Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப...
BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள்.
அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா.
‘சோறு - சோப்பு - மாப்பு - இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க்.
சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்?
மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

சாம்பார் அணியில் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா என்று பெண்கள் ராஜ்ஜியம். எனவே அங்கே ஹியூமருக்கு இடம் இருக்குமா? கிச்சன் அணியில் அடுப்போடு பொறாமையும் கூடவே புகைந்து கொண்டிருந்தது.
மாப் அணியில் சுபிக்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின். விக்ரம் தந்த ஐடியாக்களின் வழியாக இந்த அணிதான் ஓரளவிற்காவது இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தியது.
ஃபிளஷ் அணியில் சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா. இவர்களின் பங்களிப்பும் ஓகே. ‘தல’ எஃப்ஜே, பிளஷ் அணியில் சேருவதாக முடிவு செய்தார்.
ஒருவருக்கு தேவையான சாப்பாட்டை விரும்பும் போதெல்லாம் சாம்பார் அணி செய்து தர வேண்டும். போலவே சுத்தம் செய்யும் அணிகளும் ரெட் கார்ப்பெட் போட்டு பாத்ரூமிற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து அணியும் தங்களின் பணிகளை சுவாரசியமாக நிகழ்த்த வேண்டும்.
‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ என்று அமர்க்களமாக தலைப்பிட்டு ‘பெயரைக் காப்பாத்துங்க செல்லங்களா’ என்று களத்தில் இறக்கி விட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியும் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் செய்த காமெடி நன்றாக இருந்தது.
‘எங்க கிட்ட வாங்க.. சந்தோஷமா இருந்துட்டுப் போங்க’ என்று பாத்ரூம் ஏரியாவை வைத்து காமெடி செய்தார்கள். “ஓப்பனிங்கே அசத்தலா இருக்கு. இப்படியே கொண்டு போங்க தங்கங்களா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் பிக் பாஸ்.
பாத்ரூம் செல்ல விரும்பிய பாருவிற்கு ரெட் கார்ப்பரேட் வரவேற்பு நடந்தது. ‘அவள் உலக அழகியே..பாட்டு பாடுங்க’ என்று பாரு அநியாயமாக வற்புறுத்த, பாடல் வரிகளை மாற்றி பாடி வெறுப்பேற்றினார் வினோத்.

கம்ரூதினுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அரோரா மீது கடுமையான காண்டில் இருக்கிறார் பாரு. எனவே ஜோசியம் பார்க்கிறேன் போ்வழி என்று அரோரா மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார்.
“உனக்கு மூணு கல்யாணம் நடக்கும். இன்னொரு குடும்பத்தை பிரிப்பே” என்றெல்லாம் காமெடி என்கிற பெயரில் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். அரோராவின் முகம் மாறினாலும் சிரித்து சமாளித்தார்.
பாருவின் இந்த வினை அவருக்கே திரும்பி வந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்தார் பாரு. அங்கு அரோரா வர, “என் புருஷனை பிரிச்சிடாத” என்று காமெடி என்கிற பெயரில் பாரு வக்கிரத்தைக் கொட்ட, அங்கு கிராஸ் ஆன கம்ரூதீன் “உனக்கு எத்தனை புருஷன்?” என்று துடுக்காக கேட்டு விட்டார்.
ஒரு பெண்ணை நோக்கி இப்படி கேட்டது மிக மிக தவறு. கம்ரூதீனின் அநியாயமான குறும்பு கண்டிக்கப்பட வேண்டியது. பாரு இதற்காக மிகவும் கோபித்துக் கொண்டு ‘இப்படியாடா கேட்பே. பொதுவெளியில ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவே?” என்றெல்லாம் கோபித்துக் கொள்ள “எனக்கு மட்டும் மூணு கல்யாணம்ன்னு சொன்னீங்க.. நான் அதுக்கு கோபிச்சுக்கலையே” என்று சரியாக கேட்டார் அரோரா.
“எனக்கும் மூணு பொண்டாட்டிங்கன்னு சொன்னியே?” என்றார் கம்ரூதீன். ஆனால் பாரு அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி, தனக்கு என்றால் மட்டும் ரத்தம் என்கிற பாலிசியில் புலம்பினார்.
ஒரு கட்டத்தில் ‘கிச்சன் மூடப்பட்டது’ என்று அந்த டீம் அறிவிக்க “அதை வெச்சுதான் டாஸ்க்கே.. ஏன் இப்படி பண்றீங்க.. அப்படின்னா நாங்களும் பாத்ரூமை மெயின்டெயின்ஸ்ன்னு மூடுவோம்.. அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் சண்டைக்கு இறங்கினார்கள். அதுவரை இருந்த என்டர்டெயின்மென்ட் கூட காணாமல் போய் மீண்டும் சண்டை போடுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

“டாஸ்க் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. இதுக்குள்ள யார் எப்படி ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத வெச்சு உங்க டீம் லீடரை முடிவு பண்ணுங்க” என்றார் பிக் பாஸ். சாம்பார் அணிக்கு சாண்ட்ரா. (நல்ல ரைமிங்!) மாப் அணிக்கு விக்ரம். ஃபிளஷ் அணிக்கு ரம்யா.
இந்தத் தோ்வு முடிந்ததும், “கேக்கறத சமைச்சுத் தரணும்ன்றது ரூல். ஆனா கிச்சன் டீம் அதைப் பண்றதில்லை” என்று ஆட்சேபம் தெரிவித்தார் எஃப்ஜே.
“எல்லோரும் கிளம்பிடாதீங்க. ரெண்டே நிமிஷம்.. நாங்க ஒரு ஃபொ்பார்மன்ஸ் பண்ணப் போறோம்.. பார்த்துட்டுப் போங்க” என்று தன்னுடைய அணியுடன் வந்து நின்றார் விக்ரம். ஆனால் கிச்சன் டீமில் இருந்த சாண்ட்ராவும் பாருவும் இணைந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். “டாஸ்க் நடந்துட்டு இருக்கு.. இப்ப நீங்க ஃபொ்பார்மன்ஸ் பண்ணா எப்படி?” என்பது அவர்களின் ஆட்சேபம்.
“ரெண்டே நிமிஷம்தான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று விக்ரம் கெஞ்ச, “டேய்.. நீ அப்படில்லாம் கெஞ்சக்கூடாது.. தப்பு” என்று ஆவேசமாக எழுந்து வந்தார் வினோத். ஒரு மேடைக்கலைஞனின் தவிப்பு, இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும். இந்த வகையில் வினோத்தின் அறச்சீற்றம் சிறப்பானது.
அரைமனதாக அமர்ந்த சாண்ட்ராவும் பாருவும், பிறகு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ‘வா.. போகலாம்’ என்று எழுந்து சென்று விட்டார்கள். “எல்லோரையும் உக்கார வெச்சு ஸ்கோர் பண்ணப் பார்க்கறான். நாம உக்காந்து பாயிண்ட் கொடுக்கணுமா?” என்று சாண்ட்ரா வன்மத்துடன் கேட்க “அதானே..” என்று பின் பாட்டு பாடினார் பாரு. விக்ரம் மீது அவருக்குள்ள கோபத்தை இப்படியாக பழிதீர்த்துக் கொண்டார்.

இது டாஸ்க்காகவே இருக்கட்டும். எண்டர்டெயின்மெயின்ட் வேண்டும் என்பதுதானே டார்கெட். அதற்காக ஒரு அணி அழைக்கும் போது இரண்டு நிமிடம் செலவழித்துப் பார்ப்பதை விடவும் இன்னொரு அணிக்கு என்ன வேலை? ‘அவர்களுக்கு பாயிண்ட் தர வேண்டியிருக்கும்’ என்று நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து செல்வதை விடவும் அற்பத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கலைக்கு செய்யும் அவமரியாதை. இந்த நோக்கில் சாண்ட்ராவும் பாருவும் செய்தது அநியாயம். வார இறுதியில் விசே இதைக் கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். கிச்சன் டீமில் இருந்த கனியும் வியானாவும் செல்லாமல் அமர்ந்திருந்தது நல்ல விஷயம்.
‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று பாத்ரூம் வாசலில் பாடி கலகலப்பாக முயன்றார் எஃப்ஜே.
வீக்லி டாஸ்க்கைத் தவிர, டெய்லி டாஸ்க் தனியாக நடந்தது. வாயில் கவ்வியிருக்கும் அட்டையின் மூலம் கோலமாவை எடுத்து, சக அணியில் உள்ள போட்டியாளருக்கு பாஸ் செய்ய வேண்டும். அவர் இன்னொருவருக்கு பாஸ் செய்ய மூன்றாவமர் குடுவையில் கொட்டுவார். எந்த அணி அதிக கோலமாவு சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி.
பாரு விளையாட வந்த போது அவரது வாயில் அட்டை இல்லாததை சபரி சுட்டிக் காட்ட, ‘எல்லாம் தெரியும்’ என்பது மாதிரி அலட்டினார் பாரு. இதை சபரி கண்டிக்க “இதனாலதான் உங்க டீமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாரு கிண்டலடிக்க “இதனாலதான் இந்த வீட்ல உன்னை யாருக்குமே பிடிக்கலை” என்று சபரியும் பதிலுக்குச் சொல்ல பாருவிற்கு கோபம். “நான் ஃபன்னாத்தான் சொன்னேன். இனிமே உன் கிட்ட தள்ளி நிக்கறேன்” என்று விலகிச் சென்றார் சபரி.
இந்த நாளின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதிக பாயிண்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருந்தது மாப் மாயாவிஸ். (மாஃபியா என்று தவறாக வாசித்து சிரிப்பலையை உண்டாக்கினார் எஃப்ஜே!)

“நாம தனித்தனியா எண்டர்டெயின் பண்றோம். அதான் பிரச்னை. அவங்களைப் பாரு.. டீமா பண்ணி கவனத்தை கவர்ந்துடறாங்க. இனிமே நாமளும் அப்படிப் பண்ணணும்” என்று சாம்பார் டீம் வயிற்றொிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தது. (ம்க்கும்.. சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்?!)
வெற்றி பெற்ற மாப் அணிக்கு ஐஸ்கிரீம் ரிவார்டாக கிடைக்க, கம்ருதீன் அதை ஆசையாக அரோராவிற்கு ஊட்டி விட்டார். பிரஜினும் சாண்ட்ராவும் தம்பதிகளாக ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறொிந்த பாரு “ஆளாளுக்கு ஒரு ஜோடியைப் பிடிச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க.. நம்ம கிரகம்.. இப்படி தனியா இருக்கோம்” என்கிற மாதிரி அனத்தியது நல்ல காமெடி.!

















