ஜொலிக்கும் மெட்ராஸ் சட்டக் கல்லூரி : புதுப்பொலிவுடன் 126 ஆண்டுகள் பழமையான பாரம்ப...
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு போக்சோ விசாரணைக் கைதிகளுக்கான பிளாக்கில் இருந்து திருமலைக்குமார் மீது கடந்த 12-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சிறை வளாகத்தில் உள்ள குளியலறையில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட சக கைதிகள் உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெருமாள்புரம் காவல்நிலைய போலீஸார் திருமலைக்குமாரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போன்று கடந்த அக்டோபர் 14-ம் தேதி, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் இரண்டு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீபாவளி பண்டிகையின்போது ஜாமீன் கிடைக்காததால் அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், வினோத்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை பெற்றுச் சென்றனர். தற்போது இரண்டாவது தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
















