''இது யாரும் செய்திடாத சாதனை" - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்க...
செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சரணும் அவரின் மனைவி மதுமிதாவும் மதுராந்தகம் தேரடி தெருவில் குடியிருந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி, வெங்கடேசனின் வீட்டுக்கு வந்த சரண், "உன் மகளை (மதுமிதா) ஒரத்தி, சென்னேரி காளியம்மன் கோயில் அருகே வெட்டி கொன்னுட்டேன்" என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மதுமிதாவின் குடும்பத்தினர், ஒரத்தி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸ் டீம், சென்னேரி காளியம்மன் கோயில் பகுதிக்குச் சென்று மதுமிதாவைத் தேடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மதுமிதா உயிரிழந்து கிடந்தார்.
அதைப் பார்த்த அவரின் உறவினர்கள் அலறித் துடித்தனர். பின்னர் மதுமிதாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மதுமிதாவின் அப்பா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தி போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரணை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து ஒரத்தி போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சரண் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் மதுமிதாவை சரண் காதலித்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப்பிறகு மதுமிதா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது சரணுக்குப் பிடிக்கவில்லை. அதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட மதுமிதாவிடம் பேசிய ஒருவரை சரண் வெட்டிய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.
அந்த வழக்கில் ஜாமீனில் வந்த சரண், தன்னுடைய மாமனார் வெங்கடேசனின் வீட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருக்கிறார். அங்கு வெங்கடேசனிடம், 'உன் மகளின் நடவடிக்கை சரியில்லை.
அதனால் அவளையும் ஒரு நாள் போட்டு தள்ளிவிடுவேன்' என மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். சம்பவத்தன்று மதுமிதாவிடம் கோயிலுக்குச் செல்லலாம் எனக் கூறி அவரை பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார் சரண்.
ஒரத்தி சென்னினேரி காளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மதுமிதாவை சரண் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மாமனார் வெங்கடேசனுக்கு நேரில் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சரண் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

















