Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைக...
விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு அந்த இளம் பெண் வந்து சென்றுள்ளார்.
அப்போது இந்தக் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றிய ஜெயபாண்டிக்கும், அந்த இளம் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆமத்தூர் அருகே வீட்டில் தனிமையிலிருந்த இளம் பெண்ணையும், காவலரையும் அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்டோர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து காவலர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரின் வாகனத்தைச் சேதப்படுத்தினர்.

தகவலறிந்த ஆமத்தூர் போலீசார், சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று, டூவீலரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக இளம்பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவலரைத் தற்காலிகமாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின் நேற்று ஜெயபாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும், பாண்டியன் நகர் (ஊரக) காவல் நிலையத்தில் பணியாற்றும் ஜெயக்கொடி என்ற பெண் காவலருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது.
தற்போது இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர் சூலக்கரை காவல் நிலையத்திற்குச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டதோடு காவல் நிலையத்தையே அமளி துமளி செய்திருக்கிறார்.
இதனால் சூலக்கரை ஆய்வாளர் எஸ்.பி-யிடம் இதை எடுத்துச் செல்ல ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்கொடியைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

















