`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' - சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேர...
Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?
Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால் அதையேதான் தொடர வேண்டுமா,மீண்டும் மாத்திரைக்கு மாற வாய்ப்பே இல்லையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
இன்சுலினில் பல வகைகள் உள்ளன. புதிய வகையான இன்சுலின்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, இன்சுலின் மூன்று வகையான நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
முதல் வகை: டைப் 1 நீரிழிவு நோயாளிகள்
இவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டுமே பிரதானமானது. இதற்குக் காரணம், இவர்களது கணையத்தில் (Pancreas) இன்சுலினைச் சுரக்கக்கூடிய பீட்டா செல்கள் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலினுக்கு பதில் மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியாது.
இரண்டாம் வகை: டைப் 2 நீரிழிவு நோயாளிகள்
இவர்கள் சாதாரணமாகப் பரவலாகக் காணப்படும் நீரிழிவு நோயாளிகள். இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) காரணமாக இவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது.
இவர்களுக்கு மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் (Oral Hypoglycemic Agent Failure), ரத்தச் சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் (Euglycemia) கொண்டு வர முடியாத நிலையிலும், வேறு ஏதாவது சிக்கல்கள் (Complications) வரும்போதும் இன்சுலின் தான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும்.
முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால், இவர்களுக்கு இன்சுலின் அளவைக் குறைத்து, தேவைப்பட்டால் நிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளது.

மூன்றாம் வகை: டைப் 3 நீரிழிவு நோயாளிகள்
அவசர சிகிச்சை தேவைப்படுவோர் (Emergencies). இவர்களுக்கு சிகிச்சை அல்லது அவசரத் தேவைகளுக்காக இன்சுலின் பயன்படுத்தப்படும்.
உதாரணத்துக்கு, அறுவை சிகிச்சை (Surgery), இதயப் பிரச்னைகள் (Heart problem), சிறுநீரகப் பிரச்னைகள் (Kidney problem), விபத்து (Accident), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract) போன்றவற்றின் போது இன்சுலின் தேவைப்படும்.
இத்தகைய சூழல்களில், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர இன்சுலின் போடப்படுகிறது. இந்த அவசர நிலை (Crisis) சரியானதும், மாத்திரைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று இன்சுலின் தான். இன்சுலின் போடுவது என்பது மோசமான நிலைக்கான அடையாளம் கிடையாது. அப்படி நினைப்பது மிகப்பெரிய மனத்தடை.
இன்சுலின் சிகிச்சை என்பது, நீரிழிவு நோய் மீள்தன்மைக்கு (Diabetes Reversal) பெரிதும் உதவும். மேற்கொண்டு சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகள் அனைவரும் டைப் 1 நோயாளிகளைப் போல நிரந்தரமாக இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எந்த வகையான இன்சுலின், யாருக்கு, எந்த நேரத்தில் போடப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுடைய சர்க்கரை நோய் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.















