ஆளுநருக்கு காலக்கெடு: Supreme Court தீர்ப்பு என்ன? | SIR DMK TVK ADMK VIJAY EPS ...
``கம்பீருக்கு எதிராக சிலர் அஜெண்டா" - இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகினார். அதைத்தொடந்து சாம்பியன் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், அவர் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணி சில வெற்றிகளையும், பல மோசமான தோல்விகளையும் கண்டது. முதலில், இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது.
அதைத்தொடர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது. அதுவும் 3 - 0 என மோசமான தோல்வி.

அடுத்ததாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது. இவற்றுக்கெல்லாம் ஆறுதலாக சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்திய அணி.
ஆனால், அடுத்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ரோஹித்தும், கோலியும் திடீரென ஓய்வை அறிவித்தனர். அவர்கள் ஓய்வு விவகாரத்தில் ஏன் என்ற கேள்விக்கான பதில் இன்னும் புதிராகவே இருக்கிறது.
இதற்கு மத்தியில் இங்கிலாந்து தொடரை போராடி சமன் செய்த இந்தியா தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட நடப்பு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 124 ரன்கள் டார்கெட் கூட அடிக்க முடியாமல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அந்த அணிக்கெதிராக படுதோல்வியடைந்திருக்கிறது.
கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்திய அணி ஆடிய 5 டெஸ்ட் தொடர்களில் வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற சிறிய அணிகளிடம்தான் மட்டும்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.
கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4-ல் தோல்வியடைந்திருக்கிறது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த மூன்று தலைமைப் பயிற்சியாளர்கள் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, டிராவிட் ஆகியோர் பயிற்சிக் காலத்தில் இந்திய அணி தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கைக்கு சமம்.
தற்போது, நடப்பு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா இனி வெல்லவும் வாய்ப்பில்லை. முடிந்தவரை கடைசி டெஸ்ட்டில் வெற்றிபெற்று தொடரை இழக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

கம்பீர் தலைமையிலான பயிற்சியின் கீழ் இந்திய அணியின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் காரணமாக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் அவர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், கம்பீருக்கெதிராக சிலருக்கு தனிப்பட்ட அஜெண்டா இருக்கலாம் என்று கம்பீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதான்ஷு கோடக், ``தோல்விக்கான (தென்னாப்பிரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட்) பொறுப்பை தான் ஏற்பதாக கம்பீர் கூறியிருக்கிறார். ஏனெனில் மைதானப் பொறுப்பாளர்கள் அதற்கு பொறுப்பேற்பதை அவர் விரும்பவில்லை.
மக்கள் கம்பீரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் என்ன செய்தார்கள், பேட்டிங் கோச் என்ன செய்திருக்க வேண்டும் என்று யாரும் குறிப்பிடுவதில்லை.
தோற்ற போட்டிகள் அனைத்தும் கம்பீரைப் பற்றியதாக மாறுகிறது. இதில் சிலருக்கு கம்பீர் மீது தனிப்பட்ட அஜெண்டா இருக்கலாம். இது மிகவும் மோசமானது" என்று கூறினார்.

















