அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?
''இது யாரும் செய்திடாத சாதனை" - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும்.
தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.

தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார்.
‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம்.
சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன்.
தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க.
இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு.

இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது.
சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.
என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன்.
ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும்.
அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும்.
பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன்.

இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார்.
“இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன்.
ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன்.
ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம்.
ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும்.

இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க.
‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.
















