SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! படமாக வ...
"அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்"-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு துரைசாமி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுப்புலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி வழங்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளார். வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அறையில் உறங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மாடியில் இருந்த அறையில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலையில் சுப்புலட்சுமி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதும், நகைகள் மாயம் ஆகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருக்கக்கூடிய கை ரேகைகளை ஆய்வு செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு இதேபோல், துரைசாமி வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது அதே வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "கடந்த 2023-இல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரிக்கப்பட்டது. அதைவைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரத்தைச் சேர்ந்த அணில்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 பவுன் நகைகளும் மீட்கப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்" என்றனர்.

















