ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள...
காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவியர் மற்றும் மாணவர்களுக்காக தனித்தனியாக 4 சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 50 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வந்த விடுதியில் மாரிமுத்து என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் அங்கு தங்காமலும், சரிவர வேலைக்கு வராமலும் இருந்துள்ளார்.
தனக்குப் பதிலாக விடுதி பணிகளை கவனிக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் (23) என்ற அந்த விடுதியின் முன்னாள் மாணவரை மாதம் ரூ.5,000 ஊதியத்திற்கு மாரிமுத்து விதிகளை மீறி பணி அமர்த்தியுள்ளார்.

கடந்த ஒராண்டாக வார்டனாக அரவிந்தன் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில், திருப்பூர் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் நடத்தினர்.
அப்போது, வார்டனாக செயல்பட்டு வரும் அரவிந்தன் தங்களுக்கு ஆபாசப் படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், 6 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் 8-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரவிந்தன் தனது செல்போனில் ஆபாசப் படங்களைக் காட்டியும், மேலும் சில சிறுவர்களை தன்பாலின உறவுக்கு தொல்லை கொடுத்தும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சமூகநீதி விடுதிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவகுமார் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், தனது செல்போனில் ஆபாசப் படங்களைக் காட்டி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அரவிந்தனை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரவிந்தனை சட்டவிரோதமாக பணியமர்த்திய மாரிமுத்து மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
சமூகநீதி விடுதியில் சட்டவிரோதமாக வார்டனாக பணியமர்த்தப்பட்ட இளைஞர், அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



















