சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் ...
IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவின் பவுலிங்கைத் தாக்க முடியாமல் முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் பாதியிலேயே, மார்கோ யான்சென் (3 விக்கெட்டுகள்), ஹார்மர் (4 விக்கெட்டுகள்) பவுலிங்கில் சிக்கி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில், இந்திய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக 4 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு அவர் களத்துக்குத் திரும்பவில்லை. அதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பொறுப்பை ரிஷப் பண்ட் கவனித்துக் கொண்டார்.
30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் டெம்பா பவுமாவின் அரைசதத்தால் 150 ரன்களை கடந்து 153 ரன்களில் தென்னாப்பிரிக்கா ஆல் அவுட் ஆனது.
டெம்பா பவுமா 55 ரன்களுடன் அவுட்டாகாமல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

அதையடுத்து, 124 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுலை தனது முதல் இரு ஓவர்களிலேயே அவுட் ஆக்கி அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மார்கோ யான்சென்.
அவரைத்தொடர்ந்து ஹார்மரும் சில ஓவர்கள் இடைவெளியில் ஜுரேல், பண்ட், ஜடேஜா ஆகியோரை வரிசையாக அவுட் ஆக்கி, இந்தியா 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த சமயத்தில் மார்கோ மற்றும் கேஷவ் மகாராஜா மீதமிருந்த இரு பேட்ஸ்மேன்களான வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பதேல் ஆகியோரையும் பெவிலியனுக்கு அனுப்பி, இந்தியா 93 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் பாதியில் வெளியேறிய சுப்மன் கில்லுக்கு இரண்டாவது இன்னிங்ஸிலும் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டதால், இந்தியா ஆல் அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹார்மர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.



















