ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS ...
சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு 2 வழக்குகள் பதிவுசெய்து, உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமாருக்கும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை ஆஜராகும்படி சிறப்பு புலானாய்வு குழு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் சாக்குப்போக்குச் சொல்லி விசாரணைக்கு ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். பத்மகுமாரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்குழுவினர் இன்று மாலை பத்மகுமாரை கைது செய்தனர்.

2019-ம் ஆண்டு வாசு தேவசம்போர்டு கமிஷனராக இருந்த சமயத்தில் பத்மகுமார் தேவசம்போர்டு தலைவராக இருந்தார். அந்த சமயத்தில்தான் தங்கம் மோசடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநடை கட்டளையில் தங்கம் பதிக்கப்பட்டிருந்த நிலையில், செம்பு கட்டளை என அன்றைய கமிஷனர் வாசு பதிவுசெய்திருந்தார். அது அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாருக்கும் தெரிந்தேதான் நடந்தது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்துள்ள உன்னி பத்மகுமாருக்கும் பிசினஸ் தொடர்பான பந்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை ஆளும் சி.பி.எம். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார் பத்மகுமார். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை விவகாரத்தை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய விவகாரமாக கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. பத்மகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

















