MASK Movie Public Review | FDFS | Kavin, Andrea J, Ruhani Sharma | GV Prakash Ku...
"கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு..." - எடப்பாடி பழனிசாமி
மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்று விதிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக-வினர் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேகதாது விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, "மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி பிரச்னையை தீர்க்கலாம்.
அதேபோல் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசு கவனக்குறைவாக அனுப்பி இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை சமர்பிக்கும் போது, 2011 மக்கள் தொகையை திமுக குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டிருந்தால், ஒப்புதல் கிடைத்திருக்கும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கோவை, மதுரை திட்டத்தில் மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு காரணமே நிரந்தர டிஜிபியை நியமிக்காதது தான். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று திமுகவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.
















