுதான் அரசின் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால்,கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வேறு விதமாகச் செயல்படுகின்றனர். ரூ.75,000 தள்ளுபடியில் ரூ.35,000-த்தை உடனடியாகத் தள்ளுபடி செய்வதாகவும், மீதமுள்ள ரூ.40,000-த்தைத் தள்ளுபடி பட்டியலில் சேர்க்காமல் பின்னால் வரவு வைப்பதாகவும் கூறுகின்றனர். இதனால் அந்த ரூ.40,000 தொகை நிலுவையில் இருப்பதாகக் காட்டப்பட்டு, விவசாயிகளுக்குப் புதிய கடன் பெறுவதற்கான தகுதி கிடைக்காமல் அடிபட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று, அரசு அறிவித்ததைக் கூட்டுறவுத் துறை செய்வதில்லை; மற்றொன்று, தள்ளுபடி பட்டியலில் இடம்பெறாததால் புதிய கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படுகிறது. முதல்வர் அறிவித்து, அரசாணை வெளியிட்டதற்கும் நேர்மாறாகக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் செயல்படுவது அரசுக்குத்தான் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கும் புதிய கடன் கிடைக்காததால் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும். போதிய மழை இல்லாததால் பயிர்கள் எல்லாம் கருகிக் கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இந்தச் சூழலில் அரசு அறிவித்த கடன் தள்ளுபடியிலும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் குழப்பம் விளைவிப்பது விவசாயிகளை மேலும் கவலைக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகச் சில கூட்டுறவுச் சங்கங்களில் ஆட்களைத் திரட்டிச் சென்று பிரச்சனைகள் நடந்துள்ளன. சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளோம்; மாவட்ட ஆட்சியரும் கூட்டுறவுப் பதிவாளரிடம் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து பேசிய விவசாயிகளும் இதே கருத்தைத்தான் கூறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல விவசாயிகளும் இந்தப் புகாரை எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தக் கடன் தள்ளுபடி விஷயத்தில் கூட்டுறவு இணைப்பதிவாளர் போன்ற உயர் அதிகாரிகளும்கூட உண்மைக்கு மாறாகப் பேசுகின்றனர். அரசு அறிவித்த அரசாணைக்கு விரோதமாகவும், முதல்வரின் அறிவிப்புக்கு விரோதமாகவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் செயல்படுவதால், தென் மாவட்டங்களில் ஏராளமான புகார்கள் வருகின்றன; இதுகுறித்து கூட்டுறவுத் துறைக்கு தமிழக அரசு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் மாவட்ட ஆட்சியர்களும் இந்த கடன் தள்ளுபடி முழுமையாகச் செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அரசின் உதவி விவசாயிகளைச் சென்றடையும்..” என்றார்.
இந்தப் புகார் குறித்துக் சிவகங்கை மாவட்ட கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று விளக்கம் கேட்டோம்.
“விவசாயிகளிடம் கடன் தொகையை வட்டியுடன் கட்டாயப்படுத்தி வசூலிக்க வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு அறிவித்த ரூ.75 ஆயிரம் தள்ளுபடி போக மீதமுள்ள உள்ள கடன் தொகையைத்தான் வசூல் செய்யச் சொல்லி உள்ளோம். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் தேவையான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடன் தள்ளுபடி தொடர்பான விவரங்களும் கிட்டத்தட்ட அனைவருக்கும் சென்றடைந்துவிட்டன; அனைத்தும் சரியான முறையில்தான் சென்று கொண்டிருக்கின்றன…” என்றார்.



















