செய்திகள் :

அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு நல்ல பேருந்து. ஜன்னலோர இருக்கை. நல்ல ஸ்பீக்கர் செட். அதில் மனதிற்குப் பிடித்த பாடல்கள். ஆஹா.. அவ்வப்போது மட்டும் கிடைக்கும் ஆனந்தத்தில் இதுவும் ஒன்று. சிறுவயதில் சகோதரிகளிடம்  ஜன்னலோர இருக்கைக்கு சண்டை வந்தாலும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டு விடுவோம்.

அது, “கடவுளே, பாட்டு போடுற பஸ்ஸா வரணும்… நல்ல பாட்டா போடணும்” என்று வேண்டுதல் வைப்பதில். (கடவுள் நினைத்திருப்பார்… “ஏண்டா இதுக்கெல்லாம் கூடவா என்னை கூப்பிடுவீங்க” அப்படின்னு).

காலை 4:30 மணிக்கு பேருந்தில் ஏறினால் பக்தி மணம் கமழ, மனம் மகிழ, டி.எம்எ.ஸ், எஸ்.பி.பி ,எல்.ஆர்.ஈஸ்வரி, சுசிலாம்மா என்று யாரேனும் பாடிக்கொண்டிருப்பார்கள். வெளியில் விடியாத கும்மிருட்டு. பஸ்ஸில் நல்ல பிரகாசமான வெளிச்சம். ஒரு நல்ல பாட்டு. அந்த பயணம் அவ்வளோ நல்லா இருக்கும். அப்படியே ஆறு மணி ஆகும்போது, மெது மெதுவான வெளிச்சத்தைப் பாய்ச்சும் விடியலை காண்பது அலாதி அனுபவம். 

சற்று தூரத்தே தெரியும் மலைகளுக்கிடையில், ஆரஞ்சும் சிகப்புமான முழு சூரிய கோளத்தை, தோன்றும் பொழுதிலிருந்து, பெருவெளிச்சமாக மாறும் வரை பார்த்துக் கொண்டே வருவது ஒரு சுகம்.

நான்கு மணிக்கு சாமி பாட்டு போடுற எங்க டிரைவர் அண்ணாக்கள், ஆறு மணிக்கு மேல இதமான மெல்லிசைக்கு மாறும் பொழுது, அது நமக்கு பிடித்த பாடலாகவும் இருந்து விட்டால், சூரிய உதயமும், மெல்லிய காலை நேர காற்றும், இதயத்திற்கு இதமான பாடலும்… ஆஹாஹா ஆனந்தம்தான். பெரம்பலூர் - அரும்பாவூர் சாலை வழி வேடிக்கை பார்க்க ரசனையாகத்தான் இருக்கும்.

அதுவும், பாதி தூரத்திற்குப் பிறகு வரும் கிருஷ்ணாபுரம் - அரும்பாவூர் வழியெங்கும் கண்ணிற்கு குளிர்ச்சியான பசுமையும், சற்று தூரத்தில் தெரியும் மலைகளும் என்று பார்க்கவே, “பச்சை நிறமே பச்சை நிறமே” என்று பாடுவதற்கு தகுந்தார் போலதான் இருக்கும். தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் ஆடியோ சிஸ்டம் நன்றாகத்தான் இருக்கும். அதனாலேயே இந்த பேருந்து பயணமும் பாடல்களும் அவ்வளவு பிடித்தம் எங்களுக்கு. 

வளர்ந்த பின், படிப்பிற்கும், வேலைக்கும் என்று வேறு ஊர்களுக்கு பயணப்படும் பொழுதும் பாடலுடன் கூடிய பேருந்து என்பதை அதிகம் எதிர்பார்த்திருக்கிறோம். தனியாக செல்லும் போது ஒரு விதமாக ரசிக்கலாம். சகோதரிகள், தோழிகள் உடன் செல்லும் போது பாட்டைப் பற்றி பேசி, சிரித்து, ரசித்து என்று அது ஒரு விதமான ரசனை.

ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த எங்க பெரியக்காவுடன் பக்கத்தில் இருக்கும் மலையாளப்பட்டிக்கு பேருந்தில் செல்ல நேர்ந்தது. பெரியக்கா பாடல்களை எப்போதும் விரும்பிக் கேட்கும் ரகம். ரேடியோவில் பாடல் ஒலிக்கும் பொழுது, கூட சேர்ந்து பாடும். “எப்படிடா … இதுக்கு எல்லா பாட்டும் தெரிஞ்சிருக்கு?” என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் நானும் எங்கக்காவும். அது எங்களிடம்,

“பஸ்ல பாட்டு போடுவாங்க தானே?”

“தீனதயாளன் பஸ்தான்.. கண்டிப்பா இருக்கும்.. கவலைப்படாம வா” 

என்று சொல்லி பஸ் ஏறினால்… அச்சச்சோ.. பாட்டே போடல. நாங்கள் வழக்கமாக செல்லும் பேருந்து என்பதால், 

“அண்ணா பாட்டு போடல?”  என்று கேட்க,

“இல்லம்மா… செட்டு ரிப்பேர்.. ரெண்டு நாள்ல சரியாய்டும்” என்று சொல்ல.. சிறிது ஏமாற்றம் தான். பத்து நிமிஷம் கூட ஆகாத பயணத்துக்கு கூட பாட்டு போட்ற பஸ்தான் வேணும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த பொழுதுகள் அவை.

விடுமுறை நாட்கள் முடிந்து ஊருக்கு கிளம்பும்போது, மனதில் ஒரு பெரும் பாறை அளவு பாரம் ஏறுமே… அது ஒரு பெரும் சோகம் அந்நாட்களில்.. எங்க அத்தை சொல்லுவாங்க “எல்லாம் சந்தோஷமா தான் இருக்குங்க.. ஆனா ஊருக்கு கிளம்பும்போது இந்த புள்ளைங்க மூஞ்சிய பாக்கணுமே.. அழுகாத குறைதான்… சோகமாவே சுத்துது எல்லாம்” அப்படின்னு கிண்டல் பண்ணுவாங்க.

“நாங்க அழலயா??… ‘உள்ள அழுவுறோம்.. வெளிய சிரிக்கிறோம்’ உங்களுக்கு தெரியல” அப்படின்னு நினைச்சுக்குவோம். அவ்வாறான ஒரு விடுமுறை விடைபெறலில் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பும்போது, எங்க மாமா பொண்ணுக்கு எக்ஸ்ட்ரா சோகம். ஏன்னா, அடுத்து வர தீபாவளிக்கு அதுக்கு லீவு கிடையாது. லீவ் இல்லாதது மட்டுமில்ல. பரிட்சையும் கூட.. அதனால ஊருக்கு வர முடியாது.. ஹா ஹா ஹா இது சோகத்திலும் பெரும் சோகமல்லவா??.. எங்களில் யாரோ,

“ப்ரீத்தா, நீ மட்டும் எல்லார்கிட்டயும் ‘போயிட்டு வரேன்னு’ ரெண்டு தடவ சொல்லிட்டு வா”

“ ஏன்?” என்று அது கேட்க

 “நீ தான் தீபாவளிக்கு வர மாட்டியே… அதுக்கும் சேர்த்து சொல்லிட்டு வந்துடு”

 என்று சொல்லி அதை கிண்டலடிக்க, அது உடனே,

 “பாருங்கத்த.. நானே தீபாவளிக்கு இதுங்க எல்லாம் வரும்.. நான் மட்டும் இருக்க மாட்டேனேனு சோகத்தில் இருந்தா.. இப்படி கிண்டல் பண்ணுதுங்க”

 என்று எங்கம்மா கிட்ட கம்ப்ளைன்ட் செய்ய, நாங்க அதையும் மேலும் கலாட்டா செய்ய என்ற கிளம்பும்போதும் வம்படித்து சோகத்தின் அளவை இன்னும் கொஞ்சம் ஏற்றின கையோடு பஸ் ஏறினோம். பஸ் ஊரை கடக்கும் முன் பாடல் ஒலிக்கிறது… “விடை கொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே..” என்று எம். எஸ். வி உருக்கமாகப் பாட.. முன் சீட்டில் இருந்த மாமாப்பெண் வேகமாகத் திரும்பி, 

“ஹே.. பாட்டு கூட நம்ம சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி இருக்கு பாருங்கப்பா” என்று சொல்லி கூட சேர்ந்து கோரஸ் பாடியபின்,

 “ஊருக்கு தானே போறோம்.. போருக்குப் போற மாதிரி பாட்டெல்லாம் பாடி ஒரு புலம்பல் வேற” என்று எங்களுக்கு நாங்களே சொல்லி, கண்ணில் நீர் வர சிரித்து, மகிழ்ந்ததெல்லாம் ஜாலி பஸ் மொமென்ட்களில் ஒன்று. கண்ணில் வந்த நீர் சிரிப்பினால் வந்ததா அல்லது ஊருக்கு போகும் சோகத்தில் வந்ததா என்பது நாங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

கல்லூரியில் இருந்து பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பொழுது அக்கா, அக்கா பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தான் வருவோம். பொங்கல் நேரம் என்பதால், பைகளை எல்லாம் மற்றவரிடம் கொடுத்துவிட்டு, யாரேனும் இரண்டு பேர் பேருந்தில் இடம் பிடிக்கச் செல்வார்கள். இடம் பிடித்து வைத்துவிட்டு ஒரு அக்கா வந்து,

“ வாங்க போலாம்” என்று பையை எடுக்கும் போது, 

இன்னொரு அக்கா “பாட்டு போடுற பஸ் தானே?” என்று கேட்க

“ஏண்டி இடம் கிடைக்கவே கஷ்டமா இருக்கு.. இதுல பாட்டு கேக்குதா உனக்கு? பேசாம வாங்கடி..” என்று சொல்லிச் செல்ல….. பாட்டு இருக்குமா என்று யோசித்துக் கொண்டே பேருந்து ஏறினால் ‘ஹப்பா நல்ல வேளைக்கு… பாட்டு போடுற பஸ் தான்..’ என்று நிம்மதியானோம் நானும் காயத்ரி அக்காவும். கூட்டமா இருந்ததால் அனைவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

நான் உட்கார்ந்து கொண்டும், என் அருகில் காயத்ரி அக்கா நின்று கொண்டு வந்தபோதும்…. கூட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “பேசாம வாங்கடி ரெண்டு பேரும்” என்று ஒரு அக்கா சொன்னதையும் கருத்தில் கொள்ளாமல், அன்று பார்த்துவிட்டு வந்த “காதலுக்கு மரியாதை” படத்தைப் பற்றி நாங்கள் இருவரும் சிலாகித்துப் பேசிக்கொண்டே வந்தோம்.

பின் காயத்ரி அக்காவிற்கு இடம் கிடைக்க, பின்னாடி ஒரு சீட்டில் போய் உட்கார்ந்துட்டாங்க. சிறிது நேரம் கழித்து, பேருந்தில், அந்த படத்தில் வரும் ஒரு பாடலான “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே” என்று ஜேசுதாஸ் பாட ஆரம்பித்ததும், ஆர்வக்கோளாறில் எழுந்து நின்று திரும்பி “காயத்ரிக்கா அந்தப் பாட்டு தானே?” என்று கேட்க, “ஆமாண்டி” என்று பேசிக்கொள்ள.. பேருந்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்கவும்.. மற்ற அக்காக்கள் சிரித்துக்கொண்டே, “ஏய் அமைதியா வாங்கடி இரண்டு பேரும்” என்று எங்களை அடக்க முனைந்ததும்… மற்றொரு ஜாலி பஸ் மொமென்ட்களில் ஒன்று. 

நல்ல ஆடியோ சிஸ்டமா இருந்தா நமக்கு பிடிக்காதோனு நெனச்ச பாட்டு கூட நமக்கு பிடிச்ச பாட்டா மாறிடும். ரேடியோவில் “ஏஞ்ஜோடி மஞ்ச குருவி” பாட்டு காதுல விழும்போது, ‘நல்ல பாட்டு இல்ல போல’ அப்படின்னு சரியாக கவனிக்காமல் கடந்து போன பாடல்களில் ஒன்று. ஒரு முறை பஸ்ல கேட்டபோது, செம்ம பீட், உற்சாகம் என்று உட்கார்ந்த வாக்கிலேயே கால்களில் தாளம் போட வைத்து ஆட தூண்டியது.

அதுவும் எஸ்.பி.பியின் துள்ளலான குரலில், “ஏறு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது” வரியும், அதுக்கு முன்னாடி வர்ற பீட்டும், அதற்க்கு பின்னாடி “டிங்க் டிங்க் டிங்க்” என்று வரும் சித்ராம்மா குரலும் ‘அப்பப்பா….. ஆட வைக்காம விடறதில்ல’ ங்கற மாதிரி இருக்கும் இளையராஜாவின் இசை. இந்த பாட்டு பஸ்ல கேட்ட பிறகு தான் இவ்வளவு ரசிக்கத் தூண்டியது மட்டுமல்லாமல் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டாவும் மாறிப்போச்சு.. இது போல நிறைய பாடல்களைச் சொல்லலாம்.

 பிறருடன் சேர்ந்து செல்லும் பொழுது, அருகருகே அமர இடம் கிடைக்காத போதும் நமக்கு பிடித்த பாட்டு வரும் பொழுது, தூரத்தில் இருந்தாலும், கண்களாலேயே பார்த்து பேசி சந்தோஷப்பட்டுக் கொள்வது ஒரு சுகம்.

சிலமுறை நானும் எங்க அக்காவும் நல்ல பாட்டு ஓடிக்கொண்டிருந்தால் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டால் கூட “ஹேய் பாட்டு நல்லா இருக்குப்பா.. செட் நல்லா இருக்கு… அப்படியே போயிட்டு அடுத்த பஸ்ல திரும்பி வந்துக்கலாமா?” அப்படின்னு கூட யோசிப்போம். பேசிப்போம். ஆனா இதுவரைக்கும் செஞ்சதில்ல. சமீபத்தில் கூட பத்து நிமிட பேருந்து பயணத்தில் ஏ .ஆர். ரகுமான் பாடல்கள். ரொம்ப நாள் கழிச்சு ‘மின்சார கனவு’ படத்தில் வரும் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாட்டு. கேட்க அவ்வளவு ஆனந்தம். அடுத்தும் நல்ல பாட்டு. இறங்க மனதில்லாமல் இறங்கினோம்.

ஒரு முறை திருச்சியில் இருந்து சேலத்திற்கு பின் மாலையில் தொடங்கி முன்னிரவில் போய் சேரும் வரை பேருந்தில் ஒலித்த ஜேசுதாஸ் பாடல்களின் இதம் இன்றளவும் மனதில் இருக்கிறது. இதமான சாரல் மழை இரவில் கேட்க நேரும், எஸ்பிபி ,ரஹ்மான், இளையராஜா, தேவா பாடல்கள் மட்டுமல்லாமல் பின் இரவு நேர பயணங்களில் பெரும்பாலும் ஒலிக்கும் டி.எம்.எஸ் & சுசீலாவும் ஏகாந்தம் தான்.

இதமான மெல்லிசை பாடல்கள் தான் என்றில்லாமல், துள்ளலான பாடல்களும் நம்மை ஆடத் தூண்டும் பாடல்களும், அமர்ந்து கொண்டே கால்களில் தாளமிட்டமாறு ஆட வைக்கும் பாடல்களும் சந்தோஷத்தை கூட்டுபவைதான்.

சமீபமாக, தனியான, ஒரு மணி நேர பேருந்து பயணங்களை, அதில் ஒலித்த, 90களின், தேவா, வித்யாசாகர், சிற்பி, ஆதித்யன் ஆகியோரின் பாடல்களின் கலவை மிகவும் இனிமையானதாக்கியது. சில சமயங்களில் எஸ்பிபி, ஜேசுதாஸ் லாம் நம்ம காது கிட்ட வந்து நமக்காகவே பாடற மாதிரி இருக்கும். அட ஆமாம்ப்பா… நின்று கொண்டே பயணிக்கும் போது ஸ்பீக்கர் அருகில் இருந்தால் அப்படித்தான்ப்பா இருக்கும்.  

சித்தரிப்புப் படம்

நமக்கு பிடித்த பாடல்களை நாமாக தேர்வு செய்து கேட்பது ஒரு சுகம். ஆனால் அதைவிட, ரேடியோவிலோ, தற்போது மியூசிக் சேனல் அல்லது இது போன்ற பேருந்து பயணங்களிலோ, வரிசையாக நமக்கு பிடித்த பாடல்களை கேட்க நேர்வது சுகமோ சுகம்.

நாம் ரசித்த, ஆனால் ரொம்ப நாளாக கேட்க மறந்த பாடல்கள் ஒலித்தால் இன்னும் ஆனந்தம். உலகை மறந்து ரசிக்கலாம். அதுபோல ரசிக்கும் பொழுது இறங்க நேர்ந்தால் தான், “அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா??”, “இன்னும் கொஞ்ச நேரம் போனா தான் என்ன? என்ன அவசரம்” னு ஏங்க வைக்கும்.

 சோகமோ சந்தோஷமோ, அதிரடியோ மெல்லிசையோ, பழசோ புதுசோ மொத்தத்தில் பேருந்தும் அதில் ஒலிக்கும் பாடல்களும் என்றென்றும் ஏகாந்தம் தான். நாம சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் போது, நம் மீது இதமாக மழை பொழிவது போல, நம்மை குளிர்விக்கும் பாடல்களும் பேருந்து பயணமும் சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் தான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Vikatan Play: கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? எழுத்தாளர் இரா.முருகவேள் படைப்புகள் - ஆடியோ வடிவில்

“ தமிழ்ச்சூழலில் தான் கொண்ட பொதுவுடமை அரசியலை தன் களச்செயற்பாட்டில் மட்டுமின்றி படைப்பின் வழியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள். அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், மொழிப... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்த நிகழ்வு! - மனதிற்கு அரிய மருந்தான மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! - நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கர்மாவும் நாயின் வாலும்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க