"என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள்" - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளி...
RollsRoyce: முதல்ல அட்லி; இப்போ நயன்தாரா! 10 கோடி ரூபாய்க்கு இந்தக் காரில் என்ன இருக்கு?
ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் CEO ஆன Chris Brownridge இப்படிச் சொல்லியிருந்தார். ‛‛எங்கள் காரைப் போக்குவரத்துக்காக மட்டும் வாங்கமாட்டார்கள் விஐபிக்கள். அதைத் தாண்டி எங்கள் கார் ஒரு Work of Art. ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்!’’ என்றார்.
‛‛ரோல்ஸ்ராய்ஸ் காரை ஆன் செய்யும்போது பானெட்டில் இருந்து வெளிவரும் இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலையைப் பார்த்தாலே கூஸ்பம்ப் ஆகிறது!’’ என்றார், ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கிய ஒரு பிரபல நடிகை.
நிஜம்தான்; ரோல்ஸ்ராய்ஸ் ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பலாகத்தான் இருந்து வருகிறது. இந்திய விஐபிக்களில் அமிதாப் பச்சன், அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா.. நம் ஊரில் ஷங்கர், விஜய், தனுஷ் என்று ஏகப்பட்ட செலிபிரிட்டிகள் ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகைகளில் முதன் முறையாக நயன்தாராவும், இளம் இயக்குநர்களில் முதன்முறையாக அட்லியும் சேர்ந்துள்ளார்கள்.
‛முதன் முறையாக’ என்று அடைமொழி சொல்வது இவர்கள் வாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக! ஆம், இந்தியாவின் காஸ்ட்லி எலெக்ட்ரிக் லிமோசின் காரான ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எனும் மாடலை வாங்கியிருக்கிறார்கள் இருவரும்!

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் பிறந்த தினமான நவம்பர் 18 அன்று, இந்த எலெக்ட்ரிக் காரைப் பரிசளித்திருக்கிறார் தனது காதல் மனைவிக்கு. இந்த மாதத் தொடக்கத்தில் அட்லியும் இதை வாங்கியிருந்தார். கறுப்பு நிற ஸ்பெக்டரில் அட்லி விமான நிலையத்தில் இறங்குவது போல உள்ள வீடியோவும், நீல நிற Black Badge ஸ்பெக்டர் காரின் முன்பு நயன்தாரா தனது குடும்பத்துடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களும் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

2023-ல் ஏற்கெனவே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் மேபேக் (Mercedes Maybach) காரையும், 2024-ல் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் GLS600 காரையும் பரிசளித்து இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த வரிசையில் தற்போது ரோல்ஸ்ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரும் இணைந்துள்ளது.
இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.5 கோடி ரூபாயில் ஆரம்பிக்கிறது. ஆன்ரோடு விலைக்கு வரும்போது இது சுமார் 10 கோடியைத் தொட்டிருக்கும். 10 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது?
ரோல்ஸ்ராய்ஸ், ஒரு பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம். பொதுவாக, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை ஒரு ஹாரர் நிறுவனம் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. தனது கார்கள் எல்லாவற்றுக்குமே பேய்களின் பெயராக வைத்து அதகளம் பண்ணுவதுதான் ரோல்ஸ்ராய்ஸின் ஸ்டைல்.
அந்த நிறுவனத்தின் கார்களின் பெயர்களைப் பாருங்கள். ‘கோஸ்ட்’, ‘பேந்தம்’ – இப்படிப் பேய்ப் பெயரை வைப்பதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.

ஸ்பெக்டர் என்பதை வேறு மாதிரி அர்த்தங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான ஒளிரும் தன்மை, நிழல் - இப்படியும் சொல்லலாம். புரியுறது மாதிரி சொல்லணும்னா, சட்டென அமானுஷ்யமான உருவம் ஒன்று வெளிச்சக் கீற்றுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்பெக்டர்.
பெயருக்கு ஏற்றபடி எங்கே பார்த்தாலும் இல்லுமினேட் ஆகும் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர். பக்கத்தில் போய் நின்றால், நம் உருவமே அப்படி மின்னுகிறது. இதன் கிரில் க்ரோம் வேலைப்பாடு அப்படி! இந்த எல்இடி ட்ரிப்பிள் ஸ்டேஜ் ஹெட்லைட்கள், பேன்ட்டம் காரில் இருப்பவை. இதுவும் இல்லுமினேஷனுக்குப் பெயர் பெற்றதுதான். இரவு நேரங்களில் கிட்டத்தட்ட 500 மீட்டர் வரை வெளிச்சம் பீய்ச்சியடிக்கும். அங்கேயும் ரோல்ஸ்ராய்ஸின் RR லோகோ ஒரு மாதிரி இல்லுமினேட் ஆகிறது.
ஸ்பெக்டர், பெரிய ஆலப்புழா படகுபோல் இருக்கும்.5.5 மீட்டர் இதன் நீளம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 5,475 மிமீ. இதன் அகலமே 2 மீட்டருக்கு மேல்! ஸ்பெக்டரின் மிகப் பெரிய கவர்ச்சியே, Spirit of Ecstasy என்று சொல்லக்கூடிய, இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலைதான். காரை ஆன் செய்தால் பானெட்டில் இருந்து பாப்-அப் ஆகும் அந்தச் சிலையின் அழகு நிஜமாகவே கூஸ்பம்ப் மொமென்ட்தான்! இதில் பென்ஸ் ஆஃப்ரோடு காரைவிடப் பெரிய அலாய் வீல்கள் இருக்கின்றன. 23 இன்ச். வேறெதிலும் இத்தனை பெரிய வீல்கள் இல்லை. அதுவும் 3D எஃபெக்ட்டில் மின்னுகின்றன. இதுவும் இல்லுமினேட்டட்தான்.

ஏரோடைனமிக் வேலைப்பாட்டில் பென்ஸ், பிஎம்டபிள்யூவே பட்டையைக் கிளப்புகின்றன. ரோல்ஸ்ராய்ஸ் ஏனோதானோ என்றா இருக்கும்? இதன் ஏரோடைனமிக் Co-Efficient Drag Force –ன் அளவு வெறும் 0.25cdதான். காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் ஒரு காருக்கு, அதன் டிராக் ஃபோர்ஸ்தான் மிக முக்கியம்.


இந்த அளவை Co-Efficient Drag என்பார்கள். இந்த அளவு குறையக் குறையத்தான் ஸ்டெபிலிட்டி கிடைக்கும். அதற்கு காரின் டைனமிக்ஸில் நல்ல வேலை பார்ப்பார்கள் கார் டிசைனர்கள். 0.30cd–க்கு உள்ளே இருக்கும் எந்தக் காருமே நிலைத்தன்மையில் பெஸ்ட்டாக இருக்கும். அதனால் ஸ்பெக்டர் ஓடாது; ஆடாமல் பறக்கும்!
இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் எத்தனை என்று தெரியவில்லை. ஆனால், தரையில் கிட்டத்தட்ட ஒட்டிப் போய்த்தான் இருக்கிறது. ஸ்பெக்டரின் அடிப்பாகம். இங்கேதான் 102kWh சக்தி கொண்ட பெரிய பேட்டரியைப் பொருத்தியிருக்கிறார்கள். இதன் பின் பக்கம் ரோல்ஸ்ராய்ஸின் இன்னொரு காரான Wraith கார் போலவே இருக்கும்.

இன்டீரியரைப் பொறுத்தவரை உள்ளே நுழைந்ததும், வைரம் போன்று ஒரு கடிகாரம் க்ளாஸிக் ஸ்டைலில் கலக்கும். இந்த ஸ்பெக்டரில் பல கூலான ஃப்யூச்சர்கள் உள்ளன. முக்கியமாக, Star Light எஃபெக்ட். கதவுகள், ரூஃப் என்று காரைச் சுற்றிலும் வதவதவென நட்சத்திரங்கள் மினுக்குகின்றன. சட்டென்று ஒரு இரவு நேர பப்புக்குள் நுழைந்ததுபோல் வசீகரமாக இருக்கும் இதன் இன்டீரியர். ஒரு மிகப் பெரிய ஸ்பெஷல் - இந்தப் பாகங்கள் எல்லாம் கைகளாலேயே நெய்யப்பட்டவை. எல்லாமே Handmade Craftsmanship. உள்ளே மர வேலைப்பாடுகள்தான் அதிகமாகத் தெரிந்தன. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், Hold பட்டன், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் எல்லாமே வலதுபக்கம் கிளஸ்ட்டருக்குக் கீழே ஒரு அரை வட்ட வடிவ பேனல்…

அதற்கும் கீழே இருப்பது ஸ்டைலாக இருக்கும். ஆல் அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் எனும் கட்டுமானத்தில், எடைக் குறைப்புக்காக அதிக ஃபைபர், ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் என்று பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறார்கள் டிசைனர்கள். அப்படியும் இதன் எடை 2,890 கிலோ.


இது ஒரு 2 டோர் கூபே. அதனால், 2 கதவுகள்தான் இருக்கும். டிக்கியோடு சேர்த்து 3. உள்ளே 4 பேர் வேண்டுமானால் தாராளமாகப் போகலாம். பின் பக்கம் செல்பவர்களுக்குக் கதவு கிடையாதே.. அதனால், முன் சீட்டை மடித்துத்தான் உள்ளே போக வேண்டும்.
ஸ்பெக்டரில் இரண்டு Separately Excited Synchronous Motor (SSM) மோட்டார்கள் உள்ளன. இதன் பவர் 593bhp மற்றும் டார்க் 900Nm டார்க். இது கிட்டத்தட்ட இனோவா காரின் பவருக்கு 3 மடங்கு அதிகம். 0–100 கிமீ–யை வெறும் 4.5 விநாடிகளில் தொடும் இந்த ஸ்பெக்டர். இதில் சாதாரண 22kW ஹோம் சார்ஜரில் சார்ஜ் செய்தால், சுமார் 5.30 மணி நேரங்களில் 100% ஆக்கிவிட்டுப் பயணத்தைத் தொடரலாம். இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு. 50kW (DC) ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால், 10-80% சார்ஜிங்கை 95 நிமிடங்களில் ஏற்றிவிடலாம். 34 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் 195kW (DC) அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கும் உண்டு.
இது சிங்கிள் சார்ஜுக்கு (WLTP)படி 530 கிமீ போகும் என்கிறது ரோல்ஸ்ராய்ஸ். ஆனால், ரியல் டைமில் ஒரு தடவை சார்ஜ் போட்டுவிட்டு சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போய்விட்டு ரிட்டர்ன் வரலாம்; இல்லையென்றால் பெங்களூர் போகலாம்!
நயன்தாரா, அட்லி என்று விஐபிக்கள் ஸ்பெக்டரை வாங்கினாலும் - சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் பில்டர் உரிமையாளர் யுவராஜ் என்பவர்தான் இந்தக் காரின் முதல் வாடிக்கையாளர்.


2 கோடி ரூபாய் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் காரில் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள், பெரிய 108.2kWh பேட்டரி பேக், சிங்கிள் டச்சில் மடியும் சீட்கள் எனப் பல விஷயங்கள் இருந்தாலும்…. செலிபிரிட்டிகள், 5 மடங்கு விலை அதிகமாக இருக்கும் ரோல்ஸ்ராய்ஸுக்குப் போவதற்குக் காரணம் ஏன்? அந்த ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்தான்!















