மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த...
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம்.
மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை.
தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது.
புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார்.

கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன்.
நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம்.
அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல்.
மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு!
ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம்.

ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ?
தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'.
சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம்.



















