கோவை: "விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டா...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - அரச நீதி தவறியதற்கு தண்டனையா அல்லது பழி தீர்க்கும் அரசியலா?
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
பங்களாதேஷின் பதவி இறக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசினா மீது சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை உள்நாட்டு அரசியலில் ஷேக் ஹசினாவுக்கும், அவரின் அவாமி லீக் கட்சிக்கும் பெரும் அரசியல் சோதனையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இந்திய பங்களாதேஷ் உறவுகளிலும் ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், பங்களாதேஷில் அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டு திட்டத்துக்கு எதிராக வெடித்த பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சியை ஒடுக்க ஷேக் ஹசினா அரசு கையாண்ட கடும் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விசாரித்த இந்தத் தீர்ப்பாயம், ஷேக் ஹசினா இந்த விசாரணைகளில் ஆஜராகாத நிலையில், இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
ஹசீனாவுடன் அவர் ஆட்சிக்காலத்தில் பங்களாதேஷில் உள்துறை அமைச்சராக இருந்த அசாதுசா கான் கமாலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரும் இந்தியாவில்தான் தஞ்சம் புகுந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பை அளித்திருக்கும் இந்த தீர்ப்பாயம், ஏற்கனவே ஷேக் ஹசீனா அரசு 2010ல், 1971 வங்க தேச விடுதலைப்போர் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கக் கொண்டுவரப்பட்டது என்பது சமகால அரசியல் விசித்திரங்களில் ஒன்று.
அதே போல மற்றொரு விசித்திரம்தான், இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசினாவை தங்களிடம் ஒப்படைக்க பங்களாதேஷின் இடைக்கால அரசு கோருவதற்கு, சட்டபூர்வ அடிப்படையைத் தரும் 2013 ஆண்டு கையெழுத்தான இந்திய பங்களாதேஷ் நாடு கடத்தி விசாரணைக்கு ஒப்புவிக்கும் ஒப்பந்தமும்.
இதுவும் ஷேக் ஹசினா அரசும் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் தான்.
பங்களாதேஷ் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பங்களாதேஷிலிருந்து இயங்கி இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த பல வடகிழக்கு மாநில பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை ஹசீனா அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அரசியல் நெருக்கடியுடன், தனிப்பட்ட நெருக்கடியையும் சந்திக்கும் ஹசினா!
சரித்திர விநோதங்கள் ஒருபக்கம் இருந்தாலும், 78 வயதாகும் ஷேக் ஹசினாவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, வெறும் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல, தனிப்பட்ட நெருக்கடியும் கூட. ஒருவேளை இந்தியா பங்களாதேஷின் கோரிக்கையை ஏற்று ஷேக் ஹசினாவை ஒப்படைப்பது என்று முடிவு செய்து விட்டால், தற்போது பங்களாதேஷில் நிலவும் (அல்லது கடந்த பல தசாப்தங்களாக நிலவி வரும்) பழிதீர்க்கும் அரசியலில் அவர் கதி அதோ கதிதான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தானில் 1979ல் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சியில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பூட்டோ போல மற்றொரு அத்தியாயம் பங்களாதேஷில் எழுதப்படும்.
ஆனால் இந்தியா பங்களாதேஷின் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்குமா ?

இதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை பார்க்க வங்கதேச விடுதலைப் போரிலிருந்து அதன் உள் நாட்டு அரசியலின் போக்கையும், இந்திய வங்கதேச உறவுகளின் போக்கையும், பிராந்திய அரசியலையும் ஆராய வேண்டும்.
வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் சுதந்திர நாடாக மலர்ந்த பங்களாதேஷின் அப்போதைய ஆளுமை மிக்க தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி, சுதந்திரப் போராட்டத்தின் போது தனக்கு உதவியாக இருந்த இந்தியாவை ஒரு நேச சக்தியாகவே கருதி வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை சார்ந்திருந்தது.
இந்த நட்புறவும், பங்களாதேஷின் சுதந்திரப்போராட்ட வரலாற்றின் அடிப்படையிலமைந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது, பங்களாதேஷின் முக்கிய கட்சிகளிடையே இந்திய-பங்களாதேஷ் உறவுகள் பற்றிய கண்ணோட்டத்தில் ஒரு அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால், பங்களாதேஷின் விடுதலைப்போராட்ட காலத்திலேயே, பாகிஸ்தானுடன் ஒத்துழைத்த கிழக்கு பாகிஸ்தானின் இஸ்லாமியவாத சக்திகள் , சுதந்திரத்துக்குப் பின்னரும் அதே அடிப்படையிலான அணுகுமுறையை மேற்கொள்ள, உள்நாட்டு அரசியலில் அவாமி லீக் எதிர்ப்பு என்பது, வெளியுறவுக் கொள்கையில் இந்திய எதிர்ப்பு என்றாகியது.

பங்களாதேஷின் மற்றொரு முக்கிய கட்சியான, பங்களாதேஷ் தேசியக் கட்சி, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குப் பின்னர் ராணுவ அதிரடிப் புரட்சிக்கு சற்று பிந்தைய ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி ஜியாவுர் ரஹ்மான் உருவாக்கிய கட்சி. அவர் 1981ல் படுகொலை செய்யப்பட்ட பின் அவர் மனைவி கலேதா ஜியா கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்து நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தார்.
இந்த இரு கட்சிகளிடையே ஏற்பட்ட அரசியல் போட்டி வெறும் சித்தாந்த ரீதியிலான போட்டி என்ற ஒரு எல்லையைத் தாண்டி, ஆட்சி மாறும்போதெல்லாம், வென்ற கட்சி தோற்ற கட்சியை பழிவாங்கும் போக்காகவே கடந்த சுமார் 30 ஆண்டுகாலம் நீடித்தது.
இந்த சூழலில்தான் ஷேக் ஹசீனாவின் கடந்த சுமார் 15 ஆண்டுகால ஆட்சியை ( 2009-2024) பார்க்கவேண்டும். ஹசீனாவின் ஆட்சியில் பங்களாதேஷ் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்றது. இந்தியாவுடனான உறவில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
பங்களாதேஷின் சுதந்திரப்போரில் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசு செய்த உதவியை எப்படி “பங்க பந்து” என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் மறக்கவில்லயோ, அதே போல முஜிபுர் ரஹ்மானின் குடும்பமே 1975ல் நடந்த ராணுவ அதிரடிப் புரட்சியில் படுகொலை செய்யப்பட்டபோது, ஐரோப்பாவில் இருந்த காரணத்தால் தப்பிய ஷேக் ஹசினாவும் அதை மறக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் இந்திய பங்களாதேஷ் உறவுகள் பொதுவாக சுமுகமாகவே இருந்தன. இரு நாடுகளிடையே இருந்த எல்லைப் பிரச்சனை, கங்கை நதி நீர் ஒப்பந்தம் போன்ற பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு இவரது ஆட்சிக்காலத்தில் கிடைத்தது.
உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் நல்லுறவு போன்ற சாதகமான அம்சங்கள் இருந்தாலும், சர்வாதிகாரப்போக்கு, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்குவது, கருத்து மாறுபடுவர்களை கைது செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் ஹசீனாவின் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலேதா ஸியா ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, 17 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த அரசியல் பின்னணியில்தான் ஷேக் ஹசினாவின் அரசியல் வீழ்ச்சியும், இப்போதைய இந்த தீர்ப்பும் வந்திருக்கின்றன.
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஹசீனாவை ஏற்கனவே இந்த தீர்ப்பாய விசாரணைக்காக ஒப்புவிக்க வேண்டும் என்று யூனுஸ் தலைமையிலான் இடைக்கால அரசு கோரியிருந்தற்கு இந்தியா சாதகமாக செவிசாய்க்கவில்லை.
தீர்ப்பு ஹசீனா ஆஜராகாத பின்னணியில் வந்திருக்கிறது, தீர்ப்பாய விசாரணைகள் ஒருதலைபட்சமாக நடந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், இந்தியா ஹசீனாவை ஒப்படைக்கும் என்று தோன்றவில்லை.
“கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் , நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஷேக் ஹசினா மீதான விசாரணை நடத்தப்பட்ட விதம் இது நீதியை நிலை நிறுத்துவதைவிட பழிவாங்கும் போக்கிலானது என்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்தியது”, என்று கூறினார், பிபிசி வங்க மொழிப் பிரிவின் முன்னாள் ஆசிரியர் சபீர் முஸ்தாபா.
தீர்ப்பாய விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞராக, இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமிக் கட்சியுடன் தொடர்புடையவரே நியமிக்கப்பட்டார். மேலும், ஹசீனாவுக்காக வாதாட அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஹசினாவின் சார்பாக ஒரு சாட்சியைக் கூட தீர்ப்பாய விசாரணையின் போது நிறுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளைக் கூட குறுக்குவிசாரணை செய்யவில்லை, என்றார் முஸ்தாபா.

இந்த தீர்ப்பாயத் தீர்ப்பை இந்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று மட்டும் கூறியிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை. டில்லியின் பாதுகாப்பில் இந்தியாவில் கடந்த ஆண்டில் இருந்து வசிக்கும் ஹசீனாவை இந்தியா அவ்வளவு எளிதாக பங்களாதேஷிடம் ஒப்படைக்கும் என்று யாரும் கருதவில்லை.
ஹசீனாவை ஒப்படைக்க பங்களாதேஷ் அரசு கோருவது 2013ம் ஆண்டைய இந்திய பங்களாதேஷ் நாடுகடத்தி ஒப்புவிக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்.
இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் மற்றொரு நாட்டின் பிரஜைகள் பாரிய குற்றங்களை இழைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தாலோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது அவர்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்திருந்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலோ அந்நாட்டிடம் ஒப்புவிக்க வழிவகை செய்கிறது. எனவே, தீர்ப்பாய விசாரணையில் ஹசினாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரை இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்புவிக்க பங்களாதேஷ் கோரியுள்ளதற்கு ஓரளவு சட்ட அடிப்படை இருப்பதாகத் தோன்றலாம்.
ஆனால் பங்களாதேஷிடம் ஒப்படைக்க இந்தியா மறுப்பதற்கும் இந்த ஒப்பந்தத்திலேயே இடம் இருக்கிறது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். அரசியல் ரீதியிலான குற்றங்களின் அடிப்படையில் நாடுகடத்தி விசாரணைக்காக ஒப்புவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்க இந்த ஒப்பந்தத்திலேயே வழி இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியா ஹசீனாவை வெளியேற்றுவது சாத்தியமில்லை என்ற கருத்தை எதிரொலிக்கும் சபீர் முஸ்தாபா, “பிப்ரவரியில் நடக்கவுள்ள தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஹசினாவும் அவர் குடும்பத்தினரும் இனி பங்களாதேஷ் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதாக ஒப்புக்கொண்டு, அதற்கு மாற்றாக, ஹசினாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி, சிறைத்தண்டனை ஏதும் விதிக்காமல் இருப்பதாக ஒப்புக்கொண்டால், ஒரு வேளை இந்தியா ஹசினாவை இந்தியாவிலிருந்து வெளியேற்றலாம். ஆனால் அந்த மாதிரியான ஒரு சமரசத்தைக்கூட பங்களாதேஷின் கடும்போக்கு இஸ்லாமியக் குழுக்கள் எதிர்க்கும்”, என்றார்.
அந்தக் குழுக்கள் 1971 விடுதலைப் போரின் போது மானுடகுலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காக 2013-16 கால கட்டத்தில் ஐந்து மூத்த ஜமாத் இ இஸ்லாமி தலைவர்கள் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க, ஹசீனாவும் தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறெதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், என்றார் முஸ்தாபா.

தீர்ப்பு அவாமி லீக், ஹசினாவின் அரசியல் அஸ்தமனத்தைக் குறிக்கிறதா ?
ஆனாலும், பங்களாதேஷின் அரசியலில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, அவருக்கும் அவரையே சார்ந்திருக்கும் அவாமி லீக் கட்சிக்கும் அரசியல் அஸ்தமனத்தைக் குறிக்கிறதா?
அவாமி லீக் கட்சி, இந்தியாவின் சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி போல, பங்களாதேஷின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னின்று நடத்தியிருந்தாலும், இந்திய தேசிய காங்கிரஸுக்கு சுதந்திரத்துக்குப் பின் நீண்ட காலம் கிடைத்த இந்திய அரசியல் ஆதிக்கம், அதற்கு பங்களாதேஷில் கிடைக்கவில்லை. ராணுவத் தலையீடு, மற்றும் பங்களாதேஷின் சுதந்திரப் போரிலேயே இஸ்லாமியக் குழுக்கள் பாகிஸ்தானுடன் ஒட்டுறவாடிய நிலை சுதந்திரத்துக்குப் பின்னும் தொடர்ந்தது ஆகிய காரணங்களால், லீகுக்கு கிடைத்திருக்கக் கூடிய அரசியல் மேலாண்மை முழுமையாக அதற்குக் கிடைக்கவில்லை.
பங்களாதேஷ் அரசியலும் அவாமி லீக் - பங்களாதேஷ் தேசியக் கட்சி என்று துருவமயப்படுத்தப்பட்டு பழி தீர்க்கும் அரசியலாகவே கடந்த சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்திருக்கிறது.
இந்த நிலையிலும் கூட அவாமி லீகுக்கோ அல்லது ஹசினாவுக்கு அரசியல் பயணமோ முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறிவிடமுடியுமா?
அப்படிக்கூற முடியாது என்று கூறுகிறார் சபீர் முஸ்தாபா. “தற்போதைக்கு அவாமி லீக் கட்சி ஒட்டு மொத்தமாக நிலை குலைந்திருக்கிறது என்பது உண்மை. அரசை எதிர்த்து வீதிகளில் நின்று போராடும் நிலையில் அவர்கள் இல்லை. போராட வெளியே வந்தாலே உடனடியாக அக்கட்சித் தலைவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். வரும் தேர்தலிலும் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படாது என்று யூனுஸ் கூறியிருக்கிறார். எனவே போராட்டம் தான் அவர்களுக்குள்ள ஒரே வழி”, என்று கூறும் முஸ்தாபா, ஆனால் கட்சி எதிர் நோக்கும் பெரிய பிரச்சனை ஹசினாவை என்ன செய்வது என்பதுதான் என்று கூறுகிறார்.

கட்சி ஹசீனாவையே நம்பியிருக்கிறது. மனம் சோர்ந்திருக்கும் கட்சி, ஹசினாவும் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினால் ஒட்டு மொத்தமாக நிலை குலைந்துவிடும், ஆனால் ஹசீனா கட்சித் தலைவராக நீடிக்கும்வரை சாதாரண பொதுமக்களிடம் சென்று தாங்கள் திருந்திவிட்டதாக அவாமி லீக் கட்சியினரால் நம்பவைக்க முடியாது. இதற்கு ஒரு தீர்வு கண்டால்தான் அவாமி லீகால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் “ என்கிறார் முஸ்தாபா.
பங்களாதேஷில் நீண்ட காலமாக நடத்தப்பட்டுவரும் இந்த “பழி தீர்க்கும் அரசியல்” முக்கிய திருப்புமுனைக் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த தீர்ப்பின் பின் விளைவுகள் இத்தோடு முடியுமா, வரும் காலங்களிலும் தொடர்ந்து இதன் எதிர் அதிர்வலைகள் நீடித்து பங்களாதேஷை மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் , குறிப்பாக இந்தியாவுக்கு, பெருத்த தலைவலியைத் தருமா என்பது இந்த பிரச்சனைக்கு அந்த நாடு எப்படி தீர்வு காணப்போகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.!















