''இது யாரும் செய்திடாத சாதனை" - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்க...
மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்
பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளார் மகன். அப்போது தந்தை வங்கியில் தனிநபர் கடன் வாங்கியிருப்பதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதலில் ரூ. 18.5 லட்சம் ஆக இருந்த அந்தக் கடனில், தற்போது ரூ. 10.6 லட்சம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ. 36,000 EMI செலுத்த வேண்டும் என்றும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகை அவரது மாத சம்பளத்தில் 90% என்பதால், அவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்துவது என்று தவித்துள்ளார்.

இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது, இது காப்பீடு செய்யப்படாத கடன் என்றும், சட்டப்பூர்வ வாரிசுதான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அந்த நபர், 'ரெட்டிட்' சமூக வலைதளத்தில் உதவி கோரியுள்ளார்.
அவரது பதிவைப் பார்த்த சிலர் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர். "தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன் (Unsecured Loan). நீங்கள் கடனுக்கு இணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளித்தவராகவோ இல்லாத பட்சத்தில், சட்டப்பூர்வ வாரிசான நீங்கள் அதைக் கட்ட வேண்டிய அவசியமில்லை" என்று ஒரு பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொருவர் கூறுகையில் "முதலில் ஒரு வழக்கறிஞரை அணுகுங்கள். கடன் ஒப்பந்தத்தைப் படித்து, வாரிசுதான் கடனைச் செலுத்த வேண்டும் என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கேளுங்கள். வங்கி உங்களை ஏமாற்றி புதிய ஆவணங்களில் கையெழுத்து வாங்க முயற்சி செய்யலாம், கவனமாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்த நபர் வங்கிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடன் ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டு விவரங்களைக் கோரியுள்ளார்.


















