IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தி...
``ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' - விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி சாத்தியமானது?
இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் விருப்பப்பட்டு விவசாயத்திற்கு வருவது அதிகரித்து இருக்கிறது.
லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால் (29) படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல், எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்து விவசாயத்தில் இறங்கி இருக்கிறார்.

இது குறித்து அனுஷ்கா கூறுகையில்,
''கல்லூரியில் படிக்கும்போதே வேலை வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அலுவலகத்தில் இருந்து கொண்டு வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம், திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எனது குறிக்கோளை அடைவதற்காக சொந்த ஊருக்கு வந்தேன். எங்கள் வீட்டு மாடியில் தக்காளி போன்ற செடிகளை நட்டு வளர்த்தேன்.
அந்த செடிகளை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். இதை எனது தாயார் மற்றும் சகோதரனிடம் தெரிவித்தேன். எனது சகோதரன் என்னை ஊக்கப்படுத்தினார்.
இதையடுத்து நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் தோட்டக்கலை தொடர்பான படிப்பில் சேர்ந்து படித்தேன். அதோடு வேளாண் தொடர்பாக சில படிப்புகளையும் முடித்தேன்.
வழக்கமான விவசாயத்தில் போதிய மகசூல் கிடைப்பதில்லை. அதோடு பூச்சித் தாக்குதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பெரிய அளவில் இழப்பும் ஏற்படுகிறது. எனவே வழக்கமான விவசாயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

காளான் வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம், தோட்டக்கலை பற்றி படித்து கொண்டு, 2020-ம் ஆண்டு லக்னோவிற்கு வெளியில் மகன்லால் என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து விவசாயத்தைத் தொடங்கினேன்.
கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நிலையான மகசூல் மற்றும் தரமான விளைச்சலைப் பெறலாம் என்பதை அறிந்து பசுமைக்குடில் மூலம் விவசாயத்தை தொடங்கினேன்.
கட்டுப்படுத்தப்பட்ட காலநிலையை வழங்குவதற்கு GI பாலி-ஷீட்கள், நீர்ப்பாசன தெளிப்பான், ஒரு மின்விசிறி மற்றும் ஒரு பேட் அமைப்பு ஆகியவற்றை நாங்கள் நிறுவியுள்ளோம்.
இது வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் எங்கள் பயிர்கள் தீவிர வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.
முதல் அறுவடையில் எனக்கு 51 டன் வெள்ளரிக்காய் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் பயிரிட்டோம். ஒரு ஏக்கரில் 35 டன் மிளகாய் கிடைத்தது. அதனை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்தேன். இன்றைக்கு ஆண்டுக்கு 200 டன் மிளகாய் விளைவிக்கிறோம்.
இப்போது நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தின் அளவை அதிகரித்துள்ளோம். 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காய்கறிகள் விளைவிக்கிறோம்.
தற்போது கீரை, சுரைக்காய், முட்டைக்கோஸ், சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற பல கவர்ச்சியான காய்கறிகளைப் பயிரிடுகிறோம்.
அதோடு ஒரு நர்சரியையும் தொடங்கி நடத்தி வருகிறோம். இதில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. காய்கறிகளை பிக்பாஸ்கெட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி வருமானம் கிடைக்கிறது.

இது தவிர எங்களது காய்கறிகள் வாராணசி மற்றும் டெல்லிக்கும் செல்கின்றன. இப்போது எங்களிடம் 30 பேர் நிரந்தரமாக வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் விவசாயம் செய்துவிட்டு, இரண்டு மாதங்கள் நிலத்தை காலியாகவிட்டு வைக்கிறோம். பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயனங்களை பயன்படுத்துவதில்லை.
இப்போது எங்களது பகுதியில் கிடைக்கும் குடைமிளகாயை ‘மேடம் தோட்டத்து குடைமிளகாய்’ என்று அனைவரும் சொல்கின்றனர்.
இந்த விவசாயத்தை தொடங்கும் போது எனக்கு 24 வயதாக இருந்ததால் மக்கள் என்னை சந்தேகித்தனர். இப்படிப்பட்ட விவசாயத்தில் பொதுவாக பெண்கள் ஈடுபடுவதில்லை. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஆண்கள். எனது குடும்பம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.
மாடித் தோட்டம் வைத்திருக்கும் பெண்கள் அதனை விரிவுபடுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




















