ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள...
BB Tamil 9 Day 41: பாரு, திவாகரை வறுத்தெடுத்த விசே; பார்வையாளர்களை குதூகலிக்க வைக்கும் பிக் பாஸ்
இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவும் நியாயமாக இருந்ததா?
வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்படுவது கமர்ஷியல் திரைப்படங்களின் வெற்றிக்கான ஆதாரமான ஃபார்முலா. அதுபோல இந்த சீசனின் பெரும் கலகவாதியான பாருவை இழக்கவிரும்பாமல் அவரைக் காப்பாற்றி தக்க வைத்துக்கொள்ள பிக் பாஸ் டிராமா ஆடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 41
இந்த எபிசோடை இரண்டு பிரிவுகளாக பார்க்கலாம், ஒன்று, பாரு மற்றும் திவாகரை டிசைன் டிசைனாக விசே ரோஸ்ட் செய்தது.
அப்பாவி எம்ஜிஆரை நம்பியார் அடித்து துவைக்கும்போது ‘அய்யோ... பாவம்... இந்த வில்லனை கேள்வி கேட்க ஆளே இல்லையா?” என்று பார்வையாளர்கள் மனம் பதைப்பார்கள். பிறகு இன்னொரு வீர எம்ஜிஆர் வந்து வில்லனை ‘நான் ஆணையிட்டால்’ என்று சவுக்கால் அடிக்கும்போது ‘அப்படிப் போடு’ என்று குதூகலிப்பார்கள். இப்படியாக எழுப்பப்படும் பரவசம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பிக் பாஸ் ஷோவில் நடப்பதும் இதேதான். போட்டியாளர்களை மோதும் படியான சூழலை ஏற்படுத்தி, அதில் அடாவடி நபர்களை இயன்ற அளவிற்கு கத்தவிட்டு ‘ச்சே.. இப்படியா ஒருத்தன் இருப்பான்... வீக்கெண்ட் வரட்டும்.. எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவது. அந்த உணர்ச்சிக்குத் தீனி போடுவது போல விசாரணை நாளில் சம்பந்தப்பட்ட போட்டியாளரை host வறுத்தெடுக்கும்போது ‘சூப்பர்.. பாஸ்.. அப்படிக் கேளுங்க’ என்று பார்வையாளர்கள் குதூகலமடைவார்கள்.
கமர்ஷியல் திரைப்படங்களின் அதே ஃபார்முலாதான் பிக் பாஸ் டிசைனிலும் இருப்பதாகத் தெரிகிறது. எனவே பாரு மற்றும் திவாகரை வறுத்தெடுக்கும் வேலையை விசே நன்றாகவே செய்தார்.
இரண்டாவது பகுதியில் அப்படியே யூடர்ன் போட்டு பாருவின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு நடுவர்கள் உள்ளிட்டு ஒட்டு மொத்த வீட்டையும் வறுத்தெடுத்தார். “ஏங்க.. பாரு என்னனெல்லாம் அநியாயம் பண்ணாங்க..” என்று பார்வையாளர்களால் கேட்க முடியாது. ஏனென்றால் அதற்காகத்தான் பாருவை முதலிலேயே ரோஸ்ட் செய்து விட்டார்களே!.. மிகவும் திறமையான வடிவமைப்பு.

ஒவ்வொரு வார இறுதியிலும் விசே என்னதான் கண்டித்தாலும் பாருவும் திவாகரும் தாங்கள் செய்ததை அப்படியேதான் இம்மி பிசகாமல் செய்கிறார்கள். இன்னமும் கேட்டால் அவர்களின் அலப்பறை கூடிக் கொண்டேதான் போகிறது. ஒருவேளை இப்படி இருக்குமோ “தோ.. பாருங்க.. ஷோக்குள்ள பிக் பாஸூம் உங்களை கண்டிப்பாரு. வீக்கெண்ட்ல விசேவும் வந்து கண்டிப்பாரு.
அதெல்லாம் லுலுவாய்க்கு.. நீங்க செய்யறதை அப்படியே கண்டினியூ பண்ணுங்க.. அப்பதானே எங்களுக்கு கன்டென்ட் கிடைக்கும்’ என்று பாரு, திவாகர் போன்றவர்களுக்கு திரைமறைவு அஜெண்டா தரப்பட்டிருக்குமோ? யார் கண்டது? விசே மொழியில் மீடியாவிற்குள் இருப்பவர்களுக்குத்தான் இது தெரியும். பாம்பின் கால் பாம்பறியும். நாம் என்னத்தைக் கண்டோம்?!
பாருவை சர்காஸ கேள்விகளால் வறுத்தெடுத்த விசே
கையில் செங்கற்களுடன் வந்த விசே “என்னென்ன குறீயீடுகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க. பாருங்க மக்களே. இந்த பாரு இருக்கே” என்று சிரித்தபடி ஆரம்பிக்க ‘இருக்கு.. இன்னிக்கு சம்பவம் இருக்கு’ என்று பார்வையாளர்கள் குதூகலமானார்கள்.
உள்ளே சென்றவுடன் ‘கண்ணு எப்படியிருக்கு?” என்று பாருவை விசாரித்த விசே “உங்க ரசிகர்கள் எல்லாம் வெளில ரொம்ப கவலையா இருக்காங்க.. பாருவை வெளியே அனுப்பிடுங்கன்னு சொல்றாங்க. பாருவை கேள்வி கேட்க முடியாது. எனக்கும் ஒரு பேரு வெச்சிடுவாங்க.. இல்லையா.. பாரு. நீங்களும் மீடியால்ல இருக்கறவங்கதானே.. பாம்பின் கால் பாம்பறியும்” என்று சர்காஸமாக பாருவை வறுதெடுக்க அசட்டுத்தனமாக சிரித்து சமாளித்தார் பாரு. ஆக விசேவிற்கும் பாருவிற்கு அடிபட்டது குறித்து உண்மையான அக்கறை இல்லை. அதுவொரு பாவனை மட்டுமே என்பதாகத் தெரிகிறது.

யார் யாருக்கு என்னென்ன பட்டப்பெயர்களை பாரு வைத்திருக்கிறார் என்கிற விசாரணை ஆரம்பமாயிற்று. கனிக்கு ராஜமாதா என்று பாரு பெயர் வைத்தததில் பிரச்சினை ஒன்றுமில்லையாம். அது இருவரும் பேசிக்கொள்ள வேண்டியதாம். இதைப் போலவே மற்றவற்றையெல்லாம் நகர்த்திக் கொண்டே வந்தார். ‘அரோராவிற்கு ‘குசும்பி’ன்னு பேரு வெச்சேன்’ என்று குழந்தைக்கு பெயர் வைத்த பாசத்துடன் பாரு சொல்ல ‘அரோரான்னா அவ்வளவு செல்லமா?” என்று கிண்டலடித்தார் விசே.
கம்ருதீன் பிரச்சினை காரணமாக அரோராவை எப்படியெல்லாம் பாரு அவதூறு செய்கிறார், வன்மத்துடன் ஃபிரேம் செய்கிறார் என்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். என்றாலும் ‘குசும்பி’ என்று சிரித்துக்கொண்டே பாருவால் எப்படி சொல்ல முடிகிறது?
பாணபத்திர ஓணாணடி என்கிற கிண்டலை விக்ரம் செய்கிற கலகம் காரணமாகத்தான் பாரு வைத்திருப்பார் என்று தோன்றுகிறது. ‘பான’ என்று விக்ரமின் உருவம் குறித்த கேலியாக இருக்காது என்று நினைக்கிறேன். ‘அந்த வார்த்தையை நான் கனெக்ட் பண்ணவேயில்ல’ என்று பாரு விளக்கம் தந்த போது விசே ஏற்கவில்லை. “இல்லை.. நீங்க பண்ணது பாடி ஷேமிங்தான்” என்று கறாராக தீர்ப்பளித்து விட்டார். இந்த ஒரு விஷயத்தில் பாரு பக்கம் சிறிது நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.
“உங்க பார்வைலதான் வக்கிரம் இருக்கு” - விசே அதிரடி
இப்படியெல்லாம் சுற்றி கடைசியாக பாயிண்ட்டிற்கு வந்தார் விசே. விக்ரமை ‘வக்ரம்’ என்று பாரு தொடர்ந்து சொல்வது. “ஒருவேளை ரைமிங்கா சொல்றீங்களா..?” என்று விக்ரம் கேட்ட போது “அது மட்டுமில்ல.. உள்ளே ஒண்ணு வைச்சிக்கிட்டு வெளியே ஸ்வீட்டா பேசறது” என்று தப்பும் தவறுமாக வியாக்கியானம் அளித்த பாரு, விசாரணை நாளில் ‘எனக்கு தமிழ் அகராதில்லாம் தெரியாது” என்று பிளேட்டை திருப்பிப் போட்டார்.
“விக்ரமும் சொல்ல வேணாமின்னு சொன்னார்.. ஆனா கோபத்துல சொல்லிட்டேன்” என்று பாரு சமாளிக்க “பாரு.. நீங்க ஒரு விஜே.. கோபத்துல சொல்ற ஆளா நீங்க.. சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்கள் எப்படி தெறிச்சு ஓடறாங்கன்ற டெக்னிக் உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரியாமயா சொல்வீங்க?” என்று விசே மடக்க அசட்டுத்தனமாக சிரித்தார் பாரு.

“அது என்னங்க.. மசக்கை வந்தா மாதிரி நிறைய பேரு வாந்தியெடுத்து காண்பிக்கறீங்க.. எலிமெண்டரி ஸ்கூல் பசங்க கூட இப்படி பண்ண மாட்டாாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப அருவருப்பா இருக்கு.. நானும் அப்படியே பண்ணா நல்லா இருக்குமா?” என்று வார்த்தைகள் கிடைக்காமல் சலிப்புடன் பிரேக்கில் சென்றார் விசே.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, கையில் பிளாக்குகளுடன் வரும் போதே தெரிந்து போயிற்று. அது ஆபாசக் குறியீடு தொடர்பான பஞ்சாயத்து. “இது இப்படி அடுக்கினா.. பிளாக் சரியாதுன்னு அர்த்தம். இது எப்படி உங்களுக்கு ஆபாசமா தெரிஞ்சது.. எனக்கே சொல்ல கூச்சமா இருக்கு..” என்றெல்லாம் வறுத்தெடுத்து விட்டு, ‘சம்பந்தப்பட்டவங்க எழுந்திருங்க’ என்னும் போது அரோரா எழ, திவாகர் கமுக்கமாக உட்கார்ந்திருந்தார்.
பார்வையாளர்கள் இதைச் சுட்டிக் காட்டியவுடன், கவுண்டமணியிடம் திட்டு வாங்கும் செந்தில் மாதிரி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு எழுந்தார். “ஆபாசக் குறியீடு பண்ணிட்டாங்க. ஆபாசக் குறியீடு பண்ணிட்டாங்க” என்று பாருவின் தூண்டுதல் காரணமாக அப்போது அலறிய திவாகர், இப்போது கள்ள மௌனமாக இருந்தது அயோக்கியத்தனம். ஒவ்வொரு பெண் போட்டியாளரிடமும் சென்று இவர் வழிவதும், இணைந்து ரீல்ஸ் போட வற்புறுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் ஆபாசமில்லையா? அரோராவிடமே அப்படி செய்து விட்டு பிறகு அவர் மீதே புகார் சொல்வதெல்லாம்……
“தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என்று திவாகர் மென்று முழுங்க “இது உங்க பார்வையோட பிரச்சினை. இதுக்குப் பேர்தான் வக்கிரம்” என்று விசே சொன்னவுடன் கூட்டத்தில் விசில் சத்தம் கேட்டது. விக்ரமிற்கு குஷியாக இருக்குமென்றாலும் அதிகம் மகிழ்ச்சியைக் காட்டாமல் அமைதியாக இருந்தார்.
வார்த்தைகளை பயன்படுத்துவதில் விசேவிற்கும் தேவை கட்டுப்பாடு
“இந்தப் பிரச்சினையை பெருசாக்க வேணாமுன்னு நெனச்சேன்” என்று அபாண்டமாக புளுகிய அதே பாருதான் “எல்லோரையும் லிவ்விங் ஏரியாவிற்கு கூட்டிட்டு வா.. அப்ப சொல்றேன்” என்று பிரச்சினையை நன்றாக எரிய வைக்க திட்டமிட்டவர். ஏனெனில் அது கம்ருதீன் தொடர்பாக அரோரா மீதிருக்கும் வன்மம். இதற்கு பழிவாங்க திவாகரை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

“விக்ரமிற்கு நான் ஒண்ணும் சப்போர்ட் பண்ணலை. அவர் ஜெயிச்சா எனக்கா காசு கொடுக்கப் போறாரு” என்றெல்லாம் சொன்ன விசே “அவருக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இல்ல” என்று சொன்னது நெருடல். பாருவை அப்படி போட்டு வாங்கும் விசே, இப்படிப்பட்ட வார்த்தைகளை சபையில் பேசுவதை தவிர்த்திருக்கலாம்.
விக்ரம் மீது எனக்கு தனிப்பாசம் இல்லை’ என்பதை நிரூபிக்க விசே ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என்று பார்த்தால் பிறகுதான் அதற்கான காரணம் தெரிந்தது. வீட்டிற்குள் “விஜய்சேதுபதி எப்படியும் விக்ரமிற்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்” என்று பாரு சொல்லியிருக்கிறார். “பாத்தீங்களா. எனக்கும் ஒரு லேபிள் ஒட்டிட்டாங்க” என்று சிரிப்புடன் சொல்லி விட்டு பிரேக்கில் சென்றார்.
தனக்கு நீதி வழங்கப்பட்ட மகிழ்ச்சி அரோராவின் முகத்தில் தெரிந்தது. ‘நான் அப்பவே சொன்னேன். வக்ரம்ன்னு திரும்பத் திரும்ப சொல்ல வேணாம்ன்னு” என்றார் விக்ரம். ஆனால் திவாகரோ “இது பாருக்கும் மட்டும் கிடையாது. எல்லோருக்கும்தான்” என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இவங்க இரண்டு பேருமே திருந்தறதுக்கான அறிகுறியே இல்ல!)
இரண்டாவது பகுதியில் யூடர்ன் போட்டு அடித்த விசே
பிரேக் முடிந்து திரும்பிய விசே, இப்போது இன்னொரு அவதாரம் எடுத்தார். பாருவை ரோஸ்ட் செய்து முடித்தவுடன் அதை சமன் செய்ய, எதிர்ப்பக்கம் இருப்பவர்களையெல்லாம் வறுத்தெடுப்பது.
பாட்டில் மணி டாஸ்க்கில் பாருவிற்கு அடிபட்டது துரதிர்ஷடமானது. இது முதல் ரவுண்டில் ஏற்பட்ட விபத்து. சபரி இதை திட்டமிட்டு செய்திருப்பார் என்று தோன்றவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் பாருவை அவர் மிகவும் ஆக்ரோஷமாக தள்ளி விட்டது வெளிப்படை. காலில் மிதித்து முரட்டுத்தனமாக மோதி அப்புறப்படுத்தியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த வகையில் விசே கேட்ட காட்டமான கேள்விகள் எல்லாம் நியாயமானவை.
ஆனால் இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் இருந்தது. அதை பிக் பாஸ் டீம் மிகத் திறமையாக மறைத்து அவர்களுக்கு சாதகமான வீடியோ பகுதியை மட்டும் ஒளிபரப்பியது. விசேவும் அந்த நாடகத்தை திறமையாக ஆடினார்.

ஆட்டம் முதற்கொண்டே பார்வதி கன்னாபின்னாவென்று விதிகளை மீறினார். ஒரே சமயத்தில் இரண்டு பாட்டில்களை கையில் எடுத்தார். சக போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும்போது பாட்டில்களை கையில் பிடிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் திவ்யா வந்து கைப்பற்ற முயலும் போது இரு பாட்டில்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நடுவர்களும் சக போட்டியாளர்களும் இதை எச்சரித்தும் பாரு ஏற்கவேயில்லை.
இதனால் ஒரே ஆட்டத்தை மீண்டும் மீண்டும் ஆட வேண்டியிருந்தது. இரு பாட்டில்களையும் கையால் பிடித்த திவ்யா, நடுவர்கள் சுட்டிக் காட்டியதும் “சரி.. ஓகே..” என்று ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பாருவிடம் சுத்தமாக இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று தன் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுத்தார். நடுவர்களின் பேச்சையும் மதிக்கவில்லை.
பாருவின் மீது நிகழ்ந்த வன்முறை நியாயமல்ல. ஆனால்?..
கனி செய்த ஒரே தவறு, மூன்றாவது ரவுண்டில், பாரு கோட்டிற்குள் கால் வைத்ததை வைத்து ‘டிஸ்குவாலிஃபைட்’ என்று அறிவித்ததுதான். மற்ற போட்டியாளர்களின் பாட்டில்களை கைப்பற்ற ஓடும் போதுதான் கோட்டிற்குள் வரக்கூடாது. சுற்றி வந்து எடுக்க வேண்டும். இந்த ஒரு பாயிண்ட்டை வைத்து கனியையையும் ‘ஃபவுல் ஆட்டம்’ என்று கத்திய விக்ரமையும் சரியாக கார்னர் செய்தார் விசே. கனி செய்தது தவறு என்றால் சக நடுவராக இருந்த சாண்ட்ராவிற்கும் இதில் பங்குண்டு. ஆனால் அவர் ஒட்டுமொத்த பழியையும் கனியின் மீது தூக்கிப் போட்டு விட்டு ‘எனக்கு இதெல்லாம் தெரியாது” என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

அடிபட்ட நிலையிலும்கூட ஆட்டத்தில் தொடர்ந்த பாருவின் துணிச்சலை பாராட்டலாம். ஆனால் தனது அடாவடிகளை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களை மீண்டும் மீண்டும் ரீகேம் ஆட வைப்பது நியாயமா? பாருவின் அடாவடி காரணமாக நடுவர்களாலும் துணிச்சலாக முடிவை அறிவிக்க முடியவில்லை. அறிவித்தாலும் பாரு அதை மதிக்கவில்லை.
பிக் பாஸில் இப்படியும் நடப்பதுண்டு. அடாவடியாக நடந்து முடிந்தாலும்கூட இறுதியில் வெற்றி பெற்றவருக்கு ‘வாழ்த்துகள்’ என்று அறிவித்து விடுவார் பிக் பாஸ். அவருக்கு கன்டென்ட் வீடியோ ஃபுட்டேஜ் கிடைத்தால் போதும். எது நியாயம், எது நியாயமில்லை என்பதெல்லாம் அவருக்கு கவலை இல்லை.
பாருவிற்கு அடிபட்டது குறித்து மற்றவர்களுக்கு அப்போதைக்கு பதட்டம் ஏற்பட்டாலும் உள்ளுக்குள் ‘வேணும்டா இவளுக்கு’ என்றுதான் தோன்றியிருக்க வேண்டும். பெரும்பாலான பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். ஏனெனில் இதற்கான முழு காரணம் பார்வதியின் அடாவடித்தனமான செயல்கள்தான்.
“பாரு.. என்ன வேணா உங்களை ஹர்ட் பண்ணியிருக்கட்டும்.. ஒரு பொண்ணுக்கு அடிபடும் போது இப்படியா நடந்துப்பீங்க?” என்று விசே உபதேசம் செய்கிறார். எனில் போட்டியாளர்களாக காந்தி, புத்தர், இயேசு போன்ற நபர்களைத்தான் ஆட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். அவர்களால்தான் கொடூரமான எதிரிகளையும் கருணையுடன் நோக்க முடியும். இந்த ஆட்டத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.

ஒருவேளை இந்த ஆட்டத்தில் பாருவைத் தவிர்த்து வேறு யாருக்காவது அடிபட்டிருந்தால் போட்டியாளர்களிடமிருந்து உண்மையான அனுதாபம் வெளிப்பட்டிருக்கும். ஆனால் தனது மோசமான வார்த்தைகளாலும் உடல்மொழியாலும் பெரும்பாலான போட்டியாளர்களின் வயிற்றொிச்சலை பாரு சம்பாதித்து வைத்திருக்கிறார். தன்னுடைய வன்மத்திற்காக எதிராளியை எந்த லெவலுக்கும் இறங்கிச் சென்று லேபிள் ஒட்டக்கூடிய திறமை பாருவிற்கு உண்டு என்பதை விக்ரம், அரோரா விஷயத்தில் பார்க்க முடிகிறது.
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்பது குறள். பாருவிற்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் ஆறி விடும். ஆனால் அவர் சக போட்டியாளர்களிடம் பேசிய அவச் சொற்களும், கடுமையான தொனியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற நீண்ட காலமாகலாம்.
போட்டியாளர்களை பேச விடாமல் தடுக்கும் விசே
“நான் வேணுமுன்னு பண்ணலை. அவங்க பேசிய வார்த்தைகள். எக்ஸ்பிரஷன் என்னை டிரிக்கர் பண்ணிடுச்சு” என்று சபரி விளக்கம் சொன்னாலும் விசே அவற்றையெல்லாம் ஏற்பதாக இல்லை.
போட்டியாளர்களை பொலிடிக்கல் கரெக்ட்னஸ்ஸூடன் இப்படி வறுத்தெடுக்கிற விசே, host என்கிற முறையில் அவருடைய பங்களிப்பை ஒழுங்காக செய்கிறாரா? நிதானம் குறித்து மற்றவர்களுக்கு பாடமெடுக்கிற விசேவால் ஒரு சிறிய ஈகோ மோதலைக் கூட தாங்க முடியவில்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு போட்டியாளர்களை பேச விடாமல் ‘உக்காருங்க முதல்ல’ என்று அதட்டி உட்கார வைக்கிறார்.

‘ஸாரி.’ சொன்னாலும் பிரச்சினை. கையெடுத்து கும்பிட்டாலும் பிரச்சினை. விளக்கம் சொல்ல முற்பட்டாலும் பிரச்சினை. ‘இவரிடம் என்னதான் பேசுவது?’ என்று போட்டியாளர்கள் தவிப்பது நன்றாகவே தெரிகிறது. ஒரு விசாரணையில் இரு தரப்பு நியாயங்களையும் கேட்பதுதான் முறை. ஆனால் தான் சொல்ல விரும்புவதை நீண்ட நேரத்திற்கு பேசி வறுத்தெடுக்கும் விசே, போட்டியாளர்களுக்கு சிறிது கூட சுதந்திரம் தராமல் ரிங் மாஸ்டர் போல நடந்து கொள்வது முறையற்றது.
கனி, சபரி, எஃப்ஜே என்று க்ருப்பிஸம் உருவாகியிருப்பதும், அதற்கு சாதகமாக இயங்குவது முறையான ஆட்டமல்ல. இதை அவ்வப்போது விசே கண்டிப்பது சரியானது. இப்போது அதன் எதிர்முனையில் பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின், கம்ரூதீன் என்று கூட்டணி உருவாகத் துவங்கியிருக்கிறது. அன்பு கேங்கை உடைப்பதற்காக இவர்கள் ஒரு கேங்காக மாறத் துவங்கியிருக்கிறார்கள். பாருவின் அடாவடிகளை உள்ளே வரும் போது வெறுத்த சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் இப்போது பாருவின் கூட்டணியில் இணைந்திருப்பது சுவாரசியமான முரண்.
இந்த வாரத்தில் யார் வெளியேறுவார் என்பது வெளியாகியிருக்கிறது. இது அவசியமான எவிக்ஷன்தான். இனி ஆட்டம் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும். குறிப்பாக எஃப்ஜேவின் தலைமையில் வீடு எப்படி இயங்கும் என்பது ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. சபரி - பாரு சண்டை விவகாரத்தில் உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்




















