மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த...
ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

ராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் முனியராஜ்(21). இவர் ஷாலினியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஷாலினியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து ஷாலினி தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஷாலினியின் தந்தை நேற்று முனியராஜை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாலினி இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். சேரான்கோட்டை வீதியில் ஷாலினியை வழிமறித்த முனியராஜ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தினால் ஷாலினியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் உடன் வந்த இரு மாணவிகளும் இச்சம்பவத்தைக் கண்டு மயங்கி விழுந்தனர் மாணவிகளின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாணவிகள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முனியராஜ் அங்கிருந்து தப்பி தலைமறைவானார் தகவல் அறிந்து வந்த மாணவியின் உறவினர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மற்றும் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா, நகர்மன்ற தலைவர் நாசர்கான் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அவர்களது சமாதானத்தை ஏற்க மறுத்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் கொலையாளி முனியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















