SIR : பீகாரிலும் Vote TN -லும் Vote - ECI -ன் அதிர்ச்சி விதி! | DMK EPS ADMK BJP...
Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?
Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியை உணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்களே. அது எந்த அளவுக்கு உண்மை, அது என்ன செய்யும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டர் (period pain simulator) என்பது பீரியட்ஸின் போது ஏற்படும் அசௌகர்யத்தையும் வலியையும் உணரச் செய்கிற ஒரு கருவி.
அதாவது, பீரியட்ஸ் என்பது எப்படியிருக்கும் என்ற அனுபவம் இல்லாத ஒரு நபருக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்கச் செய்வதுதான் இதன் வேலை.
ஆண்களுக்கு பீரியட்ஸ் வராது என்பதால், பீரியட்ஸ் வலி எப்படியிருக்கும் என்று அவர்களை உணரச் செய்ய இந்தக் கருவி உதவுகிறது. இந்த பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டரில் எலக்ட்ரிகல் ஸ்டிமுலேஷன் பேட்ஸ் ( electrical stimulation pads) இருக்கும்.
அதை அடிவயிற்றிலோ அல்லது முதுகுப் பகுதியிலோ வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எலக்ட்ரிக்கல் பல்ஸ் அனுப்பப்படும். அதன் மூலம் பீரியட்ஸ் வலி உணரவைக்கப்படும். அதன் தீவிரத்தன்மையை குறைந்த அளவிலிருந்து, அதிகபட்சம்வரை நீங்கள் அதிகரித்துக்கொள்ளலாம்.

இந்தக் கருவியை உபயோகிக்கும்போது ஆண்களின் முகத்தில் ஏற்படுகிற மாறுதல்கள் கண்காணிக்கப்படும். இதில் இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். இந்தக் கருவியை உபயோகிக்கும்போது உணரப்படுகிற வலியானது, பீரியட்ஸ் அசௌகர்யங்களில் ஒரு பகுதி மட்டுமே.
மற்றபடி, இது அந்த நாள்களில் ஏற்படுகிற களைப்பு, நீர்கோத்தல், உடல் உப்புசம், மனநிலை மாற்றங்கள், வாந்தி என ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிற அசௌகர்யங்களை உணரச் செய்யாது. அவற்யை எல்லாம் எந்தக் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாது.
பீரியட்ஸ் நாள்களில் பெண்கள் எப்படிப்பட்ட வலிகளை, அவதியை அனுபவிக்கிறார்கள் என்று ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தக் கருவியின் நோக்கம். அந்த வலியும், அவதியும் அவர்களது அன்றாட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இதன் மூலம் ஆண்கள் உணரலாம்.
இள வயதில், ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு பீரியட்ஸ் வலி உள்ளிட்ட பிரச்னைகள் வருகின்றன. அதுவே, அவர்கள் 50 வயதைக் கடந்ததும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அறவே இல்லாமல் போவதால் வேறு வகையான அசௌகர்யங்கள் ஏற்படும். உடல் சூடாவது, வெஜைனா வறண்டு போவது, மனநிலையில் தடுமாற்றங்கள் என பலவித பிரச்னைகள் வரும். அதற்கும் ஹார்மோன்களே காரணம்.
அந்த வகையில் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்களின் மாற்றங்களால் எல்லா வயதிலும் ஏதோ பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. பெண்களின் உடலமைப்பே அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி. அதை ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

கடந்த 50 ஆண்டுகளாகத்தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம். நம் முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்காத பல உரிமைகள், வாய்ப்புகள் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்கின்றன.
அவற்றை அனுபவிக்காமல், மாதவிலக்கு வலியையும், அசௌகர்யங்களையும் காரணம் காட்டி, முன்னேறிச் செல்வதிலிருந்து விலகக்கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















