செய்திகள் :

`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ - பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

post image

புதுச்சேரியின் பிரபல தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான தட்டாஞ்சாவடி செந்தில், முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர். இவர் காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அதுகுறித்து கடந்த 20.1.2025 அன்று விகடன் இணையப்பக்கத்தில், `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்திடம் விளக்கம் பெற முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தோம்.

பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

அதையடுத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோவை நமக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த வீடியோவில், `இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் கொலைக் குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் என்ற ரௌடி, காலாப்பட்டு பகுதியில் இருக்கும் மூன்று கம்பெனிகளை மிரட்டி மாமூல் வாங்கச் சென்றார்.

அதையடுத்து, `காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு வேலை கேட்டுத்தான் அந்த கம்பெனிகளுக்குச் சென்றேன்’ என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. வேலை கேட்டுச் செல்பவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்களுடன் செல்லலாம்.

ஆனால் தட்டாஞ்சாவடி செந்திலுடன் சென்ற 70 பேர்களில், எத்தனை பேர் கொலைக் குற்றவாளிகள் என்று நான் பட்டியல் போட்டுத் தருகிறேன். கொலை, கட்டப்பஞ்சாயத்து என அனைத்தையும் செய்தவர் அவர். அவர் வீட்டுக்குச் வந்த மடுவுபேட் முரளி என்பவரை, அங்கேயே கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசியவர்.

அந்த சம்பவத்தில் அவர் தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அனைத்து செய்தித்தாள்களிலும் அது வந்தது. அதன்பிறகு எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சனால் கைது செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் அவர் முட்டி போட்டுக் கொண்டிருந்த போட்டோ என்னிடம் இருக்கிறது.

கொலை செய்யப்பட்ட உமாசங்கர், ஜோசப்

அதன்பிறகு 2016-ல் வன்னியர் என்ற போர்வையில், அனைத்து தொகுதிகளில் இருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடம் சென்று பணம் கேட்டு வருகிறார். இவை அனைத்தையும் என்னால் நிரூபிக்க முடியும். 2016 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நான் சுயேட்சையாகப் போட்டியிட்டேன்.

அப்போது காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் வன்னியர் சமூக மக்களை வைத்துக் கொண்டு, என்னிடம் ரூ.60 லட்சம் பேரம் பேசியவர் இவர். ஆனால் தற்போது வன்னியர் சமூகத்தின் போராளி என அவரை அவரே சொல்லிக் கொள்கிறார்.

அந்தத் தேர்தலில் யார் யாரிடம் இவர் எவ்வளவு வாங்கினார் என்று என்னால் சொல்ல முடியும். என்னிடமே பணம் கேட்டவர் இவர். காலாப்பட்டு தொகுதி வன்னியர் மக்களை வைத்து வியாபாரம் செய்ய வந்த வியாபாரி இவர்.

தட்டாஞ்சாவடி செந்தில் என்று சொல்லிக் கொள்ளும் இவர், தட்டாஞ்சாவடியில் நின்றால் விலை போகமாட்டாரா ? தட்டாஞ்சாவடி செந்தில் எவ்வளவு பெரிய கொலைக் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் அங்கு விலைபோக முடியாது என்பதால் காலாப்பட்டு தொகுதிக்கு வருகிறார். அதேபோல நான் தேர்தலுக்கு பயந்து ஜோசப்பையும், சந்திரசேகரையும் கொலை செய்துவிட்டதாக சொல்கிறார். 15.02.2017 அன்று நடைபெற்ற மடுவுப்பேட் முரளி கொலை வழக்கில், குற்றவாளியாக சிறையில் இருந்தவர் தட்டாஞ்சாவடி செந்தில்.

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

ஜோசப் கொலை செய்யப்பட்டது 30.07.2018. அப்போது இவர் சிறையில் இருந்தார். 24.09.2019 அன்று சந்திரசேகர் கொலை செய்யப்படுகிறார். அப்போதும் இவர் சிறையில் இருந்தார். அதாவது மூன்று ஆண்டுகள் கொலை வழக்கிற்காக சிறையில் இருந்தார்.

ஜோசப், சந்திரசேகர் உயிருடன் இருக்கும்போதே, 2011 தேர்தலில் 6,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானை தோற்கடித்தேன். அப்படி இருக்கும்போது நான் யாருக்காக அவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் ?

இவர் இருபதுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கும் குற்றவாளி. ஆனால் அவரைப் போல என் மீது ஏதேனும் வழக்கு இருந்தால் நான் அரசியலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Kerala: "Complete Non-Veg" வைரலான பதாகை; இணையத்தில் எதிர்வினைகள் என்ன?

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தின் அறிவிப்புப் பலகை தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அதில் வழக்கத்துக்கு மாறாக "நாங்கள் முற்றிலும் அசைவ உணவகம்" என எழுதப்பட்டிருந்தது. @RishiJo... மேலும் பார்க்க

காசா: 7 கி.மீ நீளம், 25 மீ ஆழம், 80 அறைகள்; இஸ்ரேல் கண்டறிந்த ஹமாஸின் மர்ம சுரங்கம்!

இஸ்ரேலிய ராணுவத்தின் (IDF) அதிரடிப் படையினர், காஸா பகுதியில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். லெப்டினன்ட் ஹடார் கோல்டின் உடல், இந்தச் சுரங்கத்தில்தான் ஹமாஸ் பயங... மேலும் பார்க்க