Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" - ரோஜா பேட்டி
'பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது' - கோவையில் நரேந்திர மோடி பேச்சு
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறது.

தென்னகத்தின் சக்தி பீடமாக கோவை உள்ளது. கோவை ஜவுளித்துறை நாட்டிற்கு பங்காற்றுகிறது. இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி, தற்போது தேசத்திற்கு வழிகாட்டுகிறார்.
இயற்கை விவசாய மாநாடு என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் தீர்வு. நவீன ரசாயனம் நம் மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு ஏக்கரில் ஒரு பருவம் இயற்கை விவசாயம் தொடங்குங்கள். இயற்கை வேளாண்மைக்கு இந்த அரசு எப்போதும் ஊக்கமளிக்கும்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் பேச்சை உணர்ந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியன் பேசியதை எனக்கு இந்தியில் அனுப்புங்கள்.” என்றார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு மாட்டு வண்டி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதற்காக நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் பதாகைகளை ஏந்தி மோடியின் கவனத்தை ஈர்த்தனர்.

அதில் ஒரு மாணவி, ”நான் பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும்.” என்று கூறியிருந்தார்.
மற்றொரு மாணவி, “நான் வாக்களிக்கும்போது தமிழ்நாட்டில் தாமரை மலரும்.” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அவர்களை மேடையில் பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் மோடியை வரவேற்றார்.


அப்போது அண்ணாமலையை மோடி, ‘அயர்ன்மேன்’ என்று தட்டிக் கொடுத்தார். அதேபோல வரவேற்பின்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.













