ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - அரச நீதி தவறியதற்கு தண்டனையா அல்லது பழி தீர்க்கும்...
அன்று அதிமுக வட்டச் செயலாளர்; இன்று இங்கிலாந்தில் மேயர் வேட்பாளர் - தாமோதரன் சீனிவாசன் சாதித்த கதை!
சென்னையில் அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்த ஒருவர் இங்கிலாந்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் 'தொழிலாளர் கட்சி'யில் வளர்ந்து வரும் முக்கியமான ஒரு தலைவராக இருப்பதுடன் லண்டனில் உள்ள க்ரேடன் நகராட்சியில் கவுன்சிலர், துணை மேயர் பதவியை அலங்கரித்தார் என்றால் நம்ப முடிகிறதா?
கூடிய சீக்கிரத்தில் அந்த நகரத்தின் மேயராகவோ அல்லது பிரிட்டன் பாராளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யாகவோ அவர் நுழையலாம் என்கிறார்கள்.
'அட,, என்னய்யா சொல்றீங்க' என ஆச்சரியப் படுகிறீர்கள்தானே?
எண்பதுகளில் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் 128வது வட்ட அதிமுக செயலாளராக இருந்த அப்பு என்கிற தாமோதரன் சீனிவாசன்தான் இந்த அசாத்திய சாதனைக்குச் சொந்தக்காரர்.
அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்தவர் எப்படி பிரிட்டன் லேபர் பார்ட்டியின் துணை மேயர் ஆனார்?
லண்டனில் இருந்த அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

போயஸ் கார்டன் எஸ்கார்டு!
''என்னுடைய அம்மா சரோஜினி எம்.ஜி.ஆர் அதிமுகவை வழிநடத்திய நாள்கள்லயே மகளிர் அணியில சேர்ந்து தீவிரமா இயங்கிட்டிருந்தாங்க. கட்சி விஷயமா ராமாவரம் தோட்டத்துக்கு அவங்க போறப்ப சின்னப்பையனா நானும் உடன் போய் வந்திருக்கேன்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதே விசுவாசத்துடன் ஜெயலலிதா பக்கம் வந்தாங்க அம்மா. அந்தச் சமயத்துல நான் விடலைப் பையன். மெகானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ முடிச்சிருந்தேன்.
அப்ப கொஞ்ச நாள் ஜெயலலிதாவுக்கு எதிரா அதிமுகவிலயே சிலர் போர்க்கொடி தூக்குனப்ப நாங்க ஜெ பக்கம் நின்னோம்.
அவங்களுடைய பாதுகாப்புக்காக அவங்க எங்க வெளியில போனாலும் எஸ்கார்டா சபாரியில புல்லட்ல பின்னாடியே நாங்களே ஒரு டீம் பார்ம் பண்ணி போவோம். அதுக்கான செலவெல்லாம் எங்களுடையது.
இந்தச் சமயத்துலதான் அப்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வட்டச் செயலாளர் பொறுப்பும் கிடைச்சது. மாவட்டச் செயலாளரா இருந்த ஆதிராஜாராம் சிபாரிசுல எனக்கு அந்தப் பொறுப்பு கிடைச்சது.
நல்லபடியா கட்சிப் பணிகள் போயிட்டிருந்த சூழல்லதான் 1991 தேர்தல் வந்தது. அதிமுக அமோகமா ஜெயிச்சு முதல் முறையா முதலமைச்சர் ஆனாங்க ஜெயலலிதா.

முதல்வர் ஆன ஜெ; மாறிய போயஸ் கார்டன்!
ஆனா அடுத்த ஒரு வருஷத்துல சூழல் கொஞ்சம் மாறுச்சு. அதுவரை ஜெயலலிதா அம்மாவைப் பார்க்கறது பேசறது சுலபமா இருந்த நிலை மாறி போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனா உள்ளேயே அனுமதி மறக்கப்பட்டதெல்லாம் நடந்தது.
இதுல எங்கம்மாவுக்கு ரொம்பவே வருத்தம். கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்து அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஏன் கட்சியில இவங்களுக்கு ஆதரவா நின்னதுக்காகவே அடி உதையெல்லாம் வாங்கினோம், ஆனா இப்ப பார்க்கக் கூட முடிய மாட்டேங்குதேனு வருத்தப்பட்டவங்க.
'நீ போய் மேல படிக்கிற வழியப் பாருய்யா'னு என்னை லண்டனுக்குப் படிக்க அனுப்பினாங்க. மெட்டீரியல் சயின்ஸ் படிக்கறதுக்காக அங்க போனேன். அந்த நாள்தான் வாழ்வின் திருப்பு முனைனு சொல்லலாம்.
ஒரே வருஷம்தான்.. அந்தப்படிப்பு முடிஞ்சதும் ஒரு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்துல வேலை கிடைச்சது. நல்ல சம்பளம். ஆனாலும் என் பாட்டுக்கு என் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கிடறதுனு இருக்க முடியல.. அம்மாவுடைய ஜீன் சும்மா இருக்காதில்லையா.
அங்க வர்ற தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தொடங்கினேன். பிரச்னைனு வந்த நம்மாளுங்களுக்குத் தீர்வு காண உதவுனேன். நான் வேலை பார்த்த கம்பெனியிலயே நிறையப் பேரைச் சேர்த்து விட்டேன்.

வரவேற்ற தொழிலாளர் கட்சி!
ஒருகட்டத்துல ஸ்காட்லாந்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க. கம்பெனியே மூடுகிற ஒரு நிலையும் வந்திச்சு. அந்தச் சமயத்துலதான் அம்மா பேரையே சுருக்கி 'சரா'ங்கிற பேருல லண்டன்ல சூப்பர் ஸ்டோர் ஒண்ணு திறந்தேன். அப்பெல்லாம் விசா கெடுபிடி ரொம்ப கிடையாது.
குடியுரிமை வாங்கறதுல ஈசியா இருந்ததால ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு பிரிட்டன் பிடிச்சுப் போக மனைவி மகன் குடும்பம்னு அங்கேயே செட்டில் ஆகிட்டேன். என் மனைவி அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர'' என்றவரிடம் பிரிட்டனின் அரசியலுக்குள் நுழைந்தது குறித்துக் கேட்டதும் உற்சாகம் கூட தொடர்ந்தார்..
''பிசினஸ் ப்ளஸ் தமிழர்களுக்கான சேவைகள் மூலம் கொஞ்சம் பிரபலமானதும் இப்போதைய அமைச்சர் ஸ்டீவ் ரீட் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் நீங்க செய்கிற சர்வீஸ்க்கு பாலிடிக்ஸ் பக்கம் வரலாமேன்னு தொழிலளர் கட்சியில சேரச் சொல்லிக் கூப்பிட்டார்.
தொழிலாளர் கட்சி எப்பவுமே பிரிட்டன்ல வாழ்கிற பிற நாட்டு பிரஜைகள் மேல கூடுதல் அக்கறை செலுத்துகிற கட்சின்னு ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால அவருடைய அழைப்பை ஏற்று அந்தக் கட்சியில சேர்ந்தேன்.

நேற்று துணை மேயர் , நாளை?
அதுக்குப் பிறகு என்னுடைய உழைப்புக்கு ஏத்த அங்கீகாரம் கட்சியில கிடைச்சது. கிரேடன் நகராட்சிக்கு நடந்த தேர்தல்ல கட்சி சார்பா கவுன்சிலர்க்கு நின்னு ஜெயிச்சேன். அங்க கவுன்சிலர் பதவி நாலு வருஷம்னா மேயர் துணை மேயர் ஒவ்வொரு வருஷமும் மாறிட்டே இருப்பாங்க.
அந்த வகையில போன வருஷம் என்னை துணை மேயரா ஆக்கினாங்க. இப்ப கவுன்சிலர் பதவியில மட்டும் இருக்கேன். அடுத்த வருஷம் மேயர் பொறுப்பு தர்றதாச் சொல்லியிருக்காங்க.
இன்னொரு புறம் அடுத்த நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வர்றப்ப எம்.பி பதவி கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. எப்படிச் சொல்றேன்னா, அந்தளவு கட்சி வேலைகளையும் பார்த்திட்டிருக்கேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்.
என்னதான் அதிமுககாரராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் லண்டன் சென்றபோது அங்கு அவரை வரவேற்ற குழுவில் தாமோதரனும் இருந்தாராம்.

அதுகுறித்துக் கேட்ட போது, "நம்ம ஊரு முதல்வரா அவர் வர்றப்ப போக வேண்டாமாங்க? ஏன் எடப்பாடி பழனிசாமி முதல்வரா இருந்தப்ப பிரிட்டன் வந்த போதும் நான்தான் வரவேற்றேன். தமிழ்ச் சங்கத்துல இயங்கிட்டிருக்கறதால நிறைய செலிபிரிட்டிகள் இங்க வர்றப்ப முதல் ஆளா போய் நிக்க மறக்க மாட்டேன்" என்கிறார்.
சரி, தமிழ்நாடு தேர்தல் வர இருக்கே, அது பத்தி?
நான் அண்ணா திமுக காரன்.. திமுக ஆட்சியே தொடரணும்னா சொல்வேன். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் தந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் கிடைக்கணும்'கிறதுதான் என்னுடைய ஆசை'' என முடித்தார்.
















